Sunday, December 6, 2015

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

 வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

"இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா.

"பூனைங்க எல்லாம் உங்களுதா..?"

"ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி.

"உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?"

"நாலு பேருங்க..." ஆதீஸ்வரி.

"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

இப்படி பண்றீங்களேம்மா.. அதிமுகவினருக்கு கொஞ்சமும் சளைக்காத விஜய் ரசிகர்கள்!

அந்த அதிமுகக்காரர்கள்தான், அம்மா ஸ்டிக்கர் ஓட்டினால்தான் நிவாரண பொருள் வழங்கவிடுவோம் என்று தகராறு செய்கிறார்கள் என்று பார்த்தால், இங்கு ஒரு நடிகரின் ரசிகர் மன்றமும், ஸ்டிக்கர் ஒட்டி நேரத்தை விரையம் செய்துகொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.


இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் செய்யப்படுவது தர்மம் என்பார்கள். ஆனால், ஒரு டியூப் லைட்டை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, அந்த லைட்டில் வெளிச்சம் வெளியே தெரியாத அளவுக்கு கொட்டை எழுத்தில் தனது பெயரை பொறித்து வைக்கும், அற்ப சமூகத்தில்தான் நாம் வாழ்த்து வருகிறோம்.

ஆனால், அவசர நேரத்தில், இந்த வெத்து விளம்பரங்களுக்காக காலத்தை விரையம் செய்யாமல், உயிர் காக்கும் பணியில் இறங்க வேண்டியது மனிதாபிமானம் உள்ள மனிதர்களின் முதல் கடமை. ஆனால், கடலூர் உள்ளிட்ட வெள்ள பாதிப்புள்ள பகுதிகளுக்கு தன்னார்வலர்களால் அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை ஒட்ட வேண்டும் என்று, அதிமுகவினர் கலாட்டா செய்ததாக புகார் வந்தது.

இதையடுத்து, குற்றவாளிகள் குறித்து தகவல் தருமாறு, அதிமுக தலைமை கழகம் வேண்டிக்கொண்டுள்ளது. அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல, நடிகர் ஒருவரின் படத்தை, தண்ணீர் பாட்டிலில் ஒட்டியபடி வினியோகம் நடந்துவருகிறதாம். இதை பெருமையாக ஷேர் செய்துள்ளனர் டிவிட்டரில். ஏம்ப்பா, உயிருக்கு போராடுறவனுக்கு தண்ணி கூட கொடுக்காம, ஸ்டிக்கர் ஒட்டி நேரத்தை வீண் செய்யனுமா?

என்னம்மா நீங்களும் இப்படி பண்றீங்களேம்மா..

‘உறுமீன்’ திரை விமர்சனம் - சரியான இலக்கு.

ஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் மிக்க ஒரு நாட்டின் வீரமிக்க மன்னராக வரும் பாபி சிம்ஹா, பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். பஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறன் கொண்டவர். படையெடுத்து வரும் பிரிட்டிஷ் படைகளை சிதறடித்து விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டுகிறார். ஆனால், காட்டிக்கொடுத்த தன் நண்பன் கலையரசனால் அவர் வாழ்க்கை முடிகிறது.

கலையரசன் கொடுத்த தகவலின்பேரில், சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கண்ணில் மண்ணைத் தூவும் பாபி சிம்ஹா, அங்கிருந்து தப்பிச் சென்று தன் குருவை சந்திக்கிறார். அப்போது, எப்படியும் தன்னை பிரிட்டிஷ் படைகள் பிடித்து கொன்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்த அவர், அவர்கள் கையால் சாவதைவிட உயிர்துறப்பதே மேல் என்று தன்னை உயிரோடு புதைக்கும்படி கூறுகிறார். அத்துடன் அவர் தன் எதிர்காலம் குறித்து எழுதி வைத்திருந்த ஜென்ம புத்தகத்தையும் உடன் புதைக்கும்படி கூற, அதன்படியே அவர் புதைக்கப்படுகிறார். இந்த 7 நிமிட முதல் தலைமுறை கதை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர் கதை நேராக சென்னைக்கு பயணமாகிறது. கதாநாயகன் பாபி சிம்ஹா, பி.இ. படித்துவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார். நண்பர் காளியின் அறையில் தங்கியிருக்கும் அவருக்கு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. அலுவலகத்தில் அவரது டீம் லீடராக வருகிறார் கதாநாயகி ரேஷ்மி மேனன். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் அறிமுகம் ஆகிறது.

இந்நிலையில், முதல் தலைமுறையில் எழுதப்பட்ட ஜென்ம புத்தகம், தன் வீட்டு உரிமையாளர் மூலம் பாபி சிம்ஹாவுக்கு கிடைக்க, அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத மாற்றம் நடப்பதுபோல் தோன்றுகிறது. புத்தகத்தை அலுவலகத்தில் வைத்திருந்தபோது அதிலிருந்து புகை வருகிறது. பின்னர் அதை ஒரு சைக்காடிஸ்ட் டாக்டரிடம் காட்ட, அந்த புத்தகத்திற்கும் பாபிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.

