
நேற்று முன்தினம் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி வெள்ளக்காடானது. இதனால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டன.
பேருந்துகள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லவிருந்த 25 பயணிகள் குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்தனர். அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ரதிமீனா டிராவல்ஸை அணுகி சிதம்பரத்திற்கு ஒரு பேருந்தை இயக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் பரிதாப நிலையை பார்த்த அலுவலக அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசி பேருந்தை இயக்க அனுமதி பெற்றனர்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு 25 பேருடன் ரதி மீனா பேருந்து சிதம்பரத்திற்கு கிளம்பியது. மகாபலிபுரம் சாலை வெள்ளக்காடானதால் பேருந்துகள் எல்லாம் திண்டிவனம் - செங்கல்பட்டு சாலைக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் ரதி மீனா பேருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து திண்டிவனத்தை அடைய இரவு 10 மணி ஆனது.
வெள்ளத்தை பார்த்து பயத்தில் இருந்த பயணிகளை பேருந்து ஓட்டுநர்கள், கிளீனர்கள் தேற்றியதோடு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
மேலும் பயணிகளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று நிறுவன செலவில் உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். உணவுக்கு பிறகு கிளம்பிய பேருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக சென்று இரவு 1 மணிக்கு சிதம்பரத்தை அடைந்துள்ளது.
வெள்ளத்தை காரணம் காட்டி ஆம்னி பேருந்துகள் பகல் கொள்ளை அடிக்கையில் ரதி மீனா டிராவல்ஸ் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு உணவும், தைரியமும் கொடுத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது பாராட்டுக்குரியது.
0 comments:
Post a Comment