Friday, December 25, 2015

ராக்கெட் முதல்முறையாக பூமிக்கு திரும்பியது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் மகத்தான சாதனை

விண்வெளியில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பால்கன்–9 ராக்கெட், பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியது. விஞ்ஞான தொழில் நுட்பத்தில் இது மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.
ராக்கெட்டுகள்
செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிற வாகனங்களாகத்தான் ராக்கெட்டுகள் பயன்படுகின்றன. அந்த வகையில் செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் சுமந்து சென்று, விண்வெளியில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தி விடுவதுடன் அவற்றின் பணி முடிந்து விடும். அந்த ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்புவதில்லை. அவை சாம்பலாகி விடும். இதுதான் இயல்பு. இதுவரை நடந்து வந்ததும் இதுதான்.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீசுவரர் எலன் முஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு சுமந்து சென்று, புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி விட்டு, ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திரும்ப வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது.
சென்றது, வென்றது, திரும்பியது
இந்த நிறுவனத்தின் பால்கன்–9 ராக்கெட், 11 சிறிய செயற்கைக்கோள்களுடன் நேற்று முன்தினம் இரவு 8.33 மணிக்கு அமெரிக்காவில் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தப்பட்டது. 9 நிமிடங்களில் அந்த ராக்கெட், சுமந்து சென்ற 11 சிறிய செயற்கைக்கோள்களையும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதைத் தொடர்ந்து செங்குத்தான நிலையில் கேப் கேனவரல் ராக்கெட் தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

இது விஞ்ஞான தொழில் நுட்பத்தில், மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.
எலன் முஸ்க் மகிழ்ச்சி
இது எலன் முஸ்க் குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த சாதனை குறித்து முஸ்க், ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில், ‘‘திரும்ப வந்துள்ள குழந்தையை வரவேற்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அவர் நிருபர்களிடமும் பேசினார். அப்போது அவர், ‘‘இது ஒரு புரட்சிகரமான தருணம். இதுவரை யாரும் பூஸ்டரை திரும்ப கொண்டு வந்தது இல்லை. இது மிகவும் பயன்தரக்கூடிய ஒரு திட்டம் ஆகும். 11 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி விட்டு ராக்கெட் திரும்ப வந்துள்ளது’’ என குறிப்பிட்டார்.

பால்கன்–9 ராக்கெட் பூமிக்கு திரும்பி இருப்பது, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தாரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அவர்கள் ஆடிப்பாடி, கொண்டாடினர்.

கடந்த ஜூன் மாதம் 28–ந் தேதி இதே நிறுவனம், பால்கன்–9 ராக்கெட்டை சரக்குகளுடன் கூடிய விண்கலத்துடன் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஏவியது. ஆனால் அந்த பயணம் வெற்றி அடைய வில்லை. அந்த ராக்கெட் வெடித்து சிதறியது.

இப்போது பால்கன்–9 ராக்கெட் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அதை சீர்செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். இதனால் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கான செலவு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment