Thursday, December 3, 2015

உங்களை நீங்களை காப்பாற்றினால்தான் உண்டு: அப்துல் கலாம் உதவியாளர் விளாசல்... மீட்பு பணி தோல்வி..

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிலையில், உங்களை நீங்களே காப்பாற்றிக்கொண்டால்தான் உண்டு என்று, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் நேற்று காலை, பொன்ராஜ் கூறியிருந்ததாவது:

தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள். 108-டை உடனடியாக சென்னை மக்களை காப்பாற்றும் ஒரே நம்பராக அறிவியுங்கள். ‪ஒரு சேவை நோக்கம் கொண்ட திறமையான அதிகாரிக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர் சொல்வதை ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழக ஆட்சித்தலைவர்களுக்கு ஒரே இடத்தில் அத்துணை 108 அழைப்புகளையும் ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்களை இணைத்து உதவ ஏற்பாடு செய்யுங்கள்.

HAM Radio operators ஐ பயன்படுத்துங்கள். 108 மற்றும் FM ரேடியோ மூலம் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்து தண்ணீரால் சூழப்பட்ட மக்களை மீட்க ஏற்பாடு செய்யுங்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமானங்களை உடனடியாக தண்ணீர் நிரம்பியிருக்கும் தாழ்வான பகுதிகளுக்கு அனுப்புங்கள், அதில் இருந்து வரும் வீடியோ மூலம் ஒருங்கிணைந்த மீட்புப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

அமைச்சர்கள் பார்வையிட இன்று செல்ல வேண்டாம். தயவு செய்து அவர்களை நீங்கள் மக்கள் மற்றும் உதவும் இளைஞர்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு தேவையான உதவிகள் சென்று அடைந்ததா என்பதை மட்டும் ஒழுங்காக அதிகாரிகளை கொண்டு செயல் பட வையுங்கள். மீனவர்களை பயன் படுத்தி படகுகளை செயல் பட நடவடிக்கை எடுங்கள்.

இதையெல்லாம் தமிழக அமைச்சர்கள் செய்த மாதிரி தெரியவில்லை. இப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. நேற்று இரவில் இருந்து வரும் எந்த அழைப்புகளுக்கும் சரியான பதில் அரசு கொடுத்த எந்த போன் நம்பரும் பதிலளிக்கவில்லை. எனவே இந்த வேண்டுகோள் பலன் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், குறைந்த பட்சம் இதை இன்று மதியத்திற்குள் செயல் படுத்தினால், உயிர் பலியை தடுக்கலாம்.

செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் உங்களை தொடர்பு கொள்ள செய்யும் எந்த முயற்சியும் உங்களை சுற்றியுள்ள அதிரிகாரிகளால் தடுக்கப்படுகிறது. எனவே தான் இதை நான் எழுதிகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், முடிந்தால் உங்களை நீங்களே காப்பற்றிக்கொள்ள வேண்டியது தான் - பேரிடர் மீட்பு தோல்வி என்று தெரிவித்துள்ளார்.

அவர் இன்று மேலும் கூறியுள்ளதாவது: இப்படி சொல்வதை தவிர என்ன செய்வது என்று தூரத்தில் இருக்கும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், நேற்று சென்னையின் மையப்பகுதிகளில் மழைபெய்யாமல் இப்படிப்பட்ட வெள்ளம் வரலாறு காணாதது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட விருக்கிறது ஆற்றோரம் இருக்கும் மக்கள், சைதாப்பேட்டை, அசோக் பில்லர், ரங்கநாதன் மேம்பாலம் போன்ற பகுதிகள் - அதாவது சென்னையின் மையப்பகுதியை சேர்ந்த மக்கள் இதுவரை இப்படி பட்ட வெள்ளத்தை பார்த்ததில்லை.

நேற்று மழையும் இல்லை - அப்படியிருந்தும் ஏரி திறக்கப்பட்டதால் 30000 கனஅடிக்கும் மேற்பட்ட தண்ணீர் இந்த பகுதிகளை எல்லாம் சூழ்ந்து கொள்ளும் என்றும் மக்களுக்கு எப்படி தெரியும்.

இல்லை அரசு எல்லோரும் பார்க்கும் ஊடகங்களில் முறையான அறிவிப்பு வெளியிட்டு மக்கள் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்களா, இல்லை அரசு அறிவிப்பே மக்களை சென்றடையும் முறையில் வெளியிடவில்லையா.

ஆற்று நீரோட்டம் வேகமாக போகும்போது படகில் மீட்க முடியாது. குறைந்த பட்சம், முக்கியமான சான்றிதழ்களை, பணத்தை மட்டுமாவது எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி விட்டு மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்குமே.

என்ன சொல்வது. தலைமச்செயலகம் இருக்கும் சென்னைக்கே இந்த நிலைமை என்று சொன்னால் - கடலூர் மக்கள் பாவம், மற்ற கடலோர மாவட்ட மக்கள் அனுபவிக்கும் வேதனையை சொல்லி முடியாது.

சென்னை நண்பர்கள் இரவும் பகலும் தொடர்ந்து உதவி செய்யும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் கேட்கும் உதவியை, எந்த அதிகாரப்பூர்வ மான தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு மீட்பு பணியை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க வரும் படி தெரிவிக்க இயலவில்லை, யாரும் எந்த போனையும் எடுக்க வில்லை.
எடுக்கும் ஒரு நம்பர், தகவலை கேட்கிறார் ஆனால் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். ஏனென்றால் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் மட்டும் தான் பரிமாற முடிகிறதே தவிர, யாராலும் எந்த வித உதவியும் செய்ய முடியாத நிலை இருக்கிறது என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

இருப்பினும், இராணுவம் களத்தில் இறங்கி படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை முடிந்தளவு காப்பாற்றும் மற்றும் மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள், தன்னார்வ தொண்டர்கள், அந்த அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் தான் சென்னை மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.

பாவம் சென்னை மற்றும் கடலூர் மக்கள் - அதிலும் பாவம் குடிசையில், மற்றும் தரைதளத்தில் வசிக்கும் மக்கள். இரண்டாவது, மூன்றாவது மாடியில் உயிரை கையில் பிடித்துகொண்டு உதவிக்காக காத்திருக்கும் மக்களை கெலிகாப்படர் சென்று மீட்பதற்கான முகாந்திரம் ஏதும் தெரியவில்லை.

இராணுவ விமானங்கள் - உயிர்காக்கும் ஜாக்கெட்டை, ரப்பர் படகுகளை மேலிருந்து கீழே போட்டிருந்தால் கூட, தன்னார்வ தொண்டர்கள் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியிருப்பார்கள். எதுவும் நடக்கவில்லை என்ன சொல்லி என்ன பயன். எதுவும் நடக்கவில்லை. நாம் கற்றுக்கொண்ட பாடம்.

பேரிடர் மீட்பு தமிழகத்தில் நடக்காது என்று இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஏன் இந்தியாவிலேயே அது இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாகி விட்டது. பேரிடர் மேலாண்மை சுத்தமான தோல்வியில் முடிந்திருக்கிறது. பேரிடர் நிவாரணம் உயிரோடு இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். மழை வெள்ளம் வடிந்த பின். ..... என்ற உண்மையை சென்னை மழை உணர்த்தி விட்டது.

பேரிடர் வந்து 24 மணி நேரம் கழித்து தான் இராணுவம் இந்தியாவில் வரஇயலும், வந்த பின் பணியை துவக்க 12 மணி நேரம் ஆகும், அதுவும் முழுமையாக கிடைக்காது.

குடிசையின் கூரைமேலும் மக்கள் நின்று கொண்டு காப்பாற்றுங்கள் என்று செய்தி வருகிறது. மாடிவீட்டில் நின்று கொண்டு குழந்தைகளை, முதியவர்களை வைத்துக்கொண்டு காப்பாற்றுங்கள் என்று செய்தி வருகிறது. இப்படிப்பட்ட பேரிடர் வந்த இதுவரை 48 மணி நேரம் முடிந்து விட்டது.

இதுவரை 20 இராணுவ கெலிகாப்டரில் 2000 படகுகளை போட்டார்கள் அதன் மூலம் தன்னார்வ தொண்டர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டார்கள் என்று செய்தி வந்திருக்கிறதா. 1000 இராணுவ வீரர்கள் கெலிகாப்படரில் வீட்டு மாடியில் இறங்கினார்கள் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்றினார்கள் என்று செய்தி வந்திருக்கிறதா.

டிஜிட்டல் இந்தியா முழக்கத்தால் ஒரு ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண்ணை கொடுக்க முடியாது. இந்தியாவில் வேலை செய்யும் ஒரே கால் சென்டர் 108 இருந்தும், அதை பயன்படுத்தி மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க முடியாத மாநில ஆட்சி முறை நிர்வாகம்.

இந்தியாவின் ஒரு மாநிலத்தில், அதுவும் ஒரு மாநகரத்தில், அதுவும் ஒரு சில பகுதிகளில், அதுவும் ஆற்றோரத்தில் இப்படிப்பட்ட பேரிடர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சுனாமி மாதிரி தீடிரென்று வந்துவிட வில்லை.

கிட்டத்தட்ட 1 மாதமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. ஏரிகள் நிரம்பிவிட்டன. ஏரிகள் உடையும் மக்கள் மேடான இடங்களுக்கு சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை கூட இல்லை. அந்த காலத்தில் கிராமத்தில் தண்டோரா போட்டு மக்களை மழை வெள்ளத்தில் காப்பாற்றியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்கள் இருக்கும், தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் நாம்மால், நமது அரசால் பயன்படுத்த முடியவில்லை. அதன் மூலம் அங்கு சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற முடியாத பேரிடர் மேலாண்மை தான் இந்தியா கோடிக்கணக்கான நிதியில் இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் அடிப்படை உண்மையாக இருக்கிறது.

ஒவ்வொரு பேரிடருக்கும் பின்பே பாடம் கற்றுக்கொள்வோம், அதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்தை வைத்து அடுத்த பேரிடருக்குள் மக்களை காப்பாற்ற நம்மால் முடியாது என்றால் அது எப்படிப்பட்ட ஆட்சிமுறை நிர்வாகாம். இது கூடவா இந்தியாவால் முடியாது. பேரிடர் வந்தால் கையறு நிலையில் நிர்வாகம், காப்பாற்ற ஆளில்லா மக்கள், இது தான் இன்றைய நிலை, இதை நினைத்தால் கடவுளை கும்பிடுவதை தவிர சாதாரண மனிதனுக்கு வேறு என்ன இன்றைக்கு இருக்கிறது.

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே முடியும். எல்லா உதவிகளும், மாநில அரசிற்கு மத்திய அரசு செய்யும் ஆனால், எல்லாம் முடிந்தபின் தான் அது வந்து சேரும் என்றால் அதற்கு பெயர் பேரிடர் மேலாண்மை இல்லை.

எல்லாம் முடிந்தபின் வந்து பார்வையிடும் கடவுளாக மட்டுமே அவர்கள் இன்றும் காட்சியளிக்கிறார்கள். அந்த தரிசனத்திற்கு ஏங்கும் நாங்கள் இழி பிறவிகள் ஆனோம் என்று ஆதங்கத்துடன் வெளிப்பட்டஇரவு முழுவதும் முயற்சித்தும் யாரும் உதவிக்கு வராத நிலையில் நண்பர் தனபால் எழுதிய இந்த பதிவை பகிர்ந்து, இதன் மூலமாகவாவது மாட்டிக்கொண்ட மக்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் நலம் என்ற நப்பாசை மட்டும் தான்.

ஒன்றே ஒன்று மட்டும் தான், இன்னும் 2 நாளைக்கு கனமான மழை பெய்தால், ஏரிகள் உடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது, எனவே மக்களே அடையாறு கரையோரம் மற்றும் ஆற்று கரையோரம் இருக்கும் மக்கள் முடிந்தவரை மேடான பகுதிகளுக்கு சென்று உயிரைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள், உயிரோடு இருந்தால் தான், அரசு அமைக்கும் இல்லங்களில் சென்று உணவை சாப்பிட்டு உங்கள் உயிரைக்காத்துக்கொள்ள முடியும்.

கடவுள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை கடல் பக்கமாக திருப்பி தமிழக மக்களை, குறிப்பாக சென்னை, கடலூர் மக்களை காக்க வேண்டுவோமாக. கையறு நிலை. வேதனை... பாவம் மக்கள்.

0 comments:

Post a Comment