Monday, December 7, 2015

தாரை தப்பட்டையிலும் பாலா பிராண்ட் ஹீரோவா?


 பாலா படங்களின் ஹீரோக்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. அழுக்கு உடை, கரைபடிந்த பற்கள், நீண்ட தலைமுடி, ஆக்ரோஷமான கோபம். இதுதான் பாலா பட ஹீரோக்களின் தோற்றம். பாலாவின் ஹீரோ பாத்திர படைப்புகள் யதார்தத்திலிருந்து விலகி நிற்பவை என்ற விமர்சனம் உண்டு.

சேது படத்தில் தலையில் அடிபட்டு மனநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோவாக விக்ரம் நடித்தார், அதன் பிறகு பிதாமகன் படத்திலும் அழுக்கு உடை கறைபடிந்த பற்களுடன் வெட்டியானாக நடித்தார். நந்தா படத்தில் சூர்யா பூனைக்கண் குட்டை தலைமுடியென தாதாவாக நடித்தார். நான் கடவுள் படத்தில் ஆர்யா நீண்ட சடாமுடி, கஞ்சா புகைக்கும் வாய், அழுக்குப்படிந்த முகம் என அகோரியாக நடித்தார். பரதேசி படத்தில் அதர்வா இதுவரை யாரும் வைத்திராத சிகை அலங்காரத்துடன் நடித்தார். இப்படி பாலாவின் படங்கள் அனைத்திலும் ஹீரோக்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது சமூகத்தில் அரிதாக காணப்படும் மனிதர்களின் கதைகளை பாலா படமாக்கி வந்திருக்கிறார்.

தாரை தப்பட்டை தஞ்சை பகுதியில் வாழ்ந்து வரும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை சொல்கிற படம். இது பாலா படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றமாதிரிதான் படத்தின் போட்டோக்களும் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வரும் சசிகுமாரின் ஆக்ரோஷ படங்கள் இதுவும் பாலாவின் வழக்கமான ஹீரோ உருவாக்கமோ என்று எண்ணுகிற அளவிற்கு இருக்கிறது. என்றாலும் எதையும் படம் வெளிவந்த பிறகே அறுதியிட்டு கூறமுடியும்.

0 comments:

Post a Comment