Friday, December 18, 2015

மீடியாவின் எல்லை மீறல்!

முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர்.

தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா.

அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். 'எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்,' என்று கூற... 'என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?' என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார்.

இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் 'சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க,' என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம்.

இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் 'கத்துக்குட்டி' நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல.

மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள்.

மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் 'சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?' என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை.

அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில்.

இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், 'அறிவிருக்கா' மட்டுமல்ல... இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும்.

அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல!

இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே... டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது... இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். 'தில்' இருக்கா... ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்!

மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான்.

ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

1 comments:

IlayaDhasan said...

Very fair and nice.

Post a Comment