Sunday, December 27, 2015

பூலோகம் தன்னை தானே சுற்றி, ரசிகனையும் சுற்ற வைத்து மகிழ வைக்கிறது-திரை விமர்சனம்.

வட சென்னையின் குத்து சண்டை அரசியல்தான் ‘பூலோகம்’! போன தலைமுறையில் மிச்சம் வச்ச நெருப்பை, மறு தலைமுறையும் சுடசுட தொடர்ந்தால் என்னாகும்? நிஜத்தை பெருமளவும், கற்பனையை சிறிதளவும் மிக்ஸ் பண்ணி பலத்த குத்தாக குத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

ராசமாணிக்கம் பரம்பரைக்கும், நாட்டு மருந்து பரம்பரைக்கும் நடுவே நடக்கும் குத்து சண்டை போட்டிதான் இரு கோஷ்டிகளுக்கான கவுரவம்! போட்டியினால் ஏற்பட்ட தோல்விக்கு வெட்கப்பட்டு தூக்கில் தொங்கிவிடுகிறார் ஜெயம் ரவியின் அப்பா. குழந்தையாக இருக்கும்போதே, சாவுக்கு காரணமான மற்றொரு பரம்பரை குத்து சண்டை வீரனை ஜென்ம எதிரியாக நினைக்கிறார் ரவி. வளர்ந்து பெரியவனாகி (?) (நிஜமாகவே மனுஷன் கட்டுமஸ்தாக தளும்பி நிற்கிறார்) தன் அப்பா சாவுக்கு காரணமானவரின் மகனை போட்டுத் தாக்குகிறார். ஆச்சர்யம் என்னவென்றால், அந்த சண்டையே அவரை போரில் மனம் திருந்திய அசோக சக்கரவர்த்தி போலாக்குகிறது. இனி சண்டையே வேண்டாம் என்று கிளம்புகிறவரை, வம்புக்கு இழுக்கிறது லோக்கல் சேனல் ஒன்று.

திட்டமிட்டு வேறொரு சாம்பியனுடன் மோத வைத்து, அதை லைவ் டெலிகாஸ்ட் செய்கிறார்கள். அங்கும் தான் ஏமாற்றப்பட, வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார குத்துசண்டை வீரன் ஒருவனுடன் மோத வேண்டிய சூழலை வலிய உருவாக்குகிறார் ஜெயம் ரவி. எருமை கிடா வெயிட்டும், ஒட்டகத்தின் உயரமும் கொண்ட அந்த வெள்ளைக்காரனை இவர் எப்படி வெற்றி கொண்டார் என்பதுதான் க்ளைமாக்ஸ். நடுவில் வரும் ஜெயம் ரவி த்ரிஷா காதல், பற்பசை ட்யூபின் மூடியளவுக்கு கூட பிரயோஜமில்லை என்பதெல்லாம் இந்த படத்திற்கு தேவையில்லாத ஒன்று. காதலே இல்லையென்றாலும் இந்த படத்தின் சுவாரஸ்யம் குன்றிமணியளவுக்கு கூட குறைந்திருக்கப்போவதில்லை!

உள்ளூர் மேளத்திற்கு பிறகு பூ வைக்கலாம். முதலில் வெளிநாட்டு வில்லனை பற்றி பேசிவிடுவோம். நாதன் ஜோன்ஸ்! ஏர்போர்ட்டில் வந்து இறங்கும்போதே, நம் உள்நாட்டு மியூசிக்குக்கு லேசாக தலையாட்டியபடி நடந்து வரும் அழகென்ன? தனக்கு பார்சலில் பெண் உடையை அனுப்பிய ரவியை தேடி, அதே பெண் உடையில் தேடி வந்து ஏரியாவை கதிகலங்க அடிப்பதென்ன? வேர் இஸ் பூலோகம்… என்று வெறிகொண்டு திரிவதென்ன? ஒட்டவே ஒட்டாத முகமாக இருந்தாலென்ன? நமக்கும் பிடித்துப் போகிறது அவரை. சண்டையில் இந்த மாமிச மலையை ஜெயம் ரவி புரட்டி எடுப்பது போல நினைப்பதே கூட பொருத்தமற்றதுதான். ஆனால் அதையும் நம்ப வைக்கிறார்கள் திரைக்கதையாளரும், பைட் மாஸ்டரும்!

