Wednesday, December 30, 2015

பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைது

பீப் பாடல் சர்ச்சையில் நடிகர் சிம்பு, பாடகர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி போலீசாருக்கு அம்மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பீப் பாடல் மூலம் சர்ச்சையில் சிக்கி உள்ளார் நடிகர் சிம்பு. இவருடன் இசையமைப்பாளர் அனிருத் மீதும் நடவடிக்கை கோரி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் வெடித்தன.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கோர்ட் அறிவுறுத்தல்படி, சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை வெளியிட்ட இணைய தளத்தை அணுகி அந்தப் பாடலை யூடியூப்பிலிருந்து நீக்கும்படி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால் யூடியூப் நிர்வாகம் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை என்று மறுத்து விட்டது.

இந்நிலையில், பீப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சக்தி கனி என்ற வழக்கறிஞர் கடந்த 15 ஆம் தேதி தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் சிம்பு மற்றும் அனிருத் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை.

இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி சக்தி கனி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோதே மேற்கூறிய உத்தரவை நீதிபதி காமராஜ் பிறப்பித்தார்.

மேலும் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை மார்ச் 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டின் இந்த உத்தரவால் சிம்புவை, வருகிற ஜனவரி 4 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகும் முன்னரே செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment