Thursday, December 31, 2015

எத்தனை வருஷமானாலும் திருந்தாத தமிழ்சினிமா காட்சிகள்!!!

தமிழ் சினிமாவுக்கென்று தவிர்க்க முடியாத சில காட்சிகள் உண்டு. கொஞ்சம் ரீல் ஓட்டலாமா?

உருட்டுக் கட்டை அடி காட்சிகள்:

தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு காட்சியைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை சுந்தர்.சி அவர்களையே சேரும். ஆமா பாஸ், தலையில் உருட்டுக் கட்டையால் அடித்தால் மயக்கம் வரும் என்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாச்சே அவர். கல்யாணத்தை நிறுத்தும் காட்சியில் மாப்பிள்ளையை கடத்தணுமா அல்லது பெண்ணைக் கடத்தணுமா என பக்காவா ஸ்கெட்ச் போட்டு, எடுடா அந்த உருட்டுக் கட்டையை என்று ஆளாளுக்குக் கட்டையும் கையுமாகக் கும்பல் கும்பலா சுத்துவாங்க. போற போக்கைப் பார்த்தா க்ளோராஃபார்முக்கு வேலையே இருக்காது போல!

மொட்டை மாடிக் காட்சிகள்:

ஹீரோ மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு காத்தாடிக்கு மாஞ்சா போடுறதோட சேர்த்து தன் லவ்வுக்கும் மாஞ்சா போடுவார். மணிக்கணக்கா கடலை போடுவதற்கு ஹீரோ, ஹீரோயினுக்கு ஏற்ற இடமும் அதுதான். ஒருவேளை அந்த ஹீரோ தனுஷா இருந்தா புறாவை வைத்தே மொட்டை மாடியிலிருந்து லவ்வை டெவலப் பண்ணுவார். பெரும்பாலும் பாட்டுப் பாடும் ஹீரோக்களுக்கு மட்டும்தான் மொட்டைமாடி வாடகைக்கு விடப்படும். முன்பு முரளி, சின்னிஜெயந்த், தாமு போன்றவர்கள் தங்கியிருந்தாங்க. அவங்க காலி பண்ணிட்டுப் போனதுக்கு அப்புறம் சந்தானம், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் போன்ற புதிய பேச்சுலர்கள் வாடகைக்கு வந்திருக்காங்க. சந்தானம் குடியிருந்தா, அங்கே குடி குடியைக் கெடுக்கும் ஸ்க்ரோலிங், சென்ஸார் போர்டைக் கேட்காமல் ஆட்டோமேட்டிக்கா அதுவாகவே ஓடும் பாஸ்!

தூக்குப் போட்டு சாகும் காட்சிகள்:

அது ஏன் பாஸ், தூக்குப் போடுறவங்க எப்போதும் ஒழுங்கா கதவை சாத்தவே மாட்டேங்கிறாங்க. காப்பாத்த யாராவது வந்து இரண்டு தட்டு தட்டினாலே உடனே படக்குனு திறந்திடுது. இனிமேலாவது கவனமா பூட்டிட்டு ட்ரை பண்ணுங்க. அப்படியும் சில படங்களில் கதவைத் திறக்க முடியாதபோது கேமராவைக் கொண்டுபோய் அவருடைய காலுக்கு அடியில் வைத்து கால் துடிப்பதை டெர்ரர் பேக் ரவுண்ட் மியூஸிக்கோடு காட்டி பார்க்கிறவங்க பி.பி-யை எகிற வைப்பாங்க.

விஷம் குடிக்கிற காட்சிகள்:

இதுதான் செம காமெடி பாஸ். பாட்டில் மேலேயே விஷம்னு சிகப்பு கலர்ல தமிழ்லேயே எழுதியிருக்கும். ஹீரோயின்களுக்கு மட்டுமே இது கொடுக்கப்படும். ஆனா அதை அவ்வளவு சீக்கிரமா வில்லன்கள் கொடுக்க மாட்டாங்க. சேர்ல உக்கார வெச்சு ஏன் இந்த விஷத்தை உனக்குக் கொடுக்கிறோம்னு ஒரு காரணத்தைச் சொல்லி அரைமணி நேரம் ஃப்ளாஷ்பேக் போயிட்டு வந்துதான் வாயிலேயே ஊத்துவாங்க. அந்த விஷத்தை வேணாம் வேணாம்னு சொல்லிக்கிட்டே சப்புக்கொட்டிக் குடிப்பாங்க நம்ம ஹீரோயின்கள்!

துப்பாக்கிச் சண்டைக் காட்சிகள்:

இது இல்லாத தமிழ் சினிமாவா? ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் ஹீரோ சுடும் தோட்டாக்கள் அனைத்தும் குறி தவறாமல் வில்லன்கள் மேலே படும். ஆனால் வில்லன்கள் என்னதான் கிலோ கணக்கில் தோட்டாக்களை லோடு செய்து சுட்டாலும் ஒரு தோட்டாகூட ஹீரோ மேலே படாது. ஹீரோ முதலில் நான்கு பேரை மட்டும் அப்படி சுட்டுக் கொன்றுவிட்டு. மீதி இருப்பவர்களைக் கைகளாலேயே அடித்து உதைப்பார். க்ளைமாக்ஸ் நெருங்கும்போது மீண்டும் துப்பாக்கியைக் கையில் எடுத்து விடுவார். வில்லனும் துப்பாக்கியோடு அவர் எதிரே நிற்க இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் சுடுவார்கள். இருவர் துப்பாக்கியிலும் தோட்டா இருக்காது. உடனே ஹீரோ ‘உன்னைக் கொல்ல எனக்கு எதுக்குடா துப்பாக்கி என் கையே போதும்’ என முஷ்டியை முறுக்குவார். கோ இன்சிடென்டுங்கிறது இதுதானா பாஸ்!

கோர்ட் காட்சிகள்:

இந்தக் காட்சிகளில் ஜட்ஜ், வக்கீல்களைவிட முக்கியமானவர்கள் கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்க்க உட்காந்திருக்கும் பொதுமக்கள் என்கிற ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள்தான். வக்கீல் காமெடியா பேசும்போது கூட்டமா சேர்ந்து சிரிக்கணும். அதுக்கு ஜட்ஜ் ஐயா ஆர்டர் சொல்லும்போது எல்லாரும் ஒரே நேரத்தில் அமைதியாகணும். வக்கீல் முக்கியமான ஒரு பாயின்ட்டைப் பிடிச்சு எதிரணியை கலா மாஸ்டர் ரேஞ்சுக்கு கிழி கிழினு கிழிக்கும்போது ‘சூப்பர் தலைவா’ என கூட்டத்திலிருந்து திடீரென ஒருவர் எழுந்து நின்று கத்த வேண்டும். இப்படி ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கு பாஸ் அவங்களுக்கு. எத்தனை ஷங்கர் படம் பாத்திருப்போம்!

மீடியாக்கள் வரும் காட்சிகள்:

நடந்த சம்பவம் பற்றி விளக்கமாக, விரிவாக மீடியாவிடம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பார் போலீஸ் கமிஷனர். இடையில் ஒரு பத்திரிகைகாரர் வீம்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அவரை வம்புக்கு இழுக்க, கேப்டன் மாதிரி அவர் கடுப்பாகி நோ மோர் கொஸ்டீன்ஸ் என்று மைக்கை தூக்கியடித்துவிட்டுக் கிளம்புவார். இருந்தாலும் அவர் பின்னாடியே மைக்கோடு ‘சார் சார்’னு துரத்திக்கிட்டே ஓடுவாங்க மீடியா பீப்பிள்ஸ். ஆனா அதுக்கு முன்னாடிதான் அரைமணி நேரம் அந்த விஷயத்தைப் பற்றி விளக்கமா சொல்லியிருப்பார் கமிஷனர். இருந்தாலும் விடாம அவரைத் துரத்துவாங்க. அப்படியே பழகிட்டாங்க பாஸ்!

ரயில்வே லெவல் கிராஸிங் காட்சிகள்:

தமிழ் சினிமா, ஹாலிவுட்டையே மிஞ்சிவிடும் அளவுக்கு அதிசயங்கள் நடக்கும் இடம் பாஸ் இது. வில்லன்கள் முதலில் ஓட ஹீரோ அவர்களை விரட்டிக்கொண்டு பின்னாலேயே வருவார். வில்லன்கள் முதலில் லெவல் கிராஸிங்கைத் தாண்டி விடுவார்கள். அடுத்து ஹீரோ தாண்ட நினைக்கும்போது திடீரென எந்தப் பக்கத்திலாவது இருந்து ஒரு ரயில் வந்து குறுக்கே பாயும். ரயில் வந்தா நம்ம ஹீரோ சும்மா இருப்பாரா, அவர்தான் ஆக்‌ஷன் ஹீரோவாச்சே. பக்கத்துல நிற்கிறவன் பைக்கைக் கடன் வாங்கி ஒரே தாவா தாவி இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவே பாய்ந்து மைக்ரோ செகண்டில் அடுத்த பக்கத்தில் வெளிவந்து விடுவார். சில சமயங்களில் ரயிலுக்கு மேலே அந்தரத்தில் பறந்து குரளி வித்தை காட்டவும் செய்வார்!

0 comments:

Post a Comment