Friday, December 25, 2015

'தாரை தப்பட்டை' இசை - பலத்த வரவேற்பைப் பெற்ற இளையராஜா

இளையராஜாவின் இசையமைப்பில் 1000மாவது படமாக வெளிவர இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் இசை இன்று வெளியானது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக இளையராஜாவும், பாலாவும் இந்த இசை வெளியிட்டிற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல் நேரடியாக சிடிக்களை கடைகளுக்கும், இசை உரிமையை வாங்கிய கம்பெனியின் யு டியூப் இணையதளத்திலும் பாடல்களை வெளியிட்டனர்.

'தாரை தப்பட்டை' என்றாலே 'அடி கிழியட்டும்' என்பார்கள். அந்த அளவிற்கு இந்த மண்ணின் இசையை மக்கள் ரசிக்கும் அளவிற்கு அடித்துத் தள்ளியிருக்கிறார் இளையராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவே இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். மோகன்ராஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். திருவாசகத்திலிருந்து ஒரு பாடலை எடுத்து அதற்கு இசையமைத்திருக்கிறார். இதில் திருவாசகப் பாடலான 'பாருருவாய...' என்ற திருவாசகப் பாடலைக் கேட்கும் போது உருக்கி விடுகிறது. 'இடறினும்..' என்று இளையராஜா எழுதி சரத் பாடிய பாடலும் அந்த வரிசையில் இடம் பெறும் மற்றொரு பாடல்.

'நான் கடவுள்' படத்தில் இடம் பெற்ற 'பிச்சைப் பாத்திரம்...' பாடல் போல இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. 'ஆட்டக்காரி மாமன் பொண்ணு...' பாடல் கேட்கும் போதே ஆட வைக்கிறதென்றால், திரையில் பார்க்கும் போது என்ன செய்யும்..?. 'வதன வதன வடிவேலன்...' பாடலும் ரசிகர்களை நிச்சயம் ஆட வைக்கும் என்பது உறுதி.

பாடல்களைப் பாடியுள்ள குரல்கள் ஒவ்வொன்றும் புதிதாக இருப்பது இந்தப் பாடல்களை அதிகம் ரசிக்க வைப்பதற்கு மற்றுமொரு காரணம்.

'தீம் மியூசிக்'கில் கிழி கிழியென அதிரடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியானது முதலே இசை ரசிகர்கள் இளையராஜாவை மீண்டும் ஒரு முறை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழரின் இசை வரும் தமிழர் திருநாளில் தமிழர்கள் இருக்கும் இடமெங்கும் தாரை தப்பட்டையுடன் இன்னும் அதிகமான வரவேற்பைப் பெறும் என்பது உறுதி.

0 comments:

Post a Comment