எனவே, அந்த புத்தகத்தைப் பற்றிய நினைவில் மூழ்கியிருக்கும் பாபி சிம்ஹாவின் வாழ்க்கையில் ரேஷ்மி மேனன் மூலம் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. கிரெடிட் கார்டு கடன் வசூலிக்கும் நபர், தனக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி ரேஷ்மி மேனன் உதவி கேட்கிறார்.

இதனால், அந்த நபரை பின்தொடரும் பாபி சிம்ஹா, அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று நெருங்கியபோது, அவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். அவர் பாபியின் நண்பர் கலையரசனின் தம்பி என்பதால், அவர்களுக்குள் பகை ஏற்படுகிறது.

தம்பியின் சாவுக்கு காரணமானவர்கள் பற்றி விசாரித்த கலையரசன், தம்பியை பின்தொடர்ந்து சென்ற பாபியையும் உண்மையான கொலையாளிளையும் பிடித்து தனி இடத்தில் அடைத்து வைக்கிறார். உண்மை அறிந்து, அங்கிருந்து தப்பிச் சென்ற பாபி, நேரடியாக கலையரசனுடன் மோத ஆரம்பிக்கிறார்.

பின்னர் தன்னிடம் உள்ள ஜென்ம புத்தகத்தை படித்தபோது, தனது முன்ஜென்ம வரலாறு அதில் இருந்தது. முதல் ஜென்மத்தில் நண்பரா இருந்து காட்டிக்கொடுத்த கலையரசன், இரண்டாவது ஜென்மத்திலும் வழக்கறிஞரான தன்னை நண்பனாக இருந்து காட்டிக்கொடுத்து சாவுக்கு காரணமாக இருந்தது தெரியவருகிறது. இவர்களின் ஜென்ம பகை தீர்ந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் பாபி சிம்ஹா இரண்டு தோற்றங்களில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வக்கீல் தோற்றத்தில் மிடுக்காக வந்து மனதில் நிற்கிறார். ரேஷ்மி மேனனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும், அழகுப் பதுமையாக வந்து ரசிகர்களை சுண்டியிழுக்கிறார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடிப்பிலும் சபாஷ் பெறுகிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் கலையரசன். கதா நாயகனுக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறுப்பை உணர்ந்து சரியாக செய்திருக்கிறார். அப்புக்குட்டி, மனோ பாலா, சார்லி, காளி என சிறுசிறு கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

பெரிய படங்களில் பயன்படுத்தப்படும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை, சிறிய பட்ஜெட் படத்தில் முதல் முறையாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் சக்திவேல். மூன்று தலைமுறை கதைகளை சிறப்பாக தொகுத்திருந்தாலும், நீளமான காட்சிகளை தவிர்த்து, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். தரமான படத்திற்குண்டான காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவுக்கும் சபாஷ் போடலாம்.

மொத்தத்தில் ‘உறுமீன்’ சரியான இலக்கு.

சீரியஸ் ஹீரோவான விஜய் ஆண்டனி

நான், சலீம், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் பிச்சைக்காரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டது. சொல்லாமலே சசி இயக்கியுள்ள இந்த படமும் இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம் படங்கள் வரிசையில் ஒரு சமூக பிரச்சினையை உள்ளடக்கிய கதையில் உருவாகியிருக்கிறது. அதோடு முதல் இரண்டு படங்களிலும் சீரியசான கதையில் நடித்த விஜய் ஆண்டனி, அந்த முத்திரையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா பாகிஸ்தான் படத்தில் காமெடி கலந்த காதல் கதையில் நடித்தார். ஆனால் விஜய் ஆண்டனிக்கு அது பெரிதாக கைகொடுக்காததால், மறுபடியும் சஸ்பென்ஸ் திரில்லர் நாயகனாகவே உருவெடுத்திருக்கிறார்.

அந்த வகையில், இந்த பிச்சைக்காரன் படத்திலும் விஜய் ஆண்டனியை சீரியஸ் நாயகனாகவே பார்க்கலாம் என்கிறார்கள். ஒரு இளைஞன் பிச்சைக்காரன் கெட்டப்பில் சமூக விரோதிகளை எப்படி களையெடுக்கிறார் என்பதுதான் இந்த படமாம். தற்போது அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து விட்ட இப்படத்தை, டிசம்பர் மாதம் இறுதியில் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிச்சைக்காரன் படத்தில் நடித்து வந்தபோதே, சைத்தான் படத்திலும் நடித்து வந்த விஜய் ஆண்டனி, இப்போது அந்த படத்தையும் முடித்து விட்டார். இன்னும் பத்து நாட்கள்தான் படப்பிடிப்பு நடக்க வேண்டி யுள்ளதாம். அதனால் பிச்சைக்காரன் திரைக்கு வந்து இரண்டு மாதங்களிலேயே சைத்தான் படமும் திரைக்கு வந்து விடுமாம். மேலும், சைத்தான் படப்பிடிப்பு முடிந்ததும் திருடன் படவேலைகளிலும் இறங்குகிறாராம் விஜய் ஆண்டனி. அந்த படத்திலும் அவருக்கு மிக சீரியசான வேடம்தானாம். ஆக, இப்போது நடித்துள்ள பிச்சைக்காரன் மற்றும் சைத்தான், திருடன் ஆகிய மூன்று படங்களிலுமே விஜய் ஆண்டனிக்கு படு சீரியசான வேடங்கள்தானாம்.