ஜெயம் ரவிக்கு பனிரெண்டு ஜாதக கட்டத்திலும், வெற்றி மாதா உட்கார்ந்து அருள் பாலிக்கிறாள் போலும்! சொல்லி சொல்லி அடித்திருக்கிறார் பூலோகத்தில். போட்டியில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட தன்னுடன், நாதன் ஜோன்சை மோத வைக்க அவர் செய்யும் தந்திரங்கள் எல்லாமே ‘கிளாப்ஸ்’ ஏரியா. அதே போல அந்த குத்துசண்டை போட்டிக் களத்தில், சற்றே துள்ளலாக குதித்து பல வருஷ பகையை கண்களில் காட்டி, முரட்டு வேகத்துடனும், அசுர பலத்துடனும் அவர் மோதுவதெல்லாம் நார் தசைப்பிடிப்பு சமாச்சாரம்! (ஷுட்டிங் நடந்த தினங்களில் ஐயோடெக்சில் குளித்து, அமிர்தாஞ்சன் ஸ்டிராங்கில்தான் பல் விளக்கியிருப்பார் போல) நடுவில் ஒரு பாடலில் இவர் மயான கொள்ளையில் சாமியாடுவதாக வேறு காட்டுகிறார்களா? ஏதோ அம்மனே நேரடியாக வந்து குத்து சண்டை போட்டியில் இறங்கிவிட்டதை போல திடுதிடுக்கிறது தியேட்டர்.

நீ பொறுக்கின்னா, நான் எச்சப் பொறுக்கி… என்று பிரகாஷ்ராஜ் டயலாக் பேசினால், எப்படியிருக்கும்? ஆரவாரமாகிறது தியேட்டர். அதற்கேற்ற கேரக்டர்தான் அவருக்கும். கார்ப்பரேட் முதலாளிகள், எப்படியெல்லாம் நெருக்கடி தந்து தன் வசம் இழுக்கிறார்கள் என்பதை, கம்யூனிச சிந்தனையோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். காற்றைலையை எப்படி பணமாக்கலாம் என்று அவர் போடுகிற கணக்குகளை, நிகழ்கால போட்டிகளோடு ஒப்பிடத் தயங்காது மனசு.

மச்சம் காட்டுகிறார் த்ரிஷா. நடுநடுவே, ஆமாம்… இந்த படத்துக்குன்னு ஒரு ஹீரோயின் இருக்காருல்ல? என்று நினைத்துக் கொண்டு காண்பிக்கிறார்கள் அவரை. பட்… ஓ.கேம்மா!

வசனம் பிரபல இடதுசாரி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆயுதத்தை தீட்டி மார்க் போட்டுக் கொண்டேயிருக்கிறார். அவ்வளவும் நியாயம். “சந்தேகப்படணும், நமக்கு நல்லது செய்றோம்னு சொல்லிட்டு செய்ற எல்லா விஷயங்களையும் நாம சந்தேகப்படணும்” போன்ற வசனங்கள் ஒரு ஸ்மால் உதாரணம். முக சிவப்பழகு கிரீம் கம்பெனியையும் விட்டு வைக்க வில்லை ஜனநாதனின் வசனங்கள்.

மரண கானா, மயானக் கொள்ளை பாட்டு என்று ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பொறுத்தமான கொலக் குத்துப்பாடல்கள்தான் படத்தில். பின்னணி இசையிலும், லேசாக கவனிக்க வைக்கிறார் சன் ஆஃ தேவா!

சதீஷின் ஒளிப்பதிவு, திரைக்கதையோடு சேர்ந்து கொண்டு விறுவிறுவென நகர்கிறது. படத்தையும் நகர்த்துகிறது.

இப்படியொரு விறுவிறு ஆக்ஷன் படம் ஏன் இத்தனை நாட்கள் பொட்டியில் உறங்குச்சு என்பதுதான் பெரிய சந்தேகம்… ஒருவேளை பிரகாஷ்ராஜ் மாதிரியான கார்ப்பரேட் கலகங்கள் காரணமாக இருந்திருக்கலாம்.

எனிவே… பூலோகம் தன்னை தானே சுற்றி, ரசிகனையும் சுற்ற வைத்து மகிழ வைக்கிறது.

0 comments:

Post a Comment