Monday, December 28, 2015

மக்கள் இனிமேல் விஜயகாந்தை விஜயகாந்’தூ’ என்றே அழைப்பார்கள் : அன்புமணி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார்.    அப்போது விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.   அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார்.   உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விசாரித்தார் விஜயகாந்த்.

 நியூஸ் - 7 தொலைக்காட்சி என்று கேட்டுத்தெரிந்துகொண்டதும்,  ‘’உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா?என்று பதில் கேள்வி ழுப்பினார்.  அத்தோடு விட்டபாடில்லை.   கேள்வி கேட்ட நிருபரைப்பார்த்து, காரித்துப்புவது போல ‘தூ’ என்று கூறினார். இந்தச்சம்பவம் பத்திரிகை யாளர்களை அதிர்ச்சிய டையச்செய்தது.

இது குறித்து தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.  அவர்,  ‘’  மக்கள் இனிமேல் விஜயகாந்தை ‘விஜயகாந்தூ’ என்றே அழைப்பார்கள் என கூறினார்.

அவர் மேலும், ’’கலைஞர், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு  ஒரு கோரிக்கை.  விஜயகாந்தை கூட்டணிக்கு அழைப்பவர்கள் தூரமாக நின்றே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

இணைந்த கைகள்… விஷால்-கார்த்தி இணையும் புதுப்படம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக இணைந்த இளைஞர் அணி தற்போது தங்களது பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒரு படத்தில் இணைந்து நடித்து அதன் மூலம் வரும் லாபத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக உதவுவதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது அதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 1990ஆம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘இணைந்த கைகள்’ படத்தை ரீமேக் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் அப்போது ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி ஹிட்டடித்தது.

ஆபாவாணன் தயாரித்த இப்படத்தை என் கே விஸ்வநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, ஸ்ரீவித்யா, சார்லி மற்றும் முக்கிய வேடத்தில் நாசர் நடித்திருந்தார்.

இப்படத்தின் உரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். எனவே விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

சட்டசபையில் பேசாத நீங்கள் ஊடகத்தாரை துப்புவீர்களா? பத்திரிகையாளரின் 13 கேள்வி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியை வழங்கும் செந்தில் தனது முகநூல் பக்கத்தில், விஜயகாந்தின் நடவடிக்கைகள் குறித்து சில நியாயமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் முன்னனி நடிகராக இருந்த திரு.விஜயகாந்த் அவர்கள் தொடர்ந்து ஊடகங்களையும் தமது கட்சியினரையும் வார்த்தைகளாலும், அவ்வப்போது கைகளாலும் தாக்கி வருவது வாடிக்கையாகிப் போன நிலையில் அதன் உச்ச கட்டமாக காறித் துப்பியிருக்கிறார்...அது தொடர்பான பதிவே இது...

முதலில் பதிவிற்கு போவதற்கு முன்னால் பதிவை முழுமையாக தெளிவாகப் படிக்காமல் ஆதரித்தோ விமர்சித்தோ பதிவு செய்வதை தயவு செய்து தவிர்க்கவும்..முழுமையாகப் படித்து விட்டு கருத்துக்களை பதியுங்கள்..

இரண்டாவதாக இந்த பதிவு ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ அனைவரும் நேர்மையானவர்கள் என்றோ மிகச்சரியாகவே எல்லா இடங்களிலும் நடந்து கொள்கிறார்கள் என்றோ ஆதரிக்கும் நோக்கத்திலான பதிவும் அல்ல...

ஊடகங்களின் மீது வேறேதேனும் நியாயமான கோபங்கள் உள்ளவர்கள் அந்த காரணத்திற்காக விஜயகாந்தின் செயலை ஆதரிப்பது நியாயம்தானா என்ற கேள்விகளையும் முன் வைத்தே பதிவைத் தொடங்குகிறேன்..

1. திரு.விஜயகாந்திடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்டாலும், யார் கேட்டாலும் அடுத்த கேள்வி, நீ எந்த டி.வி என்பதே அவரின் எதிர்வினையாக உள்ளது.. வேறு எல்லா ஊடகங்களும் விஜயகாந்திற்கு எதிராகத்தான் இருப்பதாக அவர் நினைத்தால் அவர் கேப்டன் டி.விக்கு மட்டும் பேட்டி கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாலம் பொது வெளியில் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம்..

2. எந்த கேள்வி கேட்டாலும், ஜெயலலிதாவிடம் கேட்டியா என்று எதிர் கேள்வி வைக்கிறார். செல்வி.ஜெயலலிதா அவர்கள் சமீப காலமாக ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே...ஊடவியலாளர்களை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்வியையும், விமர்சனத்தையும் தொடர்ந்து பெரும்பாலான ஊடகங்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன..

3. செல்வி.ஜெயலலிதா ஊடகங்களை சந்திக்காத சூழலில், அ.தி.மு.க.வின் சார்பாக விவாதங்களில் கலந்து கொள்பவர்களிடம் கடுமையான கேள்விகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து நியுஸ் 7 தமிழ் செய்தியாளர் அமைச்சர் வளர்மதியிடமும், சென்னை மேயரிடமும் நேரலையில் கேள்விகளை முன் வைத்ததும் அதற்கு மேயர் பதில் சொல்லாமல் தவிர்த்ததும் அதை கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பி கடுமையான கேள்விகளும் முன் வைக்கப்பட்டன...( நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் யு டியுபில் கேள்வி நேரம் நிகழ்ச்சியைப் பார்க்கலாம்..)

4. ஊடகங்கள் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்பதில்லையே என்று காறித் துப்பிய திரு.விஜயகாந்த் நடத்தி வரும் கேப்டன் டி.வி எத்தனை முறை செல்வி .ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது என்று சொல்ல முடியுமா...ஏன் கேள்வி எழுப்பவில்லை கேப்டன் டி.விக்கும் விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிடம் கேள்விகளை முன் வைக்க அச்சமா என்பது போன்ற எதிர்கேள்விகளுக்கு பதில் தருவாரா விஜயகாந்த்.

5. தங்கள் தொலைக்காட்சியில் அது போன்ற கேள்விகள் எதுவும் கேட்கப்படாத பட்சத்தில் நியுஸ் 7 தமிழ் செய்தியாளர், அமைச்சரிடமும், மேயரிடமும் கேள்விகளை முன் வைத்த பிரத்யேக காணொளியை தொடர்ந்து கேப்டன் டி.வியில் ஒளிபரப்பினார்களே..விஜயகாந்த் அதைக் கூடவா பார்க்கவில்லை...

6 . அது சரி அவர்தான் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கேள்வி எழுப்பிய போதே அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்க..நான் இன்னும் பேப்பர் படிக்கல என்று கூறியவர் ஆயிற்றே அவர் கேப்டன் டி.வி பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்..

7. ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக குற்றம் சாட்டி தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினரைப் பார்க்க வந்த விஜயகாந்திடம் நியுஸ் 7 செய்தியாளர் சகோதரி. தமிழரசி, இந்த விவகாரத்தில் பிரதமர் ஆந்திர மாநிலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிப்பதைக் குறித்தும், பிரதமர் இது குறித்து எந்தக் கருத்தும் கூறாதது குறித்தும் கேட்ட போது, அப்போதும் நீ எந்த டி.வி. என்று எதிர் கேள்விதான் கேட்டார் விஜயகாந்த்...( அப்போது அவர் பா.ஜ.க.கூட்டணியில் இருந்தார்.. இப்போதும் தங்கள் அணியில் இருப்பதாகத்தான் மாண்புமிகு. பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கூறுகிறார்கள்)..

8. அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்த காலத்தில் அ.தி.மு.க.குறித்து விஜயகாந்த் விமர்சிக்க மாட்டார்.. கேப்டன் டி.வி.யும் விமர்சனம் செய்யாது...பின் அங்கிருந்து வெளியேறி பா.ஜ.க.உடன் கூட்டணி வைத்த போது பா.ஜ.க.குறித்து விமர்சிக்க மாட்டார்...வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கிறாரோ அவர்களை அதன் பிறகு விமர்சிக்க மாட்டார்...

ஆக தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகின்ற போது நீங்கள் ஆதரிப்பவர்களை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும், நீங்கள் எதிர்த்தால் ஊடகங்கள் எதிர்க்க வேண்டும் என்றும் நினைப்பதுதான் நடுநிலையா? தன்னையும் தான் சார்ந்திருக்கும் கூட்டணியையும் ஆதரிப்பது மட்டுமே ஊடகங்களின் பணியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது ?

9. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் விஜயகாந்த், சில ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறும் செய்தியாளர்களைப் பார்த்து கேட்கிறார் நீங்கள் வேறு ஊடகங்களுக்கு மாறினால் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா என்று ? இந்த கேள்வியைக் கேட்பதற்கான தார்மீக உரிமையை இழந்தவராகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா ?

10. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவாராக நீங்கள், ஊடகங்கள் செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை ஏன் சட்டப்பேரவையில் சென்று எழுப்புவதில்லை...ஒரு முறை நாக்கைத் துருத்தி ஆவேசமாக பேசியதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதா..சட்டப்பேரவையில் என்னை பேச விட மறுக்கிறார்கள் அதனால் நான் சட்டப்பேரவைக்கு செல்வதில்லை என்று நீங்கள் கூறினால் அது நியாயம்.

அதையே, தமிழக முதலமைச்சர் ஊடகவியலாளர்களை சந்திப்பதில்லை.சந்தித்தால் கேள்விகளை நிச்சயம் கேட்போம் என்று ஊடகவியலாளர்கள் சொன்னால் அது அநியாயமா ? அதற்கு நீங்கள் காறித் துப்புவீர்களா..

11. மறைந்த நடிகை மஞ்சுளாவின் மரணத்திற்கு சென்று விட்டு வந்த பின் செய்தியாளர்களிடம் நீங்கள் கூறியதையும், ஊழல் மிகவும் நல்லது என்று திருப்பதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதையும், உங்கள் கட்சியின் வேட்பாளர் பெயரையே தவறாகச் சொன்னதைச் சுட்டிக்காட்டிய வேட்பாளரை தாக்கியதையும் பார்த்துப் பழகிப் போன தமிழகத்திற்கு நீங்கள் காறித் துப்பியது ஒன்றும் புதிதல்ல...

12. நிறைவாக, உங்களைத் தவிர வேறு யாரையும் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கவோ, விவாதங்களில் கலந்து கொள்ளவோ தடை விதித்திருக்கும் நீங்கள் ஊடகவியலாளர்கள் தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பாததைக் குறித்து கேள்வி எழுப்புவது முரணாகத் தெரியவில்லையா..??

13. ஊடகங்களின் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை தாரளமாக வையுங்கள்..ஆனால் அவை மட்டுமல்லா யார் மீதான விமர்சனமாக இருப்பினும் அது நாகரீகமானதாக இருத்தல் அவசியம் ...அவ்வாறு இல்லாத பட்சத்தில் திரு.விஜயகாந்த் அவர்களே சமூகம் உங்களையும் தூ.......ற்றக் கூடும்...

ஜல்லிக்கட்டு தடை ஏன்? யாரால்? எப்படி? நடை முறை சாத்தியம் என்ன?

தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தடை செய்யப் பட்டுள்ளது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி, ‘வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது. அதன் படி பல விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவைகளை பொது இடங்களில் துன்புறுத்துவது குற்றமானது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை சிங்கம்,புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை நாம் நம் பகுதிகளில் ‘சர்க்கஸ்’ மூலம் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் வனவிலங்குகளின் ஆர்வலர்களின் செயல்பாடுகளால், கடந்த சில ஆண்டுகளாக இந்த சர்க்கஸ்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் இடம்பெறுவதில்லை.

2008 ம் ஆண்டு முதலாக, தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு, பல்வேறு வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதை எதிர் கொள்ள ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” ஐ கொண்டு வந்தது தமிழக அரசு. ஒவ்வொரு முறையும் ஒரு சில கட்டுப்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடைபெற்றன . 2011ம் ஆண்டு ஜூலை மாதம், அன்றைய காங்கிரஸ் அரசில் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே இருந்த பட்டியலில் “காளை” புதிதாகச் சேர்க்கப்பட்டது. மேலும் பிராணிகள் வதை சட்டம் பிரிவு 22 ன் கீழ் ஆணையும் இடப்பட்டது.

இதை தொடர்ந்து விலங்குகளுக்கான நெறிமுறைகள் கொண்ட மக்கள் அமைப்பு (PETA) ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரியும்,”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” ஐ அகற்ற கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, உடனடி தடையையும் கேட்டது. ஆனால், உச்ச நீதி மன்றம் காளைகளை துன்புறுத்தாது, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் இந்த நிகழ்சியில் பங்கேற்பவர் களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற தமிழக அரசு மற்றும் வாதங்களையும், உத்தரவாதங்க ளையும் ஏற்று கொண்டு சில கட்டுபாடுகளுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்தது. 2013 ம் ஆண்டு நடை பெற்ற ஜல்லிக்கட்டில் பிராணிகள் நல வாரியம் மற்றும் சில அமைப்புகள், ஜல்லிக்கட்டு நடந்த அத்துனை இடங்களிலும் நடைபெற்ற நிகழ்சிகளை நிழற்படம் மற்றும் கானொளி யில் பதிவு செய்து, காளைகளுக்கு இழைக்கப்பட்ட பல கொடுமையான காட்சிகள் குறித்த நீண்ட பதிவினை செய்தது.

மேலும் தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவ்வாறெல்லாம் மீறப்பட்டன என்பதை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் மே மாதம் 7 ம் தேதி, 2014ம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டை’ தடை செய்தது. மேலும் தமிழக அரசின் ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டத்தை நீக்கியது. இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயராம் ரமேஷ் அவர் கள் ‘காட்டுமிராண்டி தனமான’ இந்த வழக்கம் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதிலும் அரசியல் செய்ய நினைத்த காங்கிரஸ் அரசு இந்த வழக்கின் கடைசி தருணத்தில் ‘காளைகளை’ பட்டியலிலிருந்து நீக்குவதாக சொன்ன போது, நீதிமன்றம் கடுமையாக அரசை கண்டித்ததோடு, இனி இது குறித்து விலங்குகள் நல வாரி யத்தை கலந்தாலோசித்தே இது போன்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது.

இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி பிரிவு 21,22 ன் படி, பிரிவு 3ன் கீழ் 11 (1) (a) மற்றும் (o) மற்றும் இந்திய அரசியலைமைப்பு சட்டம் 51 A (g) மற்றும் (h) படி காளைகளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் தமிழக அரசின் ,”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டமானது இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 க்கு எதிர்மறையாக அல்லது முரணாக உள்ளது என்று கூறி அதற்கு பல்வேறு உதாரணங்களை மேற் கோள் காட்டியது. மேலும் தமிழக அரசின் இந்த சட்டம் விலங்குகளின் நலன் குறித்து உருவாக்கப் படவில்லை என்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டது.

மேலும் பிராணிகள் நலன் குறித்த ஒவ்வொரு விவகாரத்தையும் பிராணிகள் நல வாரியம் முன்னின்று, அரசுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தை சீரிய வகையில் விரைவாக செயல்படுத்த அந்த வாரியம் முயற்சிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்தியா முழுவதும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இப்போதைய நிலை?

பிராணிகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவதாக உறுதி கூறிய ஏற்பாட்டாளர் கள் அதை மீறியதாலும், கட்டுப்பாடுகளை செயல்படுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்த தமிழக அரசு செய்ய தவறியதாலும், அந்த விதி மீறல் களை ஆதார பூர்வமாக நிரூபித்த காரணத்தினாலும் தான் இந்த பிரச்சினை எழுந்தது என்பதை நாம் உணர வேண்டும். இந்த சூழ்நிலையில், தமிழகத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் (பாஜக உட்பட) ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாலும், சட்ட ரீதியான அமைப்பான பிராணிகள் நல வாரியம், காளையை பட்டியிலில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது. தொடர்ந்து மத்திய அரசு அந்த அமைப்பினருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறது. மேலும் அந்த வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றம் அரசின் கோரிக்கையை ஏற்காது என்பதை தெளிவாக்கியிருக்கிறது.

சட்ட திருத்தம் கொண்டு வரலாம் என்றாலும், சட்ட ரீதியான விலங்குகள் நல அமைப் பினரின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்றே கொண்டு வர முடியும் என்பதையும், ஒரு வேளை அதை செய்தாலும் ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான காங்கிரஸ் கட்சியினர் மாநிலங்களைவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது செய்வார் கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அது ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே இருக்கும் என்பதும், பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இதை எதிர்க்கும் என்பதும், மாநிலங் களவையில் இதை நிறை வேற்ற காங்கிரஸ் மறுக்கும். மேலும், அவசர சட்டம் என்பது ‘ஜனநாயக விரோதம்’ என்று காங்கிரஸ், தி மு க, பாமக, ம தி மு க போன்ற கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக சொல்லிவருவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

ஆக, ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு சட்ட ரீதியாக வழி வகை செய்ததோடு, அதை மீண்டும் அரங்கேற்ற அரசியல் ரீதியாக பல்வேறு முட்டுக்கட்டைகளை காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளது குறித்து மற்ற கட்சிகள் கேள்விகள் எழுப்பாதது ஏன்? காங்கிரஸ் கட்சி ஏன் இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியது? நம் கலாசாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலா? பண்பாட்டை தூக்கி எறிய வேண்டும் என்ற முனைப்பு ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வந்தது? என்ற கேள்விகள் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும். பாரதத்தின் பண்பாட்டை, கலாசாரத்தை ஒழிக்க காங்கிரஸ் ஏன் முனைந்தது ? முனைகிறது?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்

2015 - திரைப்படத் துளிகள்...! ஓர் பார்வை



தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில் இந்தாண்டும் வெளியான படங்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. 200 படங்கள் வெளிவந்தாலும் வெற்றி படங்களாக அமைந்தது என்னவோ 10 முதல் 15 படங்கள் வரை மட்டும் தான். இந்த 200 படங்களில் ஒவ்வொரு படமும் ஒருவித சிறப்பு பெற்றவை. அதில் சில படங்களின் பற்றிய சிறப்பு துளிகள் இதோ...

