
இன்றைய யு டியூப், சமூக வலைத்தள காலத்தில் ஒரு படத்தின் பாடல்கள் எளிதில் ரசிகர்களிடையே பரவி விடுகின்றன. நல்ல பாடல்களை அவர்கள் வரவேற்கவும் தயங்கியதில்லை, மோசமான பாடல்களை எதிர்க்கவும் அவர்கள் தயங்கியதில்லை.
மொபைல் போன்கள் வரை பாடல்களின் பயன்பாடு அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் நல்ல ‘ஹிட்’ ஆன பாடல்களைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சிலருக்கு படங்களின் வெற்றியும் அவர்களைக் கை கொடுத்து தூக்கி விட்டு விடுகிறது. சிலருக்கு படங்களின் தோல்வி அவர்களை கை விட்டு விடுகிறது. இருந்தாலும் உண்மையான திறமைசாலிகளும், சிறந்த இசைய கொடுப்பவர்களும் ரசிகர்களின் வரவேற்பை நிச்சயம் பிடித்து விடுவார்கள்.
இந்த 2015ம் ஆண்டில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டில் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட படங்களில் சராசரியாக ஒரு படத்திற்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டால் கூட 1000 பாடல்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. அவற்றில் அதிகமான ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்கள் இன்றைய இளம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். அந்த வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த இசையமைப்பாளர்கள், மற்ற இசையமைப்பாளர்களைப் பற்றிய படங்கள், பாடல்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்தக் கட்டுரை…
அனிருத்
2015ம் ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் பட்டியலில் அனிருத் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில் ‘காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடிதான், வேதாளம், தங்கமகன்’ ஆகிய ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ‘காக்கி சட்டை’ படத்தில் இடம் பெற்ற “காக்கி சட்டை…., காதல் கண் கட்டுதே…, கட்டிக்கிட்…” ஆகிய பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன.
‘மாரி’ படத்தில் இடம் பெற்ற ‘தர லோக்கலு…, தப்பாதான் தெரியும்…, டானு டானு…’ ஆகிய பாடல்களும், ‘நானும் ரௌடிதான்’ படத்தில் “தங்கமே உன்னை…, நீயும் நானும்.., என்னை மாற்றும் காதலே…கண்ணான கண்ணே…, நானும் ரௌடிதான்…” ஆகிய பாடல்களும், ‘வேதாளம்’ படத்தில் “ஆளுமா டோலுமா…, வீர விநாயகா…” பாடல்களும், ‘தங்க மகன்’ படத்தில் “என்ன சொல்ல…, டக் பக்…, ஜோடி நிலவே…” பாடல்களும் இசை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன.
தான் இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் குறைந்தது இரண்டு பாடல்களையாவது ஹிட் ஆக்கி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அனிருத். இந்த வருடத்தில் அனிருத் தன் படங்களில் வந்த பாடல்களினால் அதிகம் பேசப்பட்டாரோ இல்லையோ, ‘பீப் சாங்’ பாடல் சர்ச்சையில் அதிகம் பேசப்பட்டார்.
டி. இமான்
2015ம் ஆண்டில் அதிகப் படங்களக்கு இசையமைத்துள்ளவர்கள் பட்டியலில் அனிருத்துடன் சேர்ந்து இமானும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில் “வலியவன், ரோமியோ ஜுலியட், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாயும் புலி, 10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
‘வலியவன்’ படத்தில் ‘ஆஹா…காதல் வந்து…, எலோமியா…’ பாடல்கள் மட்டுமே கேட்கும்படியாக அமைந்தது. படமும் வெற்றி பெறாததால் அதுவும் பலரைச் சென்றடையவில்லை. ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் இடம் பெற்ற ‘டண்டணக்கா…’ பாடல் நீதிமன்றம் வரை சென்று வழக்குகளைச் சந்தித்து திரும்பி வந்தது. அந்த ஒரு பாடலே இந்தப் படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது. இந்தப் பாடலுடன் ‘அடியே…இவளே…, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…, தூவானம்…’ ஆகிய பாடல்கள் ரசிக்கும் பாடல்களாக அமைந்தன. ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ‘லக்கா மாட்டிக்கிச்சி…, நா ரொம்ப பிஸி…, அடடா ஒண்ணும் சொல்லாத….’ பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தன. ‘பாயும் புலி’ படத்தில் இடம் பெற்ற ‘சிலுக்கு மரமே…’ என்ற ஒரே ஒரு பாடல் மட்டுமே தொடர்ந்து பல இடங்களில் ஒலித்தது. அந்தப் படத்திற்கு அடையாளமாகவும் இந்தப் பாடல் அமைந்தது. ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் ‘நான் பாய்ஞ்சால்…’ பாடல் மட்டுமே கொண்டாட்டமான பாடலாக அமைந்தது.
இந்த ஆண்டில் இமான் இசையமைத்த படங்களில் ‘ரோமியோ ஜுலியட்’ படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்ததால் கடந்த ஆண்டைப் போல அதிகம் பேசப்படாமல் போய்விட்டார்.
ஜி.வி.பிரகாஷ் குமார்
2015ம் ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் பட்டியலில் ஜி.வி.பிரகாஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில “டார்லிங், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ராஜதந்திரம், கொம்பன், காக்கா முட்டை, காவல், இது என்ன மாயம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஈட்டி” ஆகிய 9 படங்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆண்டில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நாயகனாகவும் அறிமுகமாகி இரண்டு வசூல் படங்களில் நடித்தும் விட்டார். ‘டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என இவர் நடித்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இசையைப் பொறுத்தவரையில் ‘டார்லிங்’ படத்தில் இடம் பெற்ற “உன் பார்வை போதும்…, உன் விழிகளில்…., வந்தா மல…, பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன. ‘கொம்பன்’ படத்தில் இடம் பெற்ற “கருப்பு நிறத்தழகி…, கம்பிக்கரை வேட்டி…, பாடல்கள் கொண்டாட்டமான பாடல்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தன. ‘காக்கா முட்டை’ படத்தில் ‘கருப்பு கருப்பு..’ பாடல் வரவேற்பைப் பெற்ற பாடலாக இருந்தது. ‘இது என்ன மாயம்’ படத்தில் ‘இரவாக நீ…’ பாடல் நல்ல மெலடியாக அமைந்தது. படம் வெற்றி பெறாததால் இப்படத்தின் பாடல்கள் அதிகம் கவனிக்கப்படவில்லை. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா பாடிய ‘முத்தம் கொடுத்த மாயக்காரி…’ வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக ஒலித்துள்ளது. சர்ச்சைக்குரிய ‘பிட்டு படம்டி…’ என்ற பாடலும் இடம் பெற்றதை தற்போது ‘பீப் சாங்’ பாடலுக்கு எழுந்த சர்ச்சைக்கப் பிறகுதான் பலரும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே படத்தில் இடம் பெற்ற ‘என்னாச்சு ஏதாச்சு..’ இனிமையான மெலடியாக அமைந்தது. ‘ஈட்டி’ படத்தில் ‘நான் புடிச்ச மொசக்குட்டியே…’ பாடல் சமீபத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. மற்ற படங்கள் வெற்றி பெறாததால் அந்தப் படங்களின் பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லை.
அதிகப் படங்களுக்கு இசையமைத்ததோடு, நாயகனாகவும் இந்த ஆண்டில் அறிமுகமாகி இரண்டிலுமே முத்திரை பதித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
மேலே குறிப்பிட்ட மூன்று இசையமைப்பாளர்களும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். மற்ற இசையமைப்பாளர்கள் ஐந்துக்கும் குறைவான படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் சில படங்களில் அவர்களும் ஹிட்டான பாடல்களை அளித்திருக்கிறார்கள்.
அவர்களில் ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.
ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ‘ஐ, ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ரகுமான் இசையமைத்த இந்த இரண்டு படங்களுமே தமிழ்த் திரையுலகின் இரு பெரும் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் இயக்கிய படங்கள். ரகுமானின் முந்தைய ஹிட் பாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு படங்களின் பாடல்களின் ஹிட் விகிதம் குறைவுதான் என்பதை அவருடைய ரசிகர்களே ஏற்றுக் கொள்வார்கள்.
யுவன்ஷங்கர் ராஜா
யுவன்ஷங்கர் ராஜா இசையில் “வை ராஜா வை, மாஸ், யட்சன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் வெற்றி பெறாமல் பாடல்களும் பெரிய ஹிட் ஆகாமல் யுவனை மீண்டும் எழ வைக்காத படங்களாகவே இவை அமைந்தன.
ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ‘என்னை அறிந்தால், அனேகன், நண்பேன்டா’ ஆகிய படங்கள் வெளியாகின. ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு…’ பாடல் அனைவரையும் உருக வைத்த பாடலாக அமைந்தது. ‘அனேகன்’ படத்தில் இடம் பெற்ற ‘டங்கா மாரி…’ பாடல் இந்த ஆண்டின் அதிரடியான குத்துப் பாடலாக அமைந்தது. ‘நண்பேன்டா’ படத்தில் இடம் பெற்ற ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…’ என்ற நயன்’தாரா’ பாடல் இனிமையாக அமைந்தது.
சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘எனக்குள் ஒருவன், 36 வயதினிலே’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ’36 வயதினிலே’ படம் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதில் ’36 வயதினிலே’ படத்தில் இடம் பெற்ற ‘வாடி ராசாத்தி…’பாடல் ஹிட்டான பாடலாக அமைந்தது. அடுத்த ஆண்டு வெளிவர உள்ள ‘கபாலி’ படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இந்த ஆண்டில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார் சந்தோஷ் நாராயணன்.
ஜிப்ரான்
ஜிப்ரான் இசையமைத்து இந்த ஆண்டில் வெளிவந்த மூன்று படங்களுமே கமல்ஹாசன் நடித்த படங்கள் மட்டுமே என்பது ஒரு சிறப்பு. ‘உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம்’ ஆகிய கமல்ஹாசன் நடித்த மூன்று படங்களுக்குமே அவர் இசையமைத்து கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளரானார். இதில் ‘பாபநாசம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஏய்யா என் கோட்டிக்காரா…’ என்ற பாடல் சூப்பர்ஹிட் வரிசையில் இடம் பிடித்த பாடலாக அமைந்தது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி
இந்த ஆண்டின் அறிமுக இசையமைப்பாளர்களில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா இருக்கிறார். ‘ஆம்பள’ படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசையில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை, தனி ஒருவன்’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. அவற்றில் ‘தனி ஒருவன்’ படத்திற்கு தனி இடமுண்டு. அடுத்த ஆண்டில் இவர் இசையமைப்பதைப் பொறுத்து மற்றவர்களுக்கு போட்டியாகவும் வர வாய்ப்புண்டு.
மேலும் இந்த ஆண்டில் ஓரிரு படங்களக்கு மட்டும் இசையமைத்து அவற்றில் ஓரிரு பாடல்கள் அதிகமாக ரசிக்க வைத்த இசையமைப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் படங்கள் அதிகமான வரவேற்பை பெறாததால் அவர்கள் இசையமைத்த சில நல்ல பாடல்களும் ரசிகர்களால் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் அவர்களுக்கும் வரவேற்பு கிடைக்கட்டும் என்று வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment