Friday, December 4, 2015

உறுமீன் திரை விமர்சனம் -திமிங்கலத்தை காட்டி மிரட்றாய்ங்கப்பா!

தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை… ஜென்ம பகை… என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. மீனின் ருசி அபாரம்!

சரித்திர காலத்தில் துவங்குகிறது கதை. கூடவே இருந்து குழி பறிக்கும் கருணாவால் (?) தண்டனைக்குள்ளாகும் புரட்சி வீரன், (பாபி சிம்ஹா) தூக்கு மேடையிலிருந்து தப்பி ஓடுகிறான். பின் தனது பராக்கிரமங்களையும், துரோகி கருணாவை பற்றியும் ஒரு புத்தகம் எழுதி, அதை தன்னுடனே சேர்த்து புதைத்தபடி உயிரை மாய்த்துக் கொள்கிறான். மறுஜென்மம் துவங்குகிறது. எப்படியோ அந்த புத்தகம் அங்கும் வந்து சேர்கிறது. உரியவர்களை தேடியாவது செல்வேன் என்ற வைராக்கியத்தோடு தொடர் பயணம் நடத்தும் அந்த புத்தகம், மறுஜென்மம் எடுக்கும் பாபிசிம்ஹாவின் கைக்கு வர, வந்த நேரத்திலிருந்து வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஓருவழியாக அர்த்தம் புரிகிறது அவருக்கு.

முன் ஜென்ம பகையாளி கருணாவை (கலை) கொல்லக் கிளம்புகிறார். கதை நகரும்போதே இருவரது பகையையும் வலுவாக்குகிற விதத்தில் இன்னும் ஒரு ஜென்ம பிளாஷ்பேக்கை சொல்கிறார் டைரக்டர். “விடாதே, சீக்கிரம் அவனை போட்டுத்தள்ளு” என்கிறளவுக்கு ‘டெம்ப்ட்’ கிளப்பும் அந்த பிளாஷ்பேக்கும் அதை தொடரும் க்ளைமாக்ஸ் பைட்டும் ரசிகனை வாயடைக்க வைக்கிறது. டாக்கிங், மேக்கிங் என்று தமிழ்சினிமாவில் ஒரு ஆக்ஷன் த்ரில்லரை இவ்வளவு ஸ்டைலிஷாக சொன்னதற்காகவே சக்திவேல் பெருமாள்சாமியின் கனத்த சரீரத்தை ஆரத்தழுவி ‘ஆஹாவ்’ எனலாம்!

படம் நெடுகிலும் நமக்கு பழக்கமில்லாத டீ அரசியலை தொட்டுவிட்டு போகும் இயக்குனர், ஒரு குறிப்பிட்ட மதத்தின் போலித்தனத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோலுரித்திருப்பது யாரும் எதிர்பாராத தைரியம்தான்! “வேட்டையாடுறேன்னு புலிகளோட எண்ணிக்கையை வேணும்னா குறைக்கலாம். ஆனால் புலிகளை அழிக்கவே முடியாது” என்கிற வசனம், திணிக்கப்பட்டதாக இல்லாமலிருப்பதே டைரக்டரின் சாமர்த்தியத்தை சொல்லும் பலே டச்!

ஒரு கோபக்கார இளைஞனின் கேரக்டருக்கு சர்வ பொருத்தமாக பிக்ஸ் ஆகிறார் பாபிசிம்ஹா. சற்றே முசுடு போன்ற அவரது முகப்பொருத்தம் கதைக்கு இன்னும் இன்னும் நியாயம் சேர்க்கிறது. போகிற இன்டர்வியூலெல்லாம் பெயில் ஆகி, ஒரு ஹெச் ஆர் தலையில் பீர் பாட்டிலால் போட்டுத்தள்ளும் அவர், அதற்கப்புறம் அதே மிரட்டலை வைத்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்வதெல்லாம் கூட பிரச்சனையில்லை. அவ்ளோ பேசும் மனோபாலாவுக்கு ஒரு டயலாக் கூட இல்லையேய்யா… பச்! அந்த ஆங்கிலேயர் கால முன் ஜென்ம எபிசோடில் பாபிசிம்ஹா செம ஸ்மார்ட் ! கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆங்கிலேயனின் சட்டையை உரிப்பதற்கு தியேட்டர்களில் கைதட்டல் ஷ்யூர்.

அதான் நிஜத்திலேயே சேர்ந்தாச்சே என்று நினைத்திருக்கலாம். கொஞ்சூண்டுதான் வருகிறார் ரேஷ்மிமேனன். ஏன் விழுந்தார் பாபி என்பதை நிமிஷத்தில் புரிய வைக்கிறார்.

மூன்று ஜென்மத்திலும் வில்லன் மெட்ராஸ் புகழ் கலைதான்! ஒரு டீ கடைப் பையன் எப்படி அவ்வளவு பெரிய ஆளாக உயர்கிறான் என்பதையும், மெல்ல மெல்ல உச்சத்துக்கு போகும் அவரது குரூரத்தையும் ரசிக்கலாம். பெருங்கூச்சல் வில்லன்களையே பார்த்து பழகிய கண்களுக்கு கலையின் வில்லத்தனம், இன்ப ஷாக்தான்!

பாபிசிம்ஹா, கலை சம்பந்தப்பட்ட ஃபைட்தான் படத்தின் மிக மிக சூடான பகுதி. பைட் மாஸ்டர் கணேஷ் குமாருக்கு ஆளுயர வாள் கொடுத்து கவுரவிக்கலாம். ஒவ்வொரு பைட்டும் அப்படியொரு கம்போசிங். பாபிசிம்ஹாவின் முரட்டுக் கண்கள் அந்த ஒவ்வொரு அடியையும் இன்னும் கூர்மையாக்குகிறது. பலே!

அச்சு ராஜாமணி இசையில் அந்த ‘ஏ உமையாள்’ பாடல் ஒருவித ராக சுவை என்றால், பின்னணி இசை அப்படியே ஸ்தம்பித்து உட்கார வைத்துவிடுகிறது. பொருத்தமான கதைக்கு அதைவிட பொருத்தமான தேர்வு. ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும் ஸ்பெஷல்!



புகுந்ததே தெரியாமல் புகுந்து கொள்ளும் முன்ஜென்ம எபிசோடும், சற்றே வித்தியாசமான படத்தின் நடையும் எடிட்டர் சான் லோகேஷின் கை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்கிறது.


உறுமீன் என்று நினைத்து உள்ளே போனால், அட… திமிங்கலத்தை காட்டி மிரட்றாய்ங்கப்பா!

போயஸ் தோட்டத்தின் புதிய இளவரசன்

போயஸ் தோட்டத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் கோலோச்சுவார். இப்போது கார்டனின் இளவரசன், விவேக் ஜெயராமன். சசிகலாவின் அண்ணியான இளவரசியின் மகன். 25 வயதாகும் விவேக் ஜெயராமன், போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார மட்டத்தில் `விவேக் ஜெயராமன்' என்ற பெயர் பயபக்தியுடன் உச்சரிக்கப்படுகிறது. `லக்ஸ்' திரையரங்கை நடத்திவரும் `ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விவேக். `அங்கே மட்டும் அல்ல, கார்டனிலும் இவர்தான் முதன்மை செயல் அதிகாரி’ என்கிறார்கள்.

காதில் சிறிய கம்மல், ஃபேஸ்புக்கில் அரட்டை, விலை உயர்ந்த டுகாட்டி பைக், ஏராளமான நண்பர்கள்... என விவேக்கின் உலகம் இந்தத் தலைமுறைக்கானது. இவை எல்லாம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைதான்.

ஜெயலலிதாவின் பார்வைபட்ட தினத்தோடு விவேக்கின் ஜாலி உலகம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது முழுக்க முழுக்க ஜாஸ் சினிமாஸில் விவேக் செம பிஸி. ஜாஸ் சினிமாஸ்  திரையரங் குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது இவரது வேலை. ஜாஸ் சினிமாஸ் விவேக்கின் கைக்கு வந்ததும் நீண்ட நாள் மூடிக்கிடந்த `ஐமேக்ஸ்’ திரையரங்கும் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணமாக 120 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், ஜாஸ் சினிமாஸின் அங்கமான ஐமேக்ஸில் டிக்கெட் விலை 360 ரூபாய்.

கார்டனுக்குள் எப்படி வந்தார் விவேக்?

ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஒருநாள் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். ஜெயராமனின் மனைவி இளவரசி... கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக் என மூன்று குழந்தைகளோடு தனித்து விடப்பட்டார். இதில் ஜெயலலிதா செம அப்செட். `கணவர் இல்லாம ஏன் கஷ்டப்படறே? கார்டனுக்கு வந்துடு' என இளவரசிக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார் ஜெயலலிதா. கைக்குழந்தையாக இருந்தபோதே அப்பாவை இழந்ததால், விவேக் மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தார் ஜெயலலிதா.   அவர் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்த்தார். ஆனால், தான் அதிகார மையத்தில் இருக்கிறோம் என எந்த இடத்திலும் விவேக் காட்டிக்கொண்டது இல்லை. பள்ளிக்காலத்திலும் சரி... கல்லூரிப் படிப்பிலும் சரி... `நன்றாகப் படிக்க வேண்டும்' என்பதுதான் அவரது கனவாக இருந்திருக்கிறது.

கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார். கல்லூரிப் படிப்புக்கு விவேக் தேர்ந்தெடுத்தது ஆஸ்திரேலியா. 2011-ம் ஆண்டு Macquarie Graduate School of Management என்னும் கல்லூரியில் இளங்கலை பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து முடித்தார். பிறகு புனேவில் உள்ள சிம்பயாஸிஸ் கல்லூரியில் 2013-ம் ஆண்டு எம்.பி.ஏ மார்க் கெட்டிங் முடித்தார். அப்போதே ஐ.டி.சி நிறுவனத்தில் இன்டன்ஷிப் செய்தவர், படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ரீஜினல் மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டராக வேலைக்குச் சேர்ந்தார்.  இவரது பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் 'வளர்ப்பு மகன்' போல வளர்த்தது மன்னார்குடி திவாகரன். இவர், சசிகலாவின் தம்பி.

ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை

இந்த நேரத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பெங்களூருவில் சிறைக்குள் இருந்த ஜெயலலிதாவுக்குத் தேவையான உணவு, மருந்து, ஆடைகள் போன்றவற்றைக் கொடுக்க, நம்பிக்கையான ஆள் ஒருவர் வேண்டும். `வெளியில் இருந்து ஒருவரை நம்பி இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது’ என யோசனையில் ஆழ்ந்த ஜெயலலிதாவுக்கு, விவேக் ஞாபகம் வந்தது. ஜெயலலிதா சிறைக்குள் இருந்த 21 நாட்களும் மருந்துப் பொருட்கள், உணவு... என எல்லா தேவைகளையும் நிறைவேற்றியவர் விவேக்.

அதுவரை தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தவருக்குத் தேடிவந்தது கார்டன் வேலை. ஜெயலலிதாவிடம் அவருக்குச் சமமாக ஆங்கிலத்தில் பேசும் மன்னார்குடி வாரிசு இவர் மட்டும்தான் என்பதால், அம்மாவின் செல்லப் பிள்ளையாக மாறினார் விவேக்.

ஜாமீன் பெற்று ஜெயலலிதா மீண்டும் கார்டன் வந்ததும், விவேக்கிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டன. அதில் முக்கியப் பதவி, ஜாஸ் சினிமாஸ்  சி.இ.ஓ. கிண்டி தொழிற்பேட்டையில் இருக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் இப்போது படு பிஸி. தினம் தினம் சினிமா பிரமுகர்களைச் சந்திப்பது, புதிய படங்களை விலைக்கு வாங்குவது, ஜெயா டி.வி-க்கு சேட்டிலைட் உரிமம் வாங்கிக் கொடுப்பது... என ஆல் இன் ஆல் விவேக்தான். சுமார் 400 பேர் வரை வேலைபார்க்கும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்,  தமிழ்நாட்டில் உள்ள பிரதான தியேட்டர்களை தங்கள் வசம் கொண்டு வரும் அளவு வியாபாரத்தில் மும்முரமாகிறது. 

தியேட்டர்கள் எதையும் மொத்தமாக விலைக்கு வாங்காமல், குத்தகைக்கு எடுக்கலாம் என்பது 'ஐடியா'. எந்த தியேட்டராக இருந்தாலும் 5 ஆண்டுகள், 12 ஆண்டுகள் என குத்தகை அடிப் படையிலேயே பேசப்படுகின்றன. `நேரிடையாக  சொத்து வாங்கினால்தானே  வில்லங்கம் தேடி வரும். ஒப்பந்தம் போட்டுவிட்டு, தியேட்டர் ஃபர்னிச்சர்களைக் கணக்குக் காட்டி பேங்க் லோன் வாங்கலாம். லோனுக்கு மாதா மாதம் வட்டி கட்டினால் போதும். எந்த சட்டச் சிக்கலும் இல்லை' என பலரும் ஆலோசனை சொல்ல, விவேக் தரப்பு ஆர்வம் ஆகியிருக்கிறது. இதுவரையில் வங்கிக் கடனுக்கு சுமார் 1.25 கோடி ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறார்கள்.

``தமிழ்நாட்டில் 670 தியேட்டர்களில் 250 தியேட்டர்கள் தரம் வாய்ந்தவை. சினிமாவின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது இந்த தியேட்டர்கள்தான். இவற்றை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால்  தமிழ் சினிமாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப் பவையாக அவை மாறிவிடும். இந்தச் செயல் திட்டத்துக்கு வடிவம் கொடுப்பவர் விவேக்்'' என பின்னணியை விவரிக்கிறார் மன்னார்குடி வட்டாரங்களுக்கு நெருக்கமான ஒருவர்.



அரசியல் பஞ்சாயத்துகள் எதிலும் சிக்காமல் ஜாஸ் சினிமாஸை வளர்த்து எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் விவேக். ஆனால், `இன்னும் ஐந்து மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டத்தில் அதிகம் அடிபடப்போவது விவேக் பெயராகத்தான் இருக்கும்’ என்கிறார்கள். இதுவரையிலான `ஸோ கால்டு' மன்னார்குடி குழுவினர்போல் அல்ல விவேக். இவர் தெளிவான பிசினஸ் மேன். இவர் மன்னார்குடி வெர்ஷன் 2.0.

உறுமீன் - இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்

பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், மெட்ராஸ் கலையரசன் வில்லனாகவும் நடித்துள்ள படம் உறுமீன்.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமென காத்திருக்குமாம் கொக்கு. இந்த வரிகளுக்கேற்ப தலைமுறைகள் கடந்தும் பழி வாங்கும் கதை தான் இப்படம்.

இதில் ஜிகர்தண்டாவில் வில்லனாக மிரட்டி தேசிய விருது பெற்ற பாபி முழு நேர கதாநாயனாக நடித்துள்ளார். இரண்டு விதமான காலகட்டத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மெட்ராஸ் படத்தில் புரட்சிகர இளைஞனாக நடித்த கலையரசன் இதில் மிரட்டும் வில்லனாக நடித்து இந்த வருடத்தில் கவனிக்கப்படும் வில்லனாக கலக்கியுள்ளார்.

கதாநாயகி ரேஷ்மி மேனன் வழக்கமான கதாநாயகிகளை போல பாடலுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டுமே வந்து போகிறார். இப்படத்தில் நடித்த போது தான் பாபிக்கும், ரேஷ்மிக்கும் காதல் உருவானது குறிப்பிடத்தக்கது.

காளி வெங்கட், அப்புக்குட்டி தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அழகாக காட்டியுள்ளார்.

அச்சுவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிக்க வைக்கிறது.


கதாபாத்திரங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். அறிமுக இயக்குனராக சிறந்த படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சக்திவேல் பெருமாள்சாமி.


மொத்தத்தில் இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்.

கருப்பட்டி சீனி மிட்டாய்

சிறு வயதில் நாம் சீனி மிட்டாய் சாப்பிட்டிருப்போம். தற்போது அது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சிறு வயதில் சுவைத்த சீனி மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு பதிலாக, ஆரோக்கியத்தை வழங்கும் கருப்பட்டி சேர்த்து சீனி மிட்டாய் செய்தால், உடலுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது.

இங்கு கருப்பட்டி சீனி மிட்டாயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கருப்பட்டி - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, பின் நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதிலுள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு, அளவாக தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்து, தனியாக 1/2 அல்லது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கருப்பட்டியை தட்டி, ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை கரைய விட வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி 6-8 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு தனியாக வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான பாலிதீன் கவரில் சிறிது வைத்து, அந்த கவரில் முறுக்கு போன்று வரும் அளவில் ஓட்டை போட்டு, எண்ணெய் சூடானதும், அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமானதும், அதனை எடுத்து கருப்பட்டி பாகுவில் போட்டு 2 நிமிடம் முன்னும், 2 நிமிடம் பின்னும் திருப்பிப் போட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மாவையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய் ரெடி!!!

சென்னை மக்களுக்கு உதவ 15 இளைஞர்கள் சேர்ந்து அமைத்துள்ள 'கன்ட்ரோல் ரூம்'

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருபவர்களுக்கு உதவி செய்ய 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்கி பணியாற்றி வருகிறார்கள்.

ஈவு, இரக்கமில்லாமல் பெய்த மற்றும் பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். பொது மக்களே சக மக்களுக்கு உணவு, தங்க இடம் அளித்து உதவி செய்து கொண்டிருக்கின்றனர்.

அரசு அதிகாரிகள் வந்து நிவாரணம் வழங்கும் வரை பசியால் பொறுத்திருக்க முடியாது என்று சக மக்கள் உணவு சமைத்து பொட்டலங்கள் போட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் ஃபேஸ்புக்கில் கண்ணில் பட்ட இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளனர். அவர்கள் அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து, ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கி, லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன. அவர்களுக்கு உதவ பலர் தயாராக இருந்தும், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் இருந்தனர். இரு தரப்பினரை இணைப்பதற்காக, சென்னையில் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு சிறிய அறையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும் மொபைல்போன்கள் உதவியுடன் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளனர்.

உதவி தேவைப்படுவோரையும், உதவ விரும்புவோரையும் இணைத்து உதவிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மணிவண்ணன், அலெக்ஸ் பால் மேனன் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப்' எண் - 98806 55555, 'டெலிகிராம்' எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்' என கேட்டுக் கொண்டு உள்ளனர்.

செல்ஃபி எடுத்தபோது ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 வாலிபர்கள் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பாலாற்று மேம்பாலம் அருகில் நின்று வெள்ளத்துடன் சேர்த்து தங்களை செல்ஃபி எடுத்த மூவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 4 மணி நேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த பழையசீவரம் பாலாற்று பாலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இளைஞர்கள் சிலர் அதை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக அதோடு, அதன் அருகே நின்று, செல்போனில் செல்ஃபி போட்டோக்களையும் எடுத்துதள்ளுகின்றனர்.

இந்நிலையில் வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், விஜி மற்றும் பாரதி ஆகிய மூன்று மாணவர்கள் அப்பகுதியில் நின்று தங்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். ஆர்வத்தில் ஆற்றின் அருகேயே சென்றுள்ளனர். திடீரென மண் சரிந்ததால் மூவரும் வெள்ளநீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் 4 மணி நேரம் போராடி மூன்று மாணவர்களையும் மீட்டனர். இதுகுறித்து மீட்பு படையினர் கூறுகையில், எதிர்பாராமல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. இப்படி, ஆர்வம்மிகுதியால் வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களையும் நாங்கள்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது. இதனால் எங்களது சக்தியும், நேரமும் விரையமாகிது என்றனர்.

அப்பகுதி மக்கள் சிலரோ, இப்படிப்பட்டவர்களை ஏன் காப்பாற்றினீர்கள். அப்படியே வெள்ளத்தில் போகட்டும் என்று மீட்பு படையினரிடம் சண்டைபோடாத குறையாக சத்தம் போட்டுள்ளனர்.

ராமாவரத்தில் 'எம்.ஜி.ஆர். வீட்டில் கிராமபோன், பரிசுப் பொருட்கள் அனைத்தையும் வாரிசுருட்டிய வெள்ளம்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லத்தில் 20 அடியரத்துக்கு அடையாறு ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்கு இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் வெள்ளம் வாரிச் சுருட்டு கொண்டுபோய்விட்டது.

சென்னை புறநகரான ராமாவரத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் எம்.ஜி.ஆர் வசித்த வீடு உள்ளது. அங்கு காது கேளாத குழந்தைகளுக்கு பள்ளி ஒன்றும் நடத்தபட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏற்றில் திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க, அடையாற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் சென்னை நகரின் தென்பகுதியை அப்படியே மூழ்கடித்தது.

சென்னை புறநகரான ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் சுமார் 20 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. அங்கு இருந்த குழந்தைகள் 2-வது மாடியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

2 நாட்களாக தத்தளித்த அவர்களை மீனவர்கள் குழு ஒன்று படகுடன் சென்று மீட்டது. இந்நிலையில் இன்று வெள்ளம் வடிந்தது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் வசித்து வந்த எம்.ஜி.ஆர்- ஜானகி அம்மாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்று அங்கு திரும்பினர்.

அங்கு தரைதளத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கிராமபோன், பரிசுப் பொருட்கள், எம்.ஜி.ஆர். தொடர்பான ஆவணங்கள், எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் பயன்படுத்திய பொருட்கள் என எல்லாவற்றையும் வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போய்விட்டது. அந்த வீடே அலங்கோலமாக கிடக்கிறது.

இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

5 கோடி நிவாரண நிதியுடன் காத்திருக்கும் விஜய்!

சென்னையை உலுக்கி எடுத்த கனமழையால் தலைநகரம் சென்னை தற்போது வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதல் அண்டை மாநிலங்கள் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் சென்னையில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் 5 கோடி மதிப்பிலான உணவு மற்றும் மக்களின் அர்த்தியாவசியான பொருட்களுடன் இருப்பதாகவும் மக்களை அங்கே வந்து தங்குமாறு விஜய் ரசிகர்கள் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷோபா கல்யாண மண்டபம் என்றும் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

சென்னை அழியப்போவதாக வாட்ஸ்சப்பில் பரவும் வதந்தி.. நம்பாதீர்கள் மக்களே!

மழை நின்றாலும் தூவானம் நிற்காத கதையாக, சென்னையே அழியப்போகிறது என்கிற வகையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. தற்போது சென்னைக்கு ஆபத்து ஏதும் இல்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம். இந்த தகவலை முடிந்த அளவுக்கு வெள்ள பாதிப்புள்ள மக்களிடம் பரப்பி அவர்களின் பீதியை குறையுங்கள்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை நின்றுவிட்ட நிலையில், வாட்ஸ்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக ஒரு தகவல் மும்முரமாக பரப்பப்படுகிறது.

எச்சரிக்கை... என்று ஆரம்பிக்கும் அந்த மெசேஜில், "நண்பர்களே! நீங்கள் சென்னையில் இருந்தாலோ, உங்கள் நண்பரோ, உறவினரோ இருந்தாலும் உடனே வெளியேற சொல்லுங்க, ஏன்னா அடுத்த 72 மணிநேரத்திற்க்கு இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னைல பெய்யரது வெறும் மழை அல்ல, NASA ரிப்போர்ட்படி இதுதோட பெயர் EL Nino சூழற்சி புயல். கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு, சென்னையே முழுகி போக வாய்ப்பு உண்டு" எனக்கூறி ஒரு மெசேஜ் சுற்றுகிறது.

புழல் ஏரி உடைந்துவிட்டதாக இன்று காலை வடசென்னையில் ஒரு வதந்தி பரப்பிவிடப்பட்டதால், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று நேற்று விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை இன்று தேசிய வானிலை மையம் திரும்ப பெற்றுவிட்டது. காரணம், வங்கக்கடலில் உருவாகியிருந்த, காற்றழுத்த தாழ்வு நிலையானது வலு குறைந்துவிட்டது.

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட, ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு கூட குறைக்கப்பட்டுவிட்டது. நிலைமை இப்படி இருக்கும்போது, சென்னை அழிந்துவிடப்போகிறது, ஊரைவிட்டு ஓடு.. என்கிற ரீதியில் வரும் வதந்திகளால், மக்கள் பீதியடைந்து, மொத்தமாக சொந்த ஊர்களை நோக்கி ஓடும் நிலை ஏற்படலாம். அப்போது வாகனங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து, பெரும் தொந்தரவுகள் ஏற்படலாம். எனவே, வதந்தியை பரப்புவோர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுநல நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட ரமணன்!!!!

சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணனை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருக்கும் எஸ்.ஆர்.ரமணனின் வீடு, தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது.

அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தியாகராய நகர் பகுதியில் புதன்கிழமை வெள்ளம் சூழந்தது. இதில் ரமணனும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து உடனே ரமணன், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு உதவி கோர அவர்கள் விரைந்து வந்து ரமணன் குடும்பத்தினரையும் அந்த குடியிருப்பில் இருந்த பிற குடும்பங்களையும் மீட்டுச் சென்றுள்ளனர். இந்த விஷயம் இப்போது தான் வெளியில் வருகிறது.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் மீட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் பிறந்ததும் பிறந்தது முதல் தேதியிலேயே சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சென்னையில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செல்போன் கனெக்டிவிட்டி இல்லாததால் அங்கு சிக்கியுள்ளவர்களின் நிலைமை தெரியாமல் உறவினர்கள் அல்லாடுகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய மூத்த நடிகை லட்சுமியும் படகு மூலம் மீட்கப்பட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷத்தின் வீட்டில் 11 அடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்ததால் அவர் அகதி போன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மழை வெள்ளத்தில் ஆவணங்கள் தொலைந்து விட்டதா? உடனே கூப்பிடுங்க 7667100100

மழை வெள்ளத்தில் சொத்துப்பத்திரங்கள் ஆவணங்களை தொலைத்தவர்கள் உடனடியாக 7667100100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்காக கால் சென்டரை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

உயிரை மட்டும் விட்டு விட்டுவீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கபளீகரம் செய்து கொண்டு போய்விட்டது மழை வெள்ளம். வண்டி, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற்றாலும், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வீட்டு சொத்து பத்திரங்கள் என ஆவணங்களை தொலைத்தவர்கள் அவற்றை எப்படி மீட்பது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கின்றனர். கழுத்தளவு வெள்ள நீரில் தவிப்புடன் வெளியேறும் மக்களிடம் மைக்கை நீட்டி அவர்களின் அவலங்களை வெளி உலகிற்கு ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.

ரேசன் கார்டுகள், சான்றிதழ்கள், காப்பீட்டு பாலிசிகள், வீட்டு சொத்து பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள் என வாழ்க்கையை நடத்திச் செல்லும் அடையாளங்கள் தண்ணீரோடு போய்விட்டது. எங்களுக்கு எல்லாமே இருக்கு... ஆனா இப்போ எதுவுமே இல்லை என்று கண்ணீரோடு வேதனையைச் சொல்கின்றனர் பலர். சொத்துப்பத்திரங்கள் ஆவணங்களை தொலைத்தவர்கள் உடனடியாக 7667100100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் கூறியுள்ளனர். இதற்காக கால்சென்டரை தொடங்கியுள்ளனர்.

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பாகம் 2

 இந்திய திரையுலகில் அதிக புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தராகதான் இருப்பார். கவிஞர் வாலியை நடிகராக்கியதும் அவர்தான். அந்த நடிகழ்வை வாலியே விவரிக்கிறார்.

