Sunday, December 27, 2015

விஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ.....

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘பத்திரிகைகாரங்களா நீங்க தூ..' எனக் காறித் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கேள்விக்கு ‘பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ.........' எனக் காறித் துப்பினார். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு அநாகரீகமாக, அத்துமீறி நடந்து கொள்வது விஜயகாந்திற்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே இது போல் பலமுறை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர்.

கோபத்தில் எகிறிய கேப்டன்... கடந்தாண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போனார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் எகிறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

உனக்கு பதில் சொல்ல முடியாது... அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறினார். பின்னர் அவரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதா ஆகியோர் சமாதானப் படுத்தினர்.

நாய்... நாய்... சென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டி பரபரப்பை கிளப்பினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?' என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.

மீண்டும் டெல்லியில்... இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை இந்தாண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆங்கிரி பேர்டாக மாறினார்.

தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... அப்போது அவர் கூறிய, ‘தூக்கிஅடிச்சிருவேன் பாத்துக்க' என்ற வாக்கியம் இன்றும் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாசமாக அழைத்த விஜயகாந்த்... கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை, சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, புரியாத விஜயகாந்த், என்ன கேட்டீங்க... பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார். கோபப்படும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நட்பாக பேசி, டெரர் கிளப்பிய தருணம் அது.

அடி வாங்கியவர்கள்... இது தவிர வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது அடித்தது, ரசிகர்களை அடித்தது என அவரது கோப வரலாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், விஜயகாந்த் மனம் சொல்வது படி கேட்டு இயல்பாகவே நடந்து கொள்வதாக சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.

மீண்டும் சர்ச்சை... இந்த சூழ்நிலையில் தான் இன்று செய்தியாளர்களைப் பார்த்து காறி துப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜயகாந்த். ஏற்கனவே கடந்த வாரம் செய்தியாளர் ஒருவரைப் பார்த்து இசையமைப்பாளர் இளையராஜா, கோபமாகப் பேசியதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

வைரல்... இந்நிலையில், விஜயகாந்த் செய்தியாளர்களைக் காறி உமிந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. ஒரு பக்கம் இது செய்தியாளர்களைப் பார்த்து துப்பியது கிடையாது; ஊடக முதலாளிகளைப் பார்த்து துப்பியது என செய்தியாளர்களே சமாதானப்படுத்துகிறார்கள்....

அவரும் ஓனர்தானே.. மற்றொருபுறம்.. விஜயகாந்த் கூட டிவி சேனல், செய்தி சேனல் நடத்துகிறார்... அப்ப அவர் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறாரோ தம் மீது? என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மிகவும் சாதாரணமான அரசியல் கேள்விகளுக்கு  இப்படி துப்பி துப்பியே பதில் சொல்லிக் கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் "துப்பி கெட்ட" கேப்டன் என்றுதான் பட்டம் கிடைக்கும்!

0 comments:

Post a Comment