Friday, December 25, 2015

நடிகர் சங்கத்தின் 'குருதட்சனை திட்டம்'!

தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் 27.12.15 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு தமிழகமெங்குமுள்ள மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை அங்கத்தினர் வரையிலான கலைஞர்களின் முழு விபரங்கள் சேகரிக்கும் மற்றும் பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில், உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவப்பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் காப்பீடு என அனைத்து விபரங்களையும் நேரடியாக சேகரித்து பதிவு செய்யப் பட உள்ளது.

இதற்காக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய  இருபது வீடியோ கேமராக்களுடன் "வேல்ஸ் கல்லூரி" நிறுவனத்திலிருந்து விஸ்காம் படிக்கும் மாணவர்கள் குழுவும், மேலும் உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து இருபது உதவி இயக்குநர்களையும் குழுவாக அமைத்து செயல்பட உள்ளார்கள்.

பாண்டவர் அணி அளித்த தேர்தல் வாக்குறுதிகளின் ஒன்றான "குருதட்சனை" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் முதற்க் கட்டமாக இந்நிகழ்வு சென்னையில் ஆரம்பமாக உள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட  நாடக நடிகர் சங்க நிர்வாகிகளும் மாவட்டங்களிலும் தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்களும் நேரடியாக சென்று விபரங்களை சேகரித்து நடிகர் சங்க இணையதளத்தில் பதிவு செய்து குரு தட்சனை திட்டத்தில் உள்ளடக்கிய, வேண்டிய உதவிகளை செய்ய உள்ளது.

வருகிற 27-ம் தேதி காலை 9 மணிக்கு அபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் பிரம்மாண்ட பந்தலிட்டு நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவக்குமார், சூர்யா, வடிவேலு, ஆகியோரின் முன்னிலையில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் தலைமையில் நடிகர்கள் நந்தா, ரமணா, ஸ்ரீமன்,உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில், அனைத்து செயற்குழு  உறுப்பினர்களும், அலுவலக ஊழியர்களும் இந்த பணியில் தீவிரமான ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment