Thursday, December 17, 2015

சித்தார்த்தின் கருத்து எவ்வளவு உண்மையாகிவிட்டது - 5 வருடம் கழித்து வைரலாகும் வீடியோ!

தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் தீவிரமாக உதவிகள் செய்தனர்.

சென்னை மட்டுமின்றி கடலூர் பகுதிகளிலும் சித்தார்த் சென்று உதவிகள் செய்தார். மழையால் சித்தார்த்தும் பெரிதாக பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தத் தடையும் சித்தார்த்தை நிறுத்தவில்லை. இந்நிலையில் சித்தார்த் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு மனிதராகவும் இளைஞர்கள் மத்தியில் இடம்பிடிக்க பல வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய வீடியோக்கள், நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் என இப்போது வாட்ஸப், முகநூல் உள்ளிட்ட தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் முகநூல் குழுக்களை இணைப்போம் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ தற்போது மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. நாம் வாழும் உலகம் எவ்வளவு அவசரமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறது என்பதை மும்பையில் நடந்த குண்டு வெடிப்பை மேற்கோள் காட்டி சித்தார்த் பேசிய ஆங்கிலப் பேச்சு இப்போதைய நிலைக்கு அப்படியே பொருந்தும்படி இருக்க அதை அதிகம் பகிர்கிறார்கள்.



மும்பை குண்டு வெடிப்பு நடந்த போது எல்லா மீடியாக்களும், டிவிக்களும் விடாது பேசினார்கள் அப்படியே சில நாட்கள் கழித்து நானும் என் நண்பர்களும் அதே மும்பையில் அதிகாலையில் நடந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சர்யம் ‘எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள்,உண்மையில் இவர்கள் மறந்துவிட்டார்கள்’; என்பதுதான் எனக் கூறும் போது கண்டிப்பான உண்மையாகவே படுகிறது அந்த வீடியோ. நாம் வாழும் தலைமுறைகள் வயதை அடிப்படையாகக் கொண்டு இடைவெளியில் இல்லை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. ஒரு நிகழ்வுக்கு சில மணி நேரங்களோ, அல்லது நாட்களோ தான் அங்கீகாரம் என்பதை விளக்கும் வீடியோவாக வெள்ளம் - பீப் பாடலால் மறைக்கப்பட்ட நிலையைக் கொஞ்சம் அதிகமாகவே உணர்த்துகிறது எனலாம்.

0 comments:

Post a Comment