Monday, December 7, 2015

தாரை தப்பட்டையிலும் பாலா பிராண்ட் ஹீரோவா?


 பாலா படங்களின் ஹீரோக்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. அழுக்கு உடை, கரைபடிந்த பற்கள், நீண்ட தலைமுடி, ஆக்ரோஷமான கோபம். இதுதான் பாலா பட ஹீரோக்களின் தோற்றம். பாலாவின் ஹீரோ பாத்திர படைப்புகள் யதார்தத்திலிருந்து விலகி நிற்பவை என்ற விமர்சனம் உண்டு.

சேது படத்தில் தலையில் அடிபட்டு மனநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோவாக விக்ரம் நடித்தார், அதன் பிறகு பிதாமகன் படத்திலும் அழுக்கு உடை கறைபடிந்த பற்களுடன் வெட்டியானாக நடித்தார். நந்தா படத்தில் சூர்யா பூனைக்கண் குட்டை தலைமுடியென தாதாவாக நடித்தார். நான் கடவுள் படத்தில் ஆர்யா நீண்ட சடாமுடி, கஞ்சா புகைக்கும் வாய், அழுக்குப்படிந்த முகம் என அகோரியாக நடித்தார். பரதேசி படத்தில் அதர்வா இதுவரை யாரும் வைத்திராத சிகை அலங்காரத்துடன் நடித்தார். இப்படி பாலாவின் படங்கள் அனைத்திலும் ஹீரோக்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது சமூகத்தில் அரிதாக காணப்படும் மனிதர்களின் கதைகளை பாலா படமாக்கி வந்திருக்கிறார்.

தாரை தப்பட்டை தஞ்சை பகுதியில் வாழ்ந்து வரும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை சொல்கிற படம். இது பாலா படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றமாதிரிதான் படத்தின் போட்டோக்களும் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வரும் சசிகுமாரின் ஆக்ரோஷ படங்கள் இதுவும் பாலாவின் வழக்கமான ஹீரோ உருவாக்கமோ என்று எண்ணுகிற அளவிற்கு இருக்கிறது. என்றாலும் எதையும் படம் வெளிவந்த பிறகே அறுதியிட்டு கூறமுடியும்.

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் 'பீதி'யும் தமிழ் வலைப் பதிவரின் ஆறுதல் விளக்கமும்


மேலே: பிபிசி வெதர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடப் பதிவு. | கீழே: டிச.7 மாலை 5.50 மணியளவில் பிபிசி வானிலை வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு.

சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியுமா என்ற மன அவசத்தில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதிகாரபூர்வ வானிலை மைய எச்சரிக்கைகள் தவிர, பிபிசி வானிலை முன்னறிவிப்பும் தன் பங்குக்கு மக்களிடையே கணிசமாக கவனத்தைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும் புதன்கிழமை தொடங்கி சென்னையில் கனமழை மீண்டும் புரட்டியெடுக்கப்படவுள்ளதாக பிபிசி முன்னெச்சரிக்கையில் விளக்கப்படத்துடன், அதன் அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்ட அந்த ட்வீட், தமிழக இணையவாசிகளிடையே பெரும் பீதியை உண்டாக்கின.

இதையடுத்து, 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை நடத்திவரும் பிரபல தமிழ் வானிலைப் பதிவர், பிபிசி கணிப்புகளின் தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:

பிரிட்டனில் யுனைடெட் கிங்டம் வானிலை கணித மாதிரியைக் கடைபிடித்து முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உலக வானிலை முன்னெச்சரிக்கை மையம் (GFS) மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான ஐரோப்பிய மையம் ((ECMWF) ஆகியவற்றுக்கு அடுத்த படியாக பிரிட்டன் வானிலை மையம் 3-ம் நிலையில் உள்ளது.

பிரிட்டன் வானிலை மையத்திலிருந்து கணிப்புகள் ஒவ்வொரு 12 மணி நேரங்களுக்கும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரு கணிப்பில் மழை பெய்யும் என்றும், அடுத்த கணிப்பில் மழை இல்லை என்றும் காண்பிக்கப்படுகிறது. ஒரு பதிவில் கனமழை என்பார்கள்; அடுத்த பதிவில் மிதமான மழை என்பார்கள்.

இப்படியாக வரும் புதன்கிழமை முதல் கனமழை (கடைசியாக சென்னையை அடித்து விளாசியதுபோல்) என்று காண்பித்தது; ஆனால் தற்போது மிதமான மழை என்றே காண்பிக்கிறது. எனவே நாம் ஏன் பீதி கிளப்பும் முடிவுகளுக்கு வர வேண்டும். இந்நிலையில் இவர்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் வானிலை எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அனுபவமற்ற இவர்கள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு நம் உள்ளூர் வானிலை நிலவரம், வெள்ளத்துக்குப் பிறகான மக்களின் மனநிலை என்று எதுவும் அறியாமல் வானிலை முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

அக்குவெதர் குறித்து நாம் பேசினால், அவர்கள் காட்டும் காரணங்கள் சரியானதே. ஆனால், அது சென்னைக்கு மட்டும் உரித்தான முன்னெச்சரிக்கை அல்ல. அவர்களால் மிதமான மழையை கணிக்க முடியவில்லை. 17மிமீ மழை என்று கூறுகின்றனர். ஆனால் இது அச்சுறுத்தும் மழையா? என்ற கேள்வி எழுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, மேலடுக்கு ஆதரவின்றி அதிக அளவில் வறண்ட காற்று நிலவி வருகிறது. எனவே மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்புள்ளது.

நாம் மோசமானதைப் பார்த்துவிட்டோம், எனவே பிபிசி அல்லது அக்குவெதர் முன்னெச்சரிக்கைகள் பற்றி கவலைப்படாமல் நாம் நம் வேலையை கவனிப்போம்.

நம்மூர் ஊடகங்களும் இதற்கு பொறுப்பு. பிபிசி எச்சரிக்கைகளை இவர்கள் உடனடியாக வெளியிட்டு அப்பாவி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேனை பொறுத்தவரையில், தமிழ் இணைய உலகில் மிகவும் பிரபலமான வானிலை முன்னறிவிப்பு வலைப்பதிவர். சமீப நாட்களில் இவரது முன்னறிவிப்புகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. தற்போதைய நிலையில், இவரது பக்கத்தை 53 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இணைப்பு: https://www.facebook.com/tamilnaduweatherman

தராத பணத்திற்கு சண்டையிட்டு கொண்ட ரசிகர்கள்

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமா என பேச ஆரம்பித்தனர்.

சில தினங்களில் நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளிப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தனர். சில நடிகர்கள் அடுத்தடுத்து நிவாரணத் தொகை வழங்கினர்.

நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எல்லாம் உண்டு. அவர்கள் இந்த வெள்ள நிவாரணம் எதிலும் ஈடுபட்டதாக தகவலே இல்லை. தலைவர் மாதிரியே இவர்களும் அமைதியாகிவிட்டனர்.

அதன் பிறகு இந்த நடிகர் அவ்வளவு தந்தார், அந்த நடிகர் இவ்வளவு தந்தார் என்று அளந்துவிட்டார்கள் அவரவர் ரசிகர்கள். வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர் புண்ணியத்தால் வழங்காத பணமெல்லாம் நிவாரண நிதியாகக் குவிந்ததுதான் சோகம்.

நடிகர் விஜய் ரூ 5 கோடியுடன் காத்திருக்கிறார், தன் கல்யாண மண்டபங்களையெல்லாம் மக்களுக்கு திறந்துவிட்டார் என்றெல்லாம் தகவல் பரப்பினர். விசாரித்ததில் அவர் எந்த நிதியும் தரவில்லை மண்டபங்களையும் திறக்கவில்லை என தெரிய வந்தது. அதுவும் அந்த தேதிகளில் அந்த மண்டபங்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன.

அடுத்து அஜீத் ரூ 60 லட்சம் அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டைக் கூட மக்களுக்காக திறந்து வைத்தார் என்று றெக்கை கட்டிப் பறந்தது இன்னொரு செய்தி. ஆனால் அவரும் அப்படி எதுவும் தரவில்லையாம். பெருமழை நாளன்று அவர் வீடு பூட்டப்பட்டிருந்ததாம்.

கமல் எந்த நிதியும் வழங்கவில்லை. இப்படி வழங்காத நிதிக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி. இதற்கு முதல் காரணம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள்தான். இந்த பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு, இவரே இவ்வளவு கொடுத்துவிட்டார் அவர் ஏன் கொடுக்கவில்லை என்று இணையத்தில் சண்டையிட்டு கொண்டது தான் மிச்சம்.

எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்ததா ?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகம் வெளிவரும் என்று அப்போதே ஷங்கர் கூறி இருந்தார் .

இந்நிலையில் எந்திரன் 2 வை கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம் 300 கோடி ரூபாயில் செல்வவில் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் மிக பெரியஅளவில் ஏவிம்-மில் எந்திரன்2 படத்தொடக்கவிழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம்.

சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளப் பாதிப்புகள் காரணமாக அந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்புநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டு அலுவலகத்தில் பூஜை போட்டு மிக எளிமையாக நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களாம்.

இன்று பூஜை அதைத் தொடர்ந்து பதினான்காம்தேதி முதல் படப்பிடிப்பு என்று திட்டமிட்டிருந்தார்களாம். இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் கடந்த பல நாட்களாகவே நடந்துவருகிறது. மழை நிலவரத்தையொட்டி பதினான்காம்தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜனவரி தொடக்கத்தில் அல்லது பொங்கல் கழித்து, ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.