Friday, December 25, 2015

'பசங்க 2, பூலோகம்' நிலவரம் எப்படி ?

2015ம் ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமையான நேற்று 'பசங்க 2, பூலோகம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'பசங்க 2, பூலோகம்' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

'பசங்க' என்ற தரமான படம் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஆகியோரது கூட்டு முயற்சியில் உருவான 'பசங்க 2' படம் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு தரமான, சிறந்த படமாக அமைந்துள்ளது. பள்ளிப் பருவத்தில் அடியெடுத்து வைத்துள்ள சிறுவர், சிறுமியர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு உணர்த்தும் ஒரு படமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களின் உலகம் என்பது தனி உலகம். அதில் அவர்களை உணர்வு ரீதியாக அவர்களின் உளவியல் ரீதியாகவே அணுக வேண்டும் என்பதை ஆணித்தரமாகப் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். நல்ல படங்களை நமது ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை, அதே போல் இந்தப் படமும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கியமான படமாக இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இடைவேளைக்குப் பின் படம் கொஞ்சம் தளர்ந்தாலும் அதன் பின் முடிவை நோக்கி செல்லும் போது நெகிழ வைத்து விடுகிறது என்பதே படம் பார்த்த பலரின் கருத்தாக உள்ளது. மெல்ல, மெல்ல அனைத்து ரசிகர்களையும் இந்தப் படம் கவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் எஸ்.வி.ஜனநாதன் வசனத்தில் அவருடைய உதவியாளராக இருந்த கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 'பூலோகம்'. கடந்த ஆண்டே வர வேண்டிய படம் தாமதமாக வந்தாலும் தடம் பதிக்கும் அளவில் இருப்பதாகவே படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இந்த ஆண்டில் வெளிவந்த 'ஐ' படத்திற்கு முன்பாக இந்தப் படம் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. வெறும் கமர்ஷியலாக மட்டுமல்லாமல் கார்ப்பரேட் கம்பெனிகள் மக்களை எப்படியெல்லாம் சுரண்டுகின்றன என்பதை சாதாரண ரசிகர்களுக்கும் புரிய வைக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. அதற்கு எஸ்.பி.ஜனநாதனின் வசனம் அதிரடியாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட படங்களை ரசிகர்கள் வரவேற்றால்தான் நல்ல படங்களும் தொடர்ந்து வெளிவரும் என்ற பாராட்டும் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ளது.

சீரியசான கதை என்பதால் நகைச்சுவை என்பது படத்தில் இல்லை, பாடல்களுக்கும் முக்கியத்துவமில்லை. இந்த இரண்டு கமர்ஷியல் விஷயங்களைப் படத்தில் தவிர்த்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் கொஞ்சம் தள்ளாடும் இந்த பூலோகம் அதன்பின் பரபரப்பை நோக்கி நகர்கிறது.

ரசிகர்களின் வரவேற்பு இந்த இரண்டு படங்களுக்கும் இன்னும் உள்ள விடுமுறை நாட்களில் கிடைக்கும் பட்சத்தில் நல்ல வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது.

0 comments:

Post a Comment