Thursday, December 31, 2015

பாயிண்ட் பிரேக் - படம் எப்படி?

தலை சுற்ற வைக்கும் பாறை முகடுகள், கப்பலையே சுழற்றி அடிக்கும் ராட்சத அலைகள் இதற்குள் நடக்கும் திக் திக் திக் நிமிடங்கள் தான் பாயின்ட் பிரேக்.

ஹீரோ ஜானி தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்துகொண்டிருக்கும் வேளையில் எதிர்பாரா விதமாக நண்பன் தவறி விழுந்து இறக்க, அதோடு சாகச விளையாட்டுகளை விட்டுவிட்டு துப்பறியும் நிபுணராக வேலை செய்கிறார். இந்நேரத்தில் தான் அரசாங்கத்தின் சொத்துகள், விலைமதிப்புடைய பொருட்கள் என மூன்று சாகச வீரர்கள் கொண்ட குழு கடத்தி அதை ஏழை மக்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

இவர்கள் யார் என கண்டறியும் பொறுப்பு ஹீரோ வசம் வருகிறது. தேடுதல் வேட்டையில் குறிப்பிட்ட குழுவிலேயே ஒருவராக மாறி அவர்களுடன் இணைந்து சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டே அவர்களைக் கண்காணிக்கிறார் ஹீரோ ஜானி. எதிரி டீம் வைக்கும் ஒவ்வொரு சவாலும் மயிரிழையில் உயிர் போகும் சாகசங்களாக திக்குமுக்காட வைக்கிறது. இதற்கிடையில், தான் வந்த வேலையை சற்றே மறந்து சாகச டீமில் இருக்கும் பெண்ணைக் காதலிக்க காவல் துறை உஷார் ஆகி ஹீரோவுக்கு இன்னும் நெருக்கடி தருகிறது.

திருட்டுக் கும்பலை பிடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ஹீரோ களத்தில் இறங்கி அவர்களுடன் இணைந்து செயல்பட்ட பழக்கத்தால் சுலபமாகவே இருப்பிடத்தைப் அடைந்து விடுகிறார். எனினும் சாகச வீரர்களின் நோக்கமே பயத்தை உடைத்து மரணத்துக்கே சவால் விடுவது என்ற ரீதியில் ஒவ்வொருவராக வீபரீத விளையாட்டில் மரணத்தை அடைய கடைசியாக மிஞ்சுகிறார் குழுவின் தலைவன். பல அரசாங்க அதிகாரிகளை கொலை செய்து, அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்திய வில்லனை ஹீரோ பிடித்தாரா இல்லையா என்பது மீதி கதை.

’இது என்னோட பாதை , என்னை முடிக்க விடு’ என சொல்லி விட்டு துணிச்சலாக ராட்சத அலைகளுக்குள் ஸர்ஃபிங் செய்வது, ரெடியா எனக் கேட்டு விட்டு மலை உச்சியில் இருந்து அப்படியே பறப்பது, உயரமான பனிப்பள்ளத்தாக்குகளில் முரட்டுத்தனமாக சறுக்குவது என ஆக்‌ஷன் சாகசங்களை 3டி அனுபவத்தில் பார்க்கும்போது மெகா பரவசம்.

ஒவ்வொரு முறையும் உயரமான மலைகளில் இருந்து நாமே எட்டிப்பார்த்தால் எப்படி இருக்குமோ அந்த உணர்வுகள் அவ்வப்போது நமக்கு எட்டிப்பார்ப்பதும் நமக்கு பயம் உண்டாவதையும் தடுக்க முடியவில்லை எனலாம்.

மூவர் குழு இணைந்து விமானத்தில் கொண்டு செல்லப்படும் பணத்தை அப்படியே காற்றி பறக்க விடுவது 3டி அட்டகாசம். பயங்களின் புள்ளிகளை சர்வசாதாரணமாக உடைத்து தயவு செய்து யாரும் இதை முயற்சி செய்ய வேண்டாம் என நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு 3டி அனுபவங்களை கொடுத்து எண்டு கார்டு போடுகிறது பாயிண்ட் பிரேக்.

எனினும் இதன் ஒரிஜினல் வெர்ஷனான கீனு ரீவ்ஸ், பேட்ரிக் ஸ்வெய்ஸி நடித்த பழைய பாயிண்ட் பிரேக்கை பார்த்தவர்களுக்கு இந்தப் படம் சின்ன ஏமாற்றத்தைத் தரலாம்!

0 comments:

Post a Comment