Monday, December 28, 2015

ஜல்லிக்கட்டு தடை ஏன்? யாரால்? எப்படி? நடை முறை சாத்தியம் என்ன?

தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தடை செய்யப் பட்டுள்ளது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி, ‘வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது. அதன் படி பல விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவைகளை பொது இடங்களில் துன்புறுத்துவது குற்றமானது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை சிங்கம்,புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை நாம் நம் பகுதிகளில் ‘சர்க்கஸ்’ மூலம் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் வனவிலங்குகளின் ஆர்வலர்களின் செயல்பாடுகளால், கடந்த சில ஆண்டுகளாக இந்த சர்க்கஸ்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் இடம்பெறுவதில்லை.

2008 ம் ஆண்டு முதலாக, தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு, பல்வேறு வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதை எதிர் கொள்ள ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” ஐ கொண்டு வந்தது தமிழக அரசு. ஒவ்வொரு முறையும் ஒரு சில கட்டுப்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடைபெற்றன . 2011ம் ஆண்டு ஜூலை மாதம், அன்றைய காங்கிரஸ் அரசில் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே இருந்த பட்டியலில் “காளை” புதிதாகச் சேர்க்கப்பட்டது. மேலும் பிராணிகள் வதை சட்டம் பிரிவு 22 ன் கீழ் ஆணையும் இடப்பட்டது.

இதை தொடர்ந்து விலங்குகளுக்கான நெறிமுறைகள் கொண்ட மக்கள் அமைப்பு (PETA) ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரியும்,”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” ஐ அகற்ற கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, உடனடி தடையையும் கேட்டது. ஆனால், உச்ச நீதி மன்றம் காளைகளை துன்புறுத்தாது, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் இந்த நிகழ்சியில் பங்கேற்பவர் களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற தமிழக அரசு மற்றும் வாதங்களையும், உத்தரவாதங்க ளையும் ஏற்று கொண்டு சில கட்டுபாடுகளுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்தது. 2013 ம் ஆண்டு நடை பெற்ற ஜல்லிக்கட்டில் பிராணிகள் நல வாரியம் மற்றும் சில அமைப்புகள், ஜல்லிக்கட்டு நடந்த அத்துனை இடங்களிலும் நடைபெற்ற நிகழ்சிகளை நிழற்படம் மற்றும் கானொளி யில் பதிவு செய்து, காளைகளுக்கு இழைக்கப்பட்ட பல கொடுமையான காட்சிகள் குறித்த நீண்ட பதிவினை செய்தது.

மேலும் தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவ்வாறெல்லாம் மீறப்பட்டன என்பதை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் மே மாதம் 7 ம் தேதி, 2014ம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டை’ தடை செய்தது. மேலும் தமிழக அரசின் ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டத்தை நீக்கியது. இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயராம் ரமேஷ் அவர் கள் ‘காட்டுமிராண்டி தனமான’ இந்த வழக்கம் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதிலும் அரசியல் செய்ய நினைத்த காங்கிரஸ் அரசு இந்த வழக்கின் கடைசி தருணத்தில் ‘காளைகளை’ பட்டியலிலிருந்து நீக்குவதாக சொன்ன போது, நீதிமன்றம் கடுமையாக அரசை கண்டித்ததோடு, இனி இது குறித்து விலங்குகள் நல வாரி யத்தை கலந்தாலோசித்தே இது போன்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது.

இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி பிரிவு 21,22 ன் படி, பிரிவு 3ன் கீழ் 11 (1) (a) மற்றும் (o) மற்றும் இந்திய அரசியலைமைப்பு சட்டம் 51 A (g) மற்றும் (h) படி காளைகளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் தமிழக அரசின் ,”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டமானது இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 க்கு எதிர்மறையாக அல்லது முரணாக உள்ளது என்று கூறி அதற்கு பல்வேறு உதாரணங்களை மேற் கோள் காட்டியது. மேலும் தமிழக அரசின் இந்த சட்டம் விலங்குகளின் நலன் குறித்து உருவாக்கப் படவில்லை என்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டது.

மேலும் பிராணிகள் நலன் குறித்த ஒவ்வொரு விவகாரத்தையும் பிராணிகள் நல வாரியம் முன்னின்று, அரசுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தை சீரிய வகையில் விரைவாக செயல்படுத்த அந்த வாரியம் முயற்சிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்தியா முழுவதும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இப்போதைய நிலை?

பிராணிகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவதாக உறுதி கூறிய ஏற்பாட்டாளர் கள் அதை மீறியதாலும், கட்டுப்பாடுகளை செயல்படுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்த தமிழக அரசு செய்ய தவறியதாலும், அந்த விதி மீறல் களை ஆதார பூர்வமாக நிரூபித்த காரணத்தினாலும் தான் இந்த பிரச்சினை எழுந்தது என்பதை நாம் உணர வேண்டும். இந்த சூழ்நிலையில், தமிழகத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் (பாஜக உட்பட) ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாலும், சட்ட ரீதியான அமைப்பான பிராணிகள் நல வாரியம், காளையை பட்டியிலில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது. தொடர்ந்து மத்திய அரசு அந்த அமைப்பினருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறது. மேலும் அந்த வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றம் அரசின் கோரிக்கையை ஏற்காது என்பதை தெளிவாக்கியிருக்கிறது.

சட்ட திருத்தம் கொண்டு வரலாம் என்றாலும், சட்ட ரீதியான விலங்குகள் நல அமைப் பினரின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்றே கொண்டு வர முடியும் என்பதையும், ஒரு வேளை அதை செய்தாலும் ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான காங்கிரஸ் கட்சியினர் மாநிலங்களைவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது செய்வார் கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அது ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே இருக்கும் என்பதும், பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இதை எதிர்க்கும் என்பதும், மாநிலங் களவையில் இதை நிறை வேற்ற காங்கிரஸ் மறுக்கும். மேலும், அவசர சட்டம் என்பது ‘ஜனநாயக விரோதம்’ என்று காங்கிரஸ், தி மு க, பாமக, ம தி மு க போன்ற கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக சொல்லிவருவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

ஆக, ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு சட்ட ரீதியாக வழி வகை செய்ததோடு, அதை மீண்டும் அரங்கேற்ற அரசியல் ரீதியாக பல்வேறு முட்டுக்கட்டைகளை காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளது குறித்து மற்ற கட்சிகள் கேள்விகள் எழுப்பாதது ஏன்? காங்கிரஸ் கட்சி ஏன் இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியது? நம் கலாசாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலா? பண்பாட்டை தூக்கி எறிய வேண்டும் என்ற முனைப்பு ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வந்தது? என்ற கேள்விகள் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும். பாரதத்தின் பண்பாட்டை, கலாசாரத்தை ஒழிக்க காங்கிரஸ் ஏன் முனைந்தது ? முனைகிறது?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்

0 comments:

Post a Comment