Thursday, December 3, 2015

தனியார் பஸ்களில் கட்டணக் கொள்ளை ? ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்கு உயர்வு ! என்னவாகுமோ சென்னை...

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாது பொதுமக்கள் திகைத்து வருகின்றனர்.

சென்னையில் விடாது விரட்டி விரட்டி பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். பலர் முகாம்களில் தங்கியுள்ளனர். மழையும் விடாது கொட்டித் தீர்த்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இதற்காக பெருங்களத்தூரில் நேற்று இரவு முதல் பயணிகள் காத்திருக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடைக்கும் ஓரிரு பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் அந்த பகுதியாக வரும் லாரிகளில் பெண்கள் உட்பட பலர் ஏறி செல்கின்றனர். இந்த நெருக்கடியை பயன்படுத்தி தனியார் பஸ்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு செல்ல ரூ.1500ம், வந்தவாசி செல்ல ரூ.1000 வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம், வந்தவாசிக்கே இந்த கட்டணம் என்றால் மற்ற ஊர்களுக்கு சொல்லவா வேண்டும் என பலர் மீண்டும் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சென்னையில் ஈக்காட்டுதாங்கல், அரும்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர். மேலும், பலர் அரசு, தனியார் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்குச் சென்றனர்.

பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்து வருவதால், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தனியார் விடுதிகள் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்னவாகுமோ சென்னை...

0 comments:

Post a Comment