Friday, December 25, 2015

2015 – 'ஹிட்' இசையமைப்பாளர்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காரணமா இல்லையா என்பது குறித்த பேச்சு பல காலமாக இருந்து வருகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடல்கள் நல்ல ஒரு ‘விசிட்டிங் கார்டு’ ஆக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இசையமைப்பாளர்களின் பின்னணி இசை அவர்களின் திறமைக்கு மணிமகுடமாக விளங்குகிறது.

இன்றைய யு டியூப், சமூக வலைத்தள காலத்தில் ஒரு படத்தின் பாடல்கள் எளிதில் ரசிகர்களிடையே பரவி விடுகின்றன. நல்ல பாடல்களை அவர்கள் வரவேற்கவும் தயங்கியதில்லை, மோசமான பாடல்களை எதிர்க்கவும் அவர்கள் தயங்கியதில்லை.

மொபைல் போன்கள் வரை பாடல்களின் பயன்பாடு அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் நல்ல ‘ஹிட்’ ஆன பாடல்களைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சிலருக்கு படங்களின் வெற்றியும் அவர்களைக் கை கொடுத்து தூக்கி விட்டு விடுகிறது. சிலருக்கு படங்களின் தோல்வி அவர்களை கை விட்டு விடுகிறது. இருந்தாலும் உண்மையான திறமைசாலிகளும், சிறந்த இசைய கொடுப்பவர்களும் ரசிகர்களின் வரவேற்பை நிச்சயம் பிடித்து விடுவார்கள்.

இந்த 2015ம் ஆண்டில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டில் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட படங்களில் சராசரியாக ஒரு படத்திற்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டால் கூட 1000 பாடல்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. அவற்றில் அதிகமான ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்கள் இன்றைய இளம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். அந்த வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த இசையமைப்பாளர்கள், மற்ற இசையமைப்பாளர்களைப் பற்றிய படங்கள், பாடல்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்தக் கட்டுரை…

அனிருத்

2015ம் ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் பட்டியலில் அனிருத் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில் ‘காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடிதான், வேதாளம், தங்கமகன்’ ஆகிய ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ‘காக்கி சட்டை’ படத்தில் இடம் பெற்ற “காக்கி சட்டை…., காதல் கண் கட்டுதே…, கட்டிக்கிட்…” ஆகிய பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன.

‘மாரி’ படத்தில் இடம் பெற்ற ‘தர லோக்கலு…, தப்பாதான் தெரியும்…, டானு டானு…’ ஆகிய பாடல்களும், ‘நானும் ரௌடிதான்’ படத்தில் “தங்கமே உன்னை…, நீயும் நானும்.., என்னை மாற்றும் காதலே…கண்ணான கண்ணே…, நானும் ரௌடிதான்…” ஆகிய பாடல்களும், ‘வேதாளம்’ படத்தில் “ஆளுமா டோலுமா…, வீர விநாயகா…” பாடல்களும், ‘தங்க மகன்’ படத்தில் “என்ன சொல்ல…, டக் பக்…, ஜோடி நிலவே…” பாடல்களும் இசை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன.

தான் இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் குறைந்தது இரண்டு பாடல்களையாவது ஹிட் ஆக்கி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அனிருத். இந்த வருடத்தில் அனிருத் தன் படங்களில் வந்த பாடல்களினால் அதிகம் பேசப்பட்டாரோ இல்லையோ, ‘பீப் சாங்’ பாடல் சர்ச்சையில் அதிகம் பேசப்பட்டார்.

