Wednesday, December 30, 2015

விக்கிரமாதித்தனாய் விஜயகாந்தை தொடரும் பா.ஜனதா!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதேபோல், கூட்டணி பேச்சுவார்த்தையும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி என கூறி வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விஜயகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்தும், புதிய கூட்டணி அமைப்பது குறித்தும் இதுவரை வாய் திறக்காமல் உள்ளார்.

அதே சமயம் விஜயகாந்த் தங்களது கூட்டணியில்தான் உள்ளார் என பா.ஜனதா கூறி வருகிறது. ஆனால் விஜயகாந்தோ, " அவர்கள்தான் ( பா.ஜனதா) அப்படி கூறிக்கொண்டுள்ளனர். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கிய பிறகுதான் முடிவெடுக்கப்படும். யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியினரின் கருத்தை கேட்டு முடிவெடுக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த்தை சந்தித்து பேசிய, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்றும் அவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, கூட்டணி குறித்து அவரிடம் விவாதித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை விஜயகாந்த்தை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். விஜயகாந்த் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட விஜயகாந்துக்கு முரளிதரராவ் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல் விஜயகாந்த் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டதாகவும்,  முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் முன்வைக்கும் கோரிக்கைதான் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ' கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், தேர்தல் முடிந்த பின்னர் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்துகொள்வோம்' என பா.ஜனதா தரப்பில் சொல்லப்படுவதாகவும், ஆனால் அதனை ஏற்கும் மனநிலையில் விஜயகாந்த் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் கூட்டணி குறித்து அவசரப்பட்டு முடிவெடுக்காமல் இருக்குமாறு விஜயகாந்தை பா.ஜனதா கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment