Monday, December 28, 2015

‘ரோபோ’ ரஜினியை காதலித்து ஏமாற்றும் ‘ரோபோ’ எமி ஜாக்சன்…! – ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் கதை…!

தலைப்புக்கான செய்தியை படிப்பதற்கு முன் கொஞ்சம் பழைய கதையைப் பார்ப்போம்…!

வருடத்துக்கு 200 படங்களுக்குக் குறையாமல் வெளியாகிக் கொண்டிருந்தாலும் அவற்றில் 95 சதவிகித படங்கள் செலுலாய்டு குப்பைகள்தான். சமீபகாலமாக டிஜிட்டல் குப்பை!

வெகு சில படங்களே தமிழ்த்திரையுலகுக்கு பெருமை சேர்த்துள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2010 ல் வெளியான எந்திரன் படம் இந்த ரகம்.

எழுத்தாளர் சுஜாதாவின் எண்ணத்தில் உதித்த இந்த சயின்ஸ்ஃபிக்ஷன் கதையை, 1998 ஆம் ஆண்டு வாக்கில் ‘ரோபோ’ என்ற பெயரில் தயாரிக்க திட்டமிடப்பட்டது.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், ஹிந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா நடிக்க, சுஜாதா அங்கம் வகித்த அன்றைய முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான மீடியா ட்ரீம்ஸ் ‘ரோபோ’ படத்தைத் தயாரிப்பதாக இருந்தது.

போட்டோ ஷூட் முடிவடைந்து, சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்டி ரோபோவை படத்துவக்கவிழாவுக்கான அழைப்பிதழாக வடிவமைத்திருந்தார் கலை இயக்குநர் சாபு சிரில். படத்துவக்கவிழாவுக்கு சில நாட்களே இருந்தநிலையில் திடீரென ரோபோ படம் ட்ராப்பானது.

சம்பள விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கமல் விலகியதே காரணம்…!

பிறகு ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகு 2008 ல் ரஜினியை வைத்து தன் கனவுப்படத்தை மீண்டும் தொடங்கினார் ஷங்கர்.

தமிழில் தலைப்பு வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சட்டம் காரணமாக ‘ரோபோ’வை ‘எந்திரன்’ ஆக மாற்றினார்கள்.

ஐங்கரன் இண்டர்நேஷ்னல் தயாரிக்கத் தொடங்கி, பணத்தட்டுப்பாடு காரணமாக பாதியோடு கழன்று கொள்ள, சன் பிக்சர்ஸ் அண்டர்டேக் பண்ணி எந்திரன் படத்தை முடித்தனர்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த தமிழ்சினிமாவைப் பார்த்து நொந்துபோயிருந்த ரசிகனுக்கு ‘எந்திரன்’ படம் புதிய அனுபவமாக இருந்தது.

உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர். வசீகரன் (ரஜினிகாந்த்) தன்னைப்போலவே ஒரு ரோபோவை (சிட்டி) உருவாக்குகிறார்.

அது உணர்ச்சிகளற்ற மிஷின் என்றாலும், மனிதன் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களையும் செய்யும் அளவுக்கு ஏறக்குறைய ஒரு மனிதனாகவே அந்த ரோபோவை உருவாக்குகிறார் வசீகரன்.

சிட்டியை இராணுவத்தில் சேர்த்து நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே வசீகரனின் கனவு.

கோபம், காதல், கஷ்டம், இஷ்டம், சந்தோஷம் என ஒவ்வொரு உணர்வையும் சிட்டியின் மெமரியில் பதிவு செய்கிறார் வசீகரன்.

அதனால் எல்லா விஷயங்களையும் சிட்டியால் உணர முடியும்.

வசீகரனின் காதலியான சனா (ஐஸ்வர்யா ராய்) சிட்டி மீது உள்ள பிரியத்தில் முத்தம் கொடுக்க, சிட்டியின் காதல் உணர்வுகள் வெடிக்கின்றன.

சனாவை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறது சிட்டி.

தன்னை உருவாக்கிய வசீகரனுக்கே வில்லனாய் மாறுகிறது சிட்டி ரோபோ!

சிட்டியை தன் வசம் கொண்டு வரும் வசீகரனின் எதிரியான சக விஞஞானி போரா, உலகத்தை அழிக்க கூடிய அத்தனை சக்தியையும் அதில் பொருத்தி விடுகிறார்.

அதனால், சிட்டியையே துவம்சம் செய்கிறது சிட்டி.

அந்தப் பழியும் வசீகரன் மேல் விழுகிறது.

மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு சிட்டியின் மெமரியில் இருக்கும் சிப்பை எடுத்து சனாவையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார் வசீகரன்.

இந்த ரோபோவால் நாட்டுக்கு ஆபத்து எனவே சிட்டி நமக்கு தேவை இல்லை என தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம்.

வேறு வழியில்லாமல் சிட்டியை வசீகரனே அழிக்கிறார்.

எந்திரன் படத்தின் முதல் பாகத்தின் கதை.

முதல் பாகத்தில் அழிக்கப்பட்ட சிட்டி மீண்டும் உயிர்பெறுவதுதான் இரண்டாம் பாகத்தின் கதை.

2.0 என பெயர் சூட்டப்பட்டுள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும், முதல் பாகத்தைப்போலவே சிட்டியின் அழிச்சாட்டியம்தான் முக்கிய விஷயமாம்.

குறிப்பாக முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராய் மீது காதல் கொண்டு திரிந்த சிட்டி, இரண்டாம் பாகத்தில் எமி ஜாக்சன் மீது காதல் கொள்கிறதாம்.

சிட்டியின் பிடியிலிருந்து எமி ஜாக்சனை காப்பாற்றுவதற்காக, எமியைப்போலவே ஒரு ரோபோவை உருவாக்கி, சிட்டியுடன் ‘பழக வைத்து’ ஏமாற்றி சிட்டியை அழிப்பதுதான் 2.0 படத்தின் அவுட்லைன்.

0 comments:

Post a Comment