"அடிப்படையில் நான் ஒரு நாடகக்காரன். நான் திருச்சியில நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்.என்னோட நாடகத்துல மனோரமா எல்லாம் நடிச்சிருக்காங்க. நீங்க ஒண்ணு வச்சுக்குங்க. சினிமாவுக்கு பாட்டு எழுதற கவிஞன் அடிப்படையில் ஒரு நடிகன். ஒருநாள் பாலசந்தர் எனக்கு போன் பண்ணி, நான் படம் எடுக்குறேன். அதுல நீங்க நடிக்கணும்னு சொன்னாரு. அடுத்த வாரம் போன் பண்ணுங்க நான் சொல்றேன்னு சொல்லிட்டேன். அடுத்த வாரம் அவரே போன் பண்ணினார்.


"உடனே நான், நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அதற்கு பாலசந்தர், என்னவோய் போன வாரம் கேட்டபோது அப்புறம் சொல்றேன்னு சொன்னீரு. அது என்ன பந்தான்னு கேட்டாரு. பந்தா எல்லாம் ஒண்ணும் இல்ல, நான்தான் நடிக்கணும்ங்கிற எண்ணம் உங்க மனசுல ஒரு வாரமாவது இருக்குதான்னு பார்த்தேன். அதனாலதான் அப்படி சொன்னேன்னு சொன்னேன்.

"பொய்க்கால் குதிரை படம் ஷுட்டிங் போனேன். சரியா நடிப்பு வரலை. உடனே பாலசந்தர்கிட்டே, நான் பாட்டு மட்டும் எழுதிக்கிறேன், நடிப்பெல்லாம் வரலைன்னு சொன்னேன். அதுக்கு பாலசந்தர், நாளைக்கு வாங்க. உங்களுக்கு நடிப்பு வரலைன்னு எனக்கு தோணுச்சுனா நான் உங்களை விட்டுடுறேன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

"அன்னிக்கு ராத்திரி முழுக்க இதே யோசனையா இருந்தது. என்னடா நமக்கு நடிப்பு வரலையேன்னு. அடுத்தநாள் ஷுட்டிங்ல ரீடேக் வாங்காம நடிச்சேன். பாலசந்தர் மானிட்டர்கூட பார்க்கலை. படம் பதினைந்தாயிரம் அடின்னா நான் அதுல பத்தாயிரம் அடி இருப்பேன்."

பாலசந்தரின் பொய்க்கால் குதிரை மட்டுமின்றி அண்ணி, கையளவு மனசிலும் வாலி நடித்துள்ளார். பாலசந்தருக்கு இதில் வாலியின் நடிப்பு மிகவும் பிடித்தது, கையளவு மனசு. அந்த அனுபவம் குறித்து வாலியே சொல்கிறார்.

"கையளவு மனசுல மகன் இறந்ததை மறைக்கிற ஒரு சீனில் நான் அழணும். எனக்கு எப்படி அழகை வரும்? நான் அழவே மாட்டேன். சோ வீட்டுலதான் ஷுட்டிங். அதை பிரமாதமா பண்ணினாரு. சிவாஜி அசந்துபோனது அதைப் பார்த்துதான்.

எனக்கு அழுவது மாதிரி நடிக்க வராதுன்னு சொன்னேன். இவரு, நீங்க போனை பார்த்து அழுங்க. நான் உங்க முதுகுல ஆக்ஷனை பார்த்துக்கிறேன்னாரு. குலுங்கி குலுங்கி அழுறதில்ல, ஷாட் முடிஞ்சி கீதா உள்பட எல்லோரும் கைத்தட்டினார்கள். அந்த சீனைப் பார்த்துதான் சிவாஜி கூப்பிட்டு, என்னய்யா இவ்வளவு பிரமாதமாக பண்ணியிருக்கேன்னு பாராட்டினார்."

பாலசந்தர் குறித்த நிகழ்வுகள் மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான நபர்கள் அனைவர் குறித்தும் வாலி தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். அதனை நெல்லை ஜெயந்தா புத்தகமாக்கியுள்ளார். சினிமாவின், சினிமா மனிதர்களின் வரலாறு சொல்லும் முக்கியமான புத்தகம் அது.

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம்.
நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட
நிலையில் இருந்தாலும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில்
பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-
organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த
நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில் தங்கள் நாட்டு மாணவர்களின்
கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு
PISA-Programme for international students assessment என்று பெயர்.

மற்ற நாடுகள் விருப்பப்பட்டால் இதில்சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க. பின்லாந்து எப்போதும்
முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்,இரண்டரை வயதில்
ப்ரீ-கேஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை.
கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில்உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.

இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால் அறிவு
அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு
கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான்.
அந்த நேரத்திலும்கூட படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே
முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன்
குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக
மதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப்
பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து
வரலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின்
உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள்
வழங்குவார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள்
இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக
பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது.

அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீஸ்வரராக
இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும்... அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க
வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு
உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது.

அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம்
குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத இந்தக் கல்விமுறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான் உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி
என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்.

அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு
ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில்
பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர்எதுவும் இல்லை.
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த
நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே
வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின்
கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது
எனச் சொல்ல முடியாது. PISA ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள்.
இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே
முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது
பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம்
பெறவேண்டிய சாராம்சம் இதுதான்.

இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும் பராமரிப்பதிலும்
பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால்
பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின்
செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப்
பங்கு உண்டு.

மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்
லட்சியம். அதேநேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!
மேல்நிலை வகுப்பில் டாப் 10 இடம் பிடிக்கும் மாணவர்களில் இருந்து
ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு
வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில்
பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று... என
ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்.

இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும்
சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்
மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
“தாய்மொழி கல்விதான் சிறந்தது!”
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்வி
அமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.org என்ற கல்வி இணைய
இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்...

''பின்லாந்து ஆசிரியர்கள் ~சிறப்பாகச் செயல்படுவது எப்படி?''
''பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில் இருக்கிறது.
இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக் கையாளலாம். அதற்கான
உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல, எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும் என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல; கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும். நாம் எல்லோரும் மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க
வேண்டும்''

''பின்லாந்தில் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் குழந்தைகளுக்கு எவ்வாறு
போதிக்கப்படுகிறது?''
''எங்கள் நாட்டில் அகதிகள் குறைவு. ஹெல்சின்கி (Helsinki) என்ற பகுதியில்
அதிகபட்சமாக 30 சதவிகிதமாணவர்கள் புலம்பெயர்ந்தோர். பலவீனமான கல்வி மற்றும் சமூகப் பின்னணியில் இருந்துவரும் இவர்களை, வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்பும் முன்பாக, ஒரு வருட காலம் சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பி தயார்படுத்துகிறோம். அதைப்போலவே புலம்பெயர் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதில் முனைப்புடன்
இருக்கிறோம். தாய்மொழியைப் பயில்வதன்மூலம்தான் ஒரு குழந்தை
உண்மையான கல்வியைப் பெற முடியும். ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக்கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது.

எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும் தாய்மொழியைக் கற்பது
மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக்
கற்றுக்கொள்ளும்போதுதான் பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்!''

''பின்லாந்து கல்விமுறையில் இருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?''
''இது கடினமான கேள்வி. கல்வி என்பது ஒரு நாட்டின் உள்ளூர் மக்களுடனும்
வரலாற்றுடனும் இணைந்திருக்கிறது. அதனால் ஒரு நாட்டின் கல்விமுறையை இன்னோரு நாட்டுக்குப் பொருத்துவது சரியாக இருக்காது. ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்கள்தான் சிறந்த கல்விக்கான அடிப்படை. ஆசிரியர் பயிற்சியில் முழுக் கவனம் செலுத்தி வடிவமைப்பதும், அவர்களின் பணிபுரியும் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதும் முக்கியம். நல்ல ஊதியம் அளிப்பதும் அவசியமானது என்றபோதிலும் அது ஒரு நிபந்தனை அல்ல.

பின்லாந்தில் மற்ற தொழில் துறை பணிகளில் இருப்போர் பெறும் சராசரி
ஊதியத்தையே ஆசிரியர்களும் பெறுகின்றனர்!''
''பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள் எவை?''
''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில் தான்
கற்பிக்கிறோம். நல்ல பள்ளி புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற
பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல் குறைபாட்டுடன் இருக்கும்
குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம்
21 பேர்தான். அதைத் தாண்டினால் ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோல எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும்
நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில்
இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை நாங்கள்
நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும், வீட்டுப்பாடம் செய்யவும்
அவர்களுக்கு நேரம் தர வேண்டும்!''

மழை வெள்ளத்தால் தங்க வசதியில்லாத சென்னை வாழ் சகோதர சகோதரிகளே

நடிகர் அஜித் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட் அனாதை ஆசிரமம் முதியோர் இல்லம் தொண்டு நிறுவனம் திருமணம் மண்டபம் அவரது இல்லம் இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும். தங்குவதறகு உபயோகித்து கொள்ளும்படி நடிகர் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு, உடை, சாப்பாடு பராமரிப்பு அவரே செய்கிறார்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டார்

சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று வேறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். கண்ணாடி அணிந்து கைப்பையுடன் அவர் படகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்த 62 ஆயிரம் பேரை மீட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.