  • ஒற்றை எழுத்து தலைப்புடன் வெளிவந்த படம் ஐ.
  • நீளமான தலைப்புடன் வெளிவந்த படங்கள் “மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க, கருத்தப் பையன், செவத்தப் பொண்ணு, புரியாத ஆரம்பம் புதிதாக ஆரம்பம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலப்பா, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்”.
  • பெயர்களைக் குறிக்கும் தலைப்பில் வெளிவந்த படங்கள் “தரணி, கதிர் - கஞ்சா - கருப்பு, மண்டோதரி, திலகர், சார்லஸ் - ஷபீக் - கார்த்திகா, கொம்பன், காஞ்சனா 2, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல், மாசு என்கிற மாசிலாமணி, காத்தம்மா, ரோமியோ ஜுலியட், லொடுக்கு பாண்டி, சாம்பவி, பேபி, பரஞ்சோதி, பாலக்காட்டு மாதவன், ஆவி குமார், கலை வேந்தன், குரு சுக்ரன், மாரி, பாகுபலி, அகிலா முதலாம் வகுப்பு, பானு, மாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சதுரன், ஆத்யன்.
  • மனிதப் பெயர்களில் இல்லாமல் வெளியான திரைப்படங்கள் எலி, பாயும் புலி, புலி.
  • எண்களையும் சேர்த்து படத் தலைப்பாக வைத்து வெளிவந்த படங்கள் “36 வயதினிலே, 9 திருடர்கள், 49 , 10 எண்றதுக்குள்ள, 144.
  • இரண்டாம் பாகமாக வந்த திரைப்படங்கள் புலன் விசாரணை 2, காஞ்சனா 2, பசங்க 2.
  • மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆகி வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைந்த படங்கள் பாபநாசம் (த்ரிஷ்யம் - மலையாளம்), 36 வயதினிலே (How Old Are You - மலையாளம்).
  • 2014ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை வென்று இந்த ஆண்டில் வெளிவந்த படங்கள் காக்க முட்டை, குற்றம் கடிதல்.
  • மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்து படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்கள் ராஜமௌலி (பாகுபலி), ஜீது ஜோசப் (பாபநாசம்), ரோஷன் ஆன்ட்ரூஸ் (36 வயதினிலே).
  • சிறுவர், சிறுமியர்கள் முன்னிலை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படங்கள் காக்கா முட்டை, கமர கட்டு, பசங்க 2.
  • எந்த ஒரு இயக்குனரும் ஒரு படத்திற்கு மேல் இரண்டாவது படத்தை இந்த ஆண்டில் இயக்கவில்லை என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்.
  • நாயகனாக இருந்து தயாரிப்பாளராக மாறி 36 வயதினிலே, பசங்க 2 ஆகிய படங்களைத் தயாரித்தார் நடிகர் சூர்யா.
  • இயக்குனர், நடிகராக இருந்து இசையமைப்பாளராக இசை படத்தில் அறிமுமானார் எஸ்.ஜே.சூர்யா.
  • பெண் இயக்குனர்கள் இயக்கி வெளிவந்த படங்கள் வை ராஜா வை (இயக்கம் - ஐஸ்வர்யா தனுஷ்), மூணே மூணு வார்த்தை (இயக்கம் - மதுமிதா).
  • அண்ணன்கள் இயக்க தம்பிகள் நாயகர்களாக நடித்த படங்கள் யாகாவராயினும் நா காக்க (சத்ய பிரபாஸ் - ஆதி), தனி ஒருவன் (மோகன்ராஜா - ஜெயம் ரவி), தாக்க தாக்க (சஞ்சீவ் - விக்ராந்த்), யட்சன் (விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா).
  • அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். டார்லிங், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ராஜதந்திரம், கொம்பன், காக்கா முட்டை, காவல், இது என்ன மாயம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஈட்டி ஆகிய 9 படங்கள் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வெளிவந்த படங்கள்.
  • இசையமைப்பாளர்களாக அறிமுகமாக இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹிப்ஹாப் தமிழா. ஆம்பள படத்தில் அறிமுகமாகி இந்த ஆண்டில் இன்று நேற்று நாளை, தனி ஒருவன் ஆகிய படங்களுக்கும் இசையமைத்தவர்.
  • இந்த ஆண்டில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து ஐ, ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் மட்டுமே வெளிவந்தது.
  • இளையராஜா இசையமைத்து டூரிங் டாக்கீஸ் என்ற ஒரே படம் மட்டுமே வெளியானது.
  • இசையமைப்பாளராக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் வானவில் வாழ்க்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
  • இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்தவர் ஆர்யா. புறம்போக்கு என்கிற பொதுவுடமை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இன்று நேற்று நாளை, இஞ்சி இடுப்பழகி.
  • ஜெயம் ரவி நடித்து ரோமியோ ஜுலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன், பூலோகம் ஆகிய நான்கு படங்கள் வெளிவந்துள்ளன.
  • அஜித் நடித்து என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களும் விஷால் நடித்து ஆம்பள, பாயும் புலி ஆகிய படங்களும் தனுஷ் நடித்து அனேகன், மாரி, தங்கமகன் ஆகிய படங்களும் வந்துள்ளன. விஜய் நடிப்பில் புலி படம் மட்டுமே வந்தது.
  • இந்த ஒரே ஆண்டில் நகைச்சுவை நடிகர்கள் நாயகர்களாக நடித்த 6 படங்களும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமே இப்படித்தான் (சந்தானம்), எலி (வடிவேலு ), லொடுக்கு பாண்டி (கருணாஸ்), பாலக்காட்டு மாதவன் (விவேக்), மாங்கா (பிரேம்ஜி அமரன்), 49 ஓ (கவுண்டமணி).
  • கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டில் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்கள் வெளிவந்தன.
  • ரஜினிகாந்த் நடித்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட வெளிவரவில்லை.
  • 2015ல் அதிகப் படங்களில் நடித்த நாயகி நயன்தாரா. இவர் நடித்து நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன், மாயா, நானும் ரௌடிதான் ஆகிய ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன.
  • ஹன்சிகா நடித்து ஆம்பள, ரோமியோ ஜுலியட், வாலு, புலி ஆகிய நான்கு படங்கள் வெளிவந்துள்ளன. த்ரிஷா நடித்து என்னை அறிந்தால், சகலகலா வல்லவன், தூங்காவனம், பூலோகம் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
  • 2015ல் அதிகப் படங்கள் வெளிவந்த மாதம் மார்ச் மாதம். இந்த மாதத்தில் மட்டும் 31 படங்கள் வெளிவந்துள்ளன. குறைந்த படங்கள் வெளிவந்த மாதம் டிசம்பர். இந்த மாதத்தில் 8 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.
  • தயாரிப்பு நிறுவனங்களில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் டார்லிங், கொம்பன், மாஸ் ஆகிய திரைப்படங்களையும், உண்டர்பார் பிலிம்ஸ் காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடிதான் ஆகிய படங்களையும், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் எனக்குள் ஒருவன், இன்று நேற்று நாளை, 144 ஆகிய படங்களையும் தயாரித்து அதிகப் படங்களைத் தயாரித்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • , என்னை அறிந்தால், அனேகன், பாகுபலி, காக்கி சட்டை, தனி ஒருவன் ஆகிய படங்கள் 100 நாள் படங்களாக அமைந்தன. கொம்பன், ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, 36 வயதினிலே, காக்கா முட்டை, ரோமியோ ஜுலியட், பாபநாசம், மாரி, மாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, நானும் ரௌடிதான், வேதாளம் ஆகிய படங்கள் 50 நாளைக் கடந்த படங்கள்.