Friday, December 18, 2015

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:

1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.

10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

11. ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

15. பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு “ஹெவிநெஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

‘தங்கமகன்’ ஜொலிக்கிறான் - திரை விமர்சனம்

தனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் மூவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிக்குமார் வருமானவரித் துறை அலுவலகத்தில் கணக்கு எழுதுபவராக பணிபுரிந்து வருகிறார். ரவிக்குமாரின் மனைவி ராதிகா குடும்பத் தலைவி. நடுத்தர குடும்பம்தான், என்றாலும் இவர்களது குடும்பத்தில் சந்தோஷத்துக்கு குறைவில்லை.

இந்நிலையில், ஒருநாள் நாயகி எமி ஜாக்சனை ஒரு கோவிலில் பார்க்கிறார் தனுஷ். பார்த்ததும் அவர்மீது காதல் துளிர்விட, தொடர்ந்து எமியையே சுற்றிவந்து, தனது காதலை வெளிப்படுத்துகிறார், தனுஷ். ஒருகட்டத்தில் எமி ஜாக்சனும் தனுஷை காதலிக்கத் தொடங்குகிறார். இருவரும் காதலர்களாக மாறுகிறார்கள். அதேநேரத்தில், சதீஷும் எமி ஜாக்சனுடன் எப்போதும் கூடவே வரும் அவரது தோழியை காதலிக்கிறார்.

தனுஷும், சதீஷும் காதல் வலையில் சிக்கி, தங்களது காதலிகளுடன் ஊர் சுற்ற, அரவிந்துக்கு இதுபற்றி எதுவுமே இவர்கள் தெரிவிப்பதில்லை. இதனால், அரவிந்தனுடனான இவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

ஒருகட்டத்தில், இவர்கள் காதல் செய்யும் விஷயம் அரவிந்துக்கு தெரியவர, தன்னிடம் இதைப்பற்றி தெரிவிக்காத நண்பர்களிடம் கோபித்துக் கொண்டு அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறான்.

பின்னர், ஒருநாள் எமி ஜாக்சன், தன்னுடைய கனவு இல்லம் பற்றி தனுஷிடம் கூறி, திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக அந்த வீட்டில்தான் வசிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அப்பா, அம்மா மீது அதிக பாசம் கொண்ட தனுஷோ, பெற்றோரை விட்டு தனியாக வரமுடியாது என்று கூறுகிறார். இதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்துப் போகிறார்கள்.

இதையடுத்து, தனுஷ் படித்து முடித்துவிட்டு அப்பா வேலைசெய்யும் வருமான வரித்துறை அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்கிறார். அதன்பின்னர், சமந்தாவை தனுஷுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். இருவருடைய திருமண வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமாருக்கு அவரது உயரதிகாரி ஜெயப்பிரகாஷ் மூலமாக பிரச்சினை வருகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் மீது திருட்டுப் பட்டம் கட்டி அவரை அவமானப்படுத்துகிறார் ஜெயப்பிரகாஷ். இந்த அவமானத்தை தாங்க முடியாத கே.எஸ்.ரவிக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதையடுத்து, தனுஷின் வேலையும் பறிபோகிறது.

அதன்பின்னர், தனுஷின் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. தங்குவதற்குகூட வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற தனுஷும் கிடைத்த சின்ன,சின்ன வேலைகளை நிரந்தரமில்லாமல் செய்துவருகிறார்.

இந்நிலையில், சமந்தா கர்ப்பமடைகிறார். சந்தோஷப்படவேண்டிய இந்நேரத்தில் தனது குடும்பத்தின் நிலையை அறிந்து, மிகவும் வேதனையடைகிறார் தனுஷ். இறுதியில், தனது அப்பா மீதுள்ள திருட்டுப் பட்டத்தை தனுஷ் எப்படி நீக்கினார்? தன்னுடைய குடும்பத்தை எப்படி மேலே கொண்டு வந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதியில் நண்பர்களுடன் அரட்டை, எமி ஜாக்சனுடன் காதல் என ஜாலியாக வரும் தனுஷ், பிற்பாதியில் பொறுப்பான குடும்பத் தலைவனாகவும், அப்பா மீதுள்ள களங்கத்தை துடைக்க நினைக்கும் ஆக்ரோஷமான மகனாகவும் அழகாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சியாகட்டும், ரொமான்ஸ் காட்சியாகட்டும் தனுஷ் தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

எமி ஜாக்சன் தனது முந்தைய படங்களைவிட இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் அழகாக தெரிகிறார். காதல் காட்சிகளில் தனுஷுடன் சேர்ந்து இவர் செய்யும் ரொமான்ஸ் விஷயங்கள் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.

சமந்தா, அழகான குடும்ப பெண்ணாக அனைவர் மனதிலும் பதிகிறார். அலட்டல் இல்லாத பொறுமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். காமெடிக்கு சதீஷ், தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தனுஷின் உறவுக்கார பையனாக வரும் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் கொஞ்சம் தேறியிருக்கிறார்.

முதன்முதலாக படம் முழுக்க வரும் கே.எஸ்.ரவிக்குமார், இந்த படத்தின் கதையை தாங்கி நிற்கிறார். குடும்பத்தின் மீது அக்கறை காட்டும் பாசமிகு அப்பாவாக மனதில் பதிகிறார். ராதிகாவும் தனது அனுபவ நடிப்பால் அனைவர் மனதையும் கவர்கிறார்.

இயக்குனர் வேல்ராஜ்-தனுஷ் கூட்டணியில் உருவான படம் என்றதுமே, இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை வேல்ராஜ் ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து எடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமல்ல, பாசமும் தன்மானமும் ஒரு வாழ்க்கைக்கு அடிப்படை முக்கியம் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். அதேபோல், அப்பா மீதுள்ள களங்கத்தை போக்க நினைக்கும் ஒரு மகனின் வேதனையை அழகாக சொல்லியிருக்கிறார். சினிமாத்தனம் இல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில், இப்படி ஒரு குடும்பம் நமக்கும் வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

குமரன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் அழகாக பளிச்சிடுகின்றன. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமராவின் பணி அழகாக இருக்கிறது. அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. இருந்தாலும், இதை காட்சியமைப்பில் பார்க்கும்போது கூடுதல் அழகாக இருக்கிறது. பின்னணி இசையை வழக்கம்போல் தெறிக்கவிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தங்கமகன்’ ஜொலிக்கிறான்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.

* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.

கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.


* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

* கொட்டை வகைகள்:


முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.


* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.


* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.


* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.


* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.


* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.


* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.


* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது


-நல்லது நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :


* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)


* வெண்ணெய் -250 (mg /100gm)


* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)


* இறால் (Shrimp)-170 (mg /100gm)


* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)


* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)


* கோழியிறைச்சி-62 (mg /100gm)


* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)


* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)


* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)


* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)


* பிரெட்-1 (mg /100gm)


* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)


* சாக்லேட் பால்-90 (mg /100gm)


நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே....

மீடியாவின் எல்லை மீறல்!

முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர்.

தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா.

அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். 'எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்,' என்று கூற... 'என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?' என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார்.

இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் 'சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க,' என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம்.

இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் 'கத்துக்குட்டி' நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல.

மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள்.

மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் 'சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?' என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை.

அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில்.

இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், 'அறிவிருக்கா' மட்டுமல்ல... இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும்.

அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல!

இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே... டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது... இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். 'தில்' இருக்கா... ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்!

மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான்.

ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!