டி. இமான்

2015ம் ஆண்டில் அதிகப் படங்களக்கு இசையமைத்துள்ளவர்கள் பட்டியலில் அனிருத்துடன் சேர்ந்து இமானும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில் “வலியவன், ரோமியோ ஜுலியட், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாயும் புலி, 10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

‘வலியவன்’ படத்தில் ‘ஆஹா…காதல் வந்து…, எலோமியா…’ பாடல்கள் மட்டுமே கேட்கும்படியாக அமைந்தது. படமும் வெற்றி பெறாததால் அதுவும் பலரைச் சென்றடையவில்லை. ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் இடம் பெற்ற ‘டண்டணக்கா…’ பாடல் நீதிமன்றம் வரை சென்று வழக்குகளைச் சந்தித்து திரும்பி வந்தது. அந்த ஒரு பாடலே இந்தப் படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது. இந்தப் பாடலுடன் ‘அடியே…இவளே…, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…, தூவானம்…’ ஆகிய பாடல்கள் ரசிக்கும் பாடல்களாக அமைந்தன. ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ‘லக்கா மாட்டிக்கிச்சி…, நா ரொம்ப பிஸி…, அடடா ஒண்ணும் சொல்லாத….’ பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தன. ‘பாயும் புலி’ படத்தில் இடம் பெற்ற ‘சிலுக்கு மரமே…’ என்ற ஒரே ஒரு பாடல் மட்டுமே தொடர்ந்து பல இடங்களில் ஒலித்தது. அந்தப் படத்திற்கு அடையாளமாகவும் இந்தப் பாடல் அமைந்தது. ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் ‘நான் பாய்ஞ்சால்…’ பாடல் மட்டுமே கொண்டாட்டமான பாடலாக அமைந்தது.

இந்த ஆண்டில் இமான் இசையமைத்த படங்களில் ‘ரோமியோ ஜுலியட்’ படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்ததால் கடந்த ஆண்டைப் போல அதிகம் பேசப்படாமல் போய்விட்டார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்

2015ம் ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் பட்டியலில் ஜி.வி.பிரகாஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில “டார்லிங், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ராஜதந்திரம், கொம்பன், காக்கா முட்டை, காவல், இது என்ன மாயம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஈட்டி” ஆகிய 9 படங்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆண்டில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நாயகனாகவும் அறிமுகமாகி இரண்டு வசூல் படங்களில் நடித்தும் விட்டார். ‘டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என இவர் நடித்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இசையைப் பொறுத்தவரையில் ‘டார்லிங்’ படத்தில் இடம் பெற்ற “உன் பார்வை போதும்…, உன் விழிகளில்…., வந்தா மல…, பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன. ‘கொம்பன்’ படத்தில் இடம் பெற்ற “கருப்பு நிறத்தழகி…, கம்பிக்கரை வேட்டி…, பாடல்கள் கொண்டாட்டமான பாடல்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தன. ‘காக்கா முட்டை’ படத்தில் ‘கருப்பு கருப்பு..’ பாடல் வரவேற்பைப் பெற்ற பாடலாக இருந்தது. ‘இது என்ன மாயம்’ படத்தில் ‘இரவாக நீ…’ பாடல் நல்ல மெலடியாக அமைந்தது. படம் வெற்றி பெறாததால் இப்படத்தின் பாடல்கள் அதிகம் கவனிக்கப்படவில்லை. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா பாடிய ‘முத்தம் கொடுத்த மாயக்காரி…’ வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக ஒலித்துள்ளது. சர்ச்சைக்குரிய ‘பிட்டு படம்டி…’ என்ற பாடலும் இடம் பெற்றதை தற்போது ‘பீப் சாங்’ பாடலுக்கு எழுந்த சர்ச்சைக்கப் பிறகுதான் பலரும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே படத்தில் இடம் பெற்ற ‘என்னாச்சு ஏதாச்சு..’ இனிமையான மெலடியாக அமைந்தது. ‘ஈட்டி’ படத்தில் ‘நான் புடிச்ச மொசக்குட்டியே…’ பாடல் சமீபத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. மற்ற படங்கள் வெற்றி பெறாததால் அந்தப் படங்களின் பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லை.

அதிகப் படங்களுக்கு இசையமைத்ததோடு, நாயகனாகவும் இந்த ஆண்டில் அறிமுகமாகி இரண்டிலுமே முத்திரை பதித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

மேலே குறிப்பிட்ட மூன்று இசையமைப்பாளர்களும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். மற்ற இசையமைப்பாளர்கள் ஐந்துக்கும் குறைவான படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் சில படங்களில் அவர்களும் ஹிட்டான பாடல்களை அளித்திருக்கிறார்கள்.

அவர்களில் ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ‘ஐ, ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ரகுமான் இசையமைத்த இந்த இரண்டு படங்களுமே தமிழ்த் திரையுலகின் இரு பெரும் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் இயக்கிய படங்கள். ரகுமானின் முந்தைய ஹிட் பாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு படங்களின் பாடல்களின் ஹிட் விகிதம் குறைவுதான் என்பதை அவருடைய ரசிகர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

யுவன்ஷங்கர் ராஜா

யுவன்ஷங்கர் ராஜா இசையில் “வை ராஜா வை, மாஸ், யட்சன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் வெற்றி பெறாமல் பாடல்களும் பெரிய ஹிட் ஆகாமல் யுவனை மீண்டும் எழ வைக்காத படங்களாகவே இவை அமைந்தன.

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ‘என்னை அறிந்தால், அனேகன், நண்பேன்டா’ ஆகிய படங்கள் வெளியாகின. ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு…’ பாடல் அனைவரையும் உருக வைத்த பாடலாக அமைந்தது. ‘அனேகன்’ படத்தில் இடம் பெற்ற ‘டங்கா மாரி…’ பாடல் இந்த ஆண்டின் அதிரடியான குத்துப் பாடலாக அமைந்தது. ‘நண்பேன்டா’ படத்தில் இடம் பெற்ற ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…’ என்ற நயன்’தாரா’ பாடல் இனிமையாக அமைந்தது.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘எனக்குள் ஒருவன், 36 வயதினிலே’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ’36 வயதினிலே’ படம் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதில் ’36 வயதினிலே’ படத்தில் இடம் பெற்ற ‘வாடி ராசாத்தி…’பாடல் ஹிட்டான பாடலாக அமைந்தது. அடுத்த ஆண்டு வெளிவர உள்ள ‘கபாலி’ படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இந்த ஆண்டில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார் சந்தோஷ் நாராயணன்.

ஜிப்ரான்

ஜிப்ரான் இசையமைத்து இந்த ஆண்டில் வெளிவந்த மூன்று படங்களுமே கமல்ஹாசன் நடித்த படங்கள் மட்டுமே என்பது ஒரு சிறப்பு. ‘உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம்’ ஆகிய கமல்ஹாசன் நடித்த மூன்று படங்களுக்குமே அவர் இசையமைத்து கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளரானார். இதில் ‘பாபநாசம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஏய்யா என் கோட்டிக்காரா…’ என்ற பாடல் சூப்பர்ஹிட் வரிசையில் இடம் பிடித்த பாடலாக அமைந்தது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி

இந்த ஆண்டின் அறிமுக இசையமைப்பாளர்களில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா இருக்கிறார். ‘ஆம்பள’ படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசையில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை, தனி ஒருவன்’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. அவற்றில் ‘தனி ஒருவன்’ படத்திற்கு தனி இடமுண்டு. அடுத்த ஆண்டில் இவர் இசையமைப்பதைப் பொறுத்து மற்றவர்களுக்கு போட்டியாகவும் வர வாய்ப்புண்டு.

மேலும் இந்த ஆண்டில் ஓரிரு படங்களக்கு மட்டும் இசையமைத்து அவற்றில் ஓரிரு பாடல்கள் அதிகமாக ரசிக்க வைத்த இசையமைப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் படங்கள் அதிகமான வரவேற்பை பெறாததால் அவர்கள் இசையமைத்த சில நல்ல பாடல்களும் ரசிகர்களால் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் அவர்களுக்கும் வரவேற்பு கிடைக்கட்டும் என்று வாழ்த்துவோம்.

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை![/justify]

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)



நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!

இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!

எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

சிறுநீரகம், சிறுநீரகத்தில் கற்கள் ... என்னென்ன செய்யலாம்..செய்யக்கூடாது..!

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.

சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் முலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.

நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் முலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் முளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம்.

சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும்.

சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம்.

சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும்.

பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது.

பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.

கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது.

மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த லிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

சிறுநீரகத்தில் கற்கள்

உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்..

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். 1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.