Monday, December 28, 2015

சட்டசபையில் பேசாத நீங்கள் ஊடகத்தாரை துப்புவீர்களா? பத்திரிகையாளரின் 13 கேள்வி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியை வழங்கும் செந்தில் தனது முகநூல் பக்கத்தில், விஜயகாந்தின் நடவடிக்கைகள் குறித்து சில நியாயமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் முன்னனி நடிகராக இருந்த திரு.விஜயகாந்த் அவர்கள் தொடர்ந்து ஊடகங்களையும் தமது கட்சியினரையும் வார்த்தைகளாலும், அவ்வப்போது கைகளாலும் தாக்கி வருவது வாடிக்கையாகிப் போன நிலையில் அதன் உச்ச கட்டமாக காறித் துப்பியிருக்கிறார்...அது தொடர்பான பதிவே இது...

முதலில் பதிவிற்கு போவதற்கு முன்னால் பதிவை முழுமையாக தெளிவாகப் படிக்காமல் ஆதரித்தோ விமர்சித்தோ பதிவு செய்வதை தயவு செய்து தவிர்க்கவும்..முழுமையாகப் படித்து விட்டு கருத்துக்களை பதியுங்கள்..

இரண்டாவதாக இந்த பதிவு ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ அனைவரும் நேர்மையானவர்கள் என்றோ மிகச்சரியாகவே எல்லா இடங்களிலும் நடந்து கொள்கிறார்கள் என்றோ ஆதரிக்கும் நோக்கத்திலான பதிவும் அல்ல...

ஊடகங்களின் மீது வேறேதேனும் நியாயமான கோபங்கள் உள்ளவர்கள் அந்த காரணத்திற்காக விஜயகாந்தின் செயலை ஆதரிப்பது நியாயம்தானா என்ற கேள்விகளையும் முன் வைத்தே பதிவைத் தொடங்குகிறேன்..

1. திரு.விஜயகாந்திடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்டாலும், யார் கேட்டாலும் அடுத்த கேள்வி, நீ எந்த டி.வி என்பதே அவரின் எதிர்வினையாக உள்ளது.. வேறு எல்லா ஊடகங்களும் விஜயகாந்திற்கு எதிராகத்தான் இருப்பதாக அவர் நினைத்தால் அவர் கேப்டன் டி.விக்கு மட்டும் பேட்டி கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாலம் பொது வெளியில் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம்..

2. எந்த கேள்வி கேட்டாலும், ஜெயலலிதாவிடம் கேட்டியா என்று எதிர் கேள்வி வைக்கிறார். செல்வி.ஜெயலலிதா அவர்கள் சமீப காலமாக ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே...ஊடவியலாளர்களை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்வியையும், விமர்சனத்தையும் தொடர்ந்து பெரும்பாலான ஊடகங்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன..

3. செல்வி.ஜெயலலிதா ஊடகங்களை சந்திக்காத சூழலில், அ.தி.மு.க.வின் சார்பாக விவாதங்களில் கலந்து கொள்பவர்களிடம் கடுமையான கேள்விகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து நியுஸ் 7 தமிழ் செய்தியாளர் அமைச்சர் வளர்மதியிடமும், சென்னை மேயரிடமும் நேரலையில் கேள்விகளை முன் வைத்ததும் அதற்கு மேயர் பதில் சொல்லாமல் தவிர்த்ததும் அதை கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பி கடுமையான கேள்விகளும் முன் வைக்கப்பட்டன...( நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் யு டியுபில் கேள்வி நேரம் நிகழ்ச்சியைப் பார்க்கலாம்..)

4. ஊடகங்கள் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்பதில்லையே என்று காறித் துப்பிய திரு.விஜயகாந்த் நடத்தி வரும் கேப்டன் டி.வி எத்தனை முறை செல்வி .ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது என்று சொல்ல முடியுமா...ஏன் கேள்வி எழுப்பவில்லை கேப்டன் டி.விக்கும் விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிடம் கேள்விகளை முன் வைக்க அச்சமா என்பது போன்ற எதிர்கேள்விகளுக்கு பதில் தருவாரா விஜயகாந்த்.

5. தங்கள் தொலைக்காட்சியில் அது போன்ற கேள்விகள் எதுவும் கேட்கப்படாத பட்சத்தில் நியுஸ் 7 தமிழ் செய்தியாளர், அமைச்சரிடமும், மேயரிடமும் கேள்விகளை முன் வைத்த பிரத்யேக காணொளியை தொடர்ந்து கேப்டன் டி.வியில் ஒளிபரப்பினார்களே..விஜயகாந்த் அதைக் கூடவா பார்க்கவில்லை...

6 . அது சரி அவர்தான் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கேள்வி எழுப்பிய போதே அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்க..நான் இன்னும் பேப்பர் படிக்கல என்று கூறியவர் ஆயிற்றே அவர் கேப்டன் டி.வி பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்..

7. ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக குற்றம் சாட்டி தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினரைப் பார்க்க வந்த விஜயகாந்திடம் நியுஸ் 7 செய்தியாளர் சகோதரி. தமிழரசி, இந்த விவகாரத்தில் பிரதமர் ஆந்திர மாநிலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிப்பதைக் குறித்தும், பிரதமர் இது குறித்து எந்தக் கருத்தும் கூறாதது குறித்தும் கேட்ட போது, அப்போதும் நீ எந்த டி.வி. என்று எதிர் கேள்விதான் கேட்டார் விஜயகாந்த்...( அப்போது அவர் பா.ஜ.க.கூட்டணியில் இருந்தார்.. இப்போதும் தங்கள் அணியில் இருப்பதாகத்தான் மாண்புமிகு. பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கூறுகிறார்கள்)..

8. அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்த காலத்தில் அ.தி.மு.க.குறித்து விஜயகாந்த் விமர்சிக்க மாட்டார்.. கேப்டன் டி.வி.யும் விமர்சனம் செய்யாது...பின் அங்கிருந்து வெளியேறி பா.ஜ.க.உடன் கூட்டணி வைத்த போது பா.ஜ.க.குறித்து விமர்சிக்க மாட்டார்...வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கிறாரோ அவர்களை அதன் பிறகு விமர்சிக்க மாட்டார்...

ஆக தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகின்ற போது நீங்கள் ஆதரிப்பவர்களை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும், நீங்கள் எதிர்த்தால் ஊடகங்கள் எதிர்க்க வேண்டும் என்றும் நினைப்பதுதான் நடுநிலையா? தன்னையும் தான் சார்ந்திருக்கும் கூட்டணியையும் ஆதரிப்பது மட்டுமே ஊடகங்களின் பணியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது ?

9. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் விஜயகாந்த், சில ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறும் செய்தியாளர்களைப் பார்த்து கேட்கிறார் நீங்கள் வேறு ஊடகங்களுக்கு மாறினால் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா என்று ? இந்த கேள்வியைக் கேட்பதற்கான தார்மீக உரிமையை இழந்தவராகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா ?

10. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவாராக நீங்கள், ஊடகங்கள் செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை ஏன் சட்டப்பேரவையில் சென்று எழுப்புவதில்லை...ஒரு முறை நாக்கைத் துருத்தி ஆவேசமாக பேசியதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதா..சட்டப்பேரவையில் என்னை பேச விட மறுக்கிறார்கள் அதனால் நான் சட்டப்பேரவைக்கு செல்வதில்லை என்று நீங்கள் கூறினால் அது நியாயம்.

அதையே, தமிழக முதலமைச்சர் ஊடகவியலாளர்களை சந்திப்பதில்லை.சந்தித்தால் கேள்விகளை நிச்சயம் கேட்போம் என்று ஊடகவியலாளர்கள் சொன்னால் அது அநியாயமா ? அதற்கு நீங்கள் காறித் துப்புவீர்களா..

11. மறைந்த நடிகை மஞ்சுளாவின் மரணத்திற்கு சென்று விட்டு வந்த பின் செய்தியாளர்களிடம் நீங்கள் கூறியதையும், ஊழல் மிகவும் நல்லது என்று திருப்பதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதையும், உங்கள் கட்சியின் வேட்பாளர் பெயரையே தவறாகச் சொன்னதைச் சுட்டிக்காட்டிய வேட்பாளரை தாக்கியதையும் பார்த்துப் பழகிப் போன தமிழகத்திற்கு நீங்கள் காறித் துப்பியது ஒன்றும் புதிதல்ல...

12. நிறைவாக, உங்களைத் தவிர வேறு யாரையும் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கவோ, விவாதங்களில் கலந்து கொள்ளவோ தடை விதித்திருக்கும் நீங்கள் ஊடகவியலாளர்கள் தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பாததைக் குறித்து கேள்வி எழுப்புவது முரணாகத் தெரியவில்லையா..??

13. ஊடகங்களின் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை தாரளமாக வையுங்கள்..ஆனால் அவை மட்டுமல்லா யார் மீதான விமர்சனமாக இருப்பினும் அது நாகரீகமானதாக இருத்தல் அவசியம் ...அவ்வாறு இல்லாத பட்சத்தில் திரு.விஜயகாந்த் அவர்களே சமூகம் உங்களையும் தூ.......ற்றக் கூடும்...

0 comments:

Post a Comment