Tuesday, December 15, 2015

திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு- நமது எம்ஜிஆர் வெப்சைட் ஹேக் செய்யப்பட்டதாக புகார்!

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது எம்.ஜி.ஆர்." இணைய தளத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதாக கருத்து கணிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தங்களது இணைய பக்கத்தை சமூக விரோதிகள் ஹேக் செய்து இதுபோன்ற கருத்து கணிப்பை வெளியிட்டதாக நமது எம்.ஜி.ஆர். இணையதளம் தெரிவித்துள்ளது.

சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நட்ராஜ் நீக்கம் உத்தரவை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்திருந்தார். இது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை சமூக வலைதளங்களில் ஒரு செய்தியும் படமும் வைரலாக பரவியது. அதில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையபக்கத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டதாகவும் 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்? எனவும் அதில் கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 13.02%; திமுக கூட்டணிக்கு 85.38% ; மற்றவை 1.66% என பதிவாகி இருப்பதாகவும் அந்த செய்தியிலும் ப்ரிண்ட்ஸ்கிரீன் எடுக்கப்பட்ட இமேஜிலும் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாக பரவிய அதேநேரத்தில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் இணையதளம் சிறிது நேரம் இயங்காமல் இருந்தது. பின்னர் இயங்கிய அந்த தளத்தில் இந்த கருத்து கணிப்பு நீக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நமது எம்.ஜி.ஆர். இணையதளமானது, தங்களது வெப்சைட்டை சமூக விரோதிகள் ஹேக் செய்ததாகவும் இதனைத் தொடர்ந்து இந்த தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை விவகாரம்தான் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது!

கவுண்டமணியைக் கோபப்படுத்திய புதுநடிகர்

கவுண்டமணி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”. இவருடன் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்த சௌந்தரராஜா மற்றும் மெட்ராஸ் பட புகழ் ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றிப் பகிர்ந்து கொண்டார் சௌந்தரராஜா. “கவுண்டமணி சார், எந்த டயலாக்கையும் வாசிக்க மாட்டார், வாசிக்கச்சொல்லி கேட்பார். ரெண்டு, மூணு தடவை வாசிக்கச்சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியாக டேக் போகலாம்ணு சொல்லிடுவார்.

ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக் ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும் இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட இந்த அசாத்திய திறமைதான் அவர்  இவ்ளோ பெரிய இடத்தில் இருக்க காரணம்.

அப்பேர்பட்ட திறமைக்காரர் முன்னாடி, நான் பண்ணுன கூத்தைக்கேட்டா உங்களுக்குக் கோபம் வந்தாலும் ஆச்சர்யமில்ல. ஒரு சீன்ல, கவுண்டமணி சார், நான் அப்புறம் ரித்விகா காம்பினேஷன். காட்சிப்படி கவுண்டமணி சார் ரொம்ப நக்கலா எங்களைப் பத்தி பேசிட்டிருப்பார். அதைக்கேட்டு, நான்
சீரியஸா, செம கோபத்துல அவரைப் பார்த்து முறைக்கணும். கவுண்டமணி சார், நக்கலா பேசுறப்போ, அவர் வாயையே பார்த்துக்கிட்டிருந்தேன் நான்.

அசால்டா, அவர் ஸ்டைல்ல, செம கெத்தா நக்கலா பேசுனப்போ,  எனக்கு, அவரோட நடிப்பையும் கெத்தான அவரோட ஸ்டைலையும் மெய்மறந்து ரசிச்சிக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முறையும் அவரை மனசு ரசிச்சதுல  அவர் மேல  கோபம் வர மாதிரி நடிக்க முடியல. பட்டு பட்டுன்னு சிரிச்சிட்டேன். இதே கூத்து தான் தொடர்ந்து சில டேக்குகள்லயும் நடந்தது.

கவுண்டமணி சார், நான் அடிச்ச கூத்துல லேசா சீரியஸாகுற மாதிரி எனக்குள்ள தோணிச்சு. அப்புறம் தான், சுதாரிச்சிக்கிட்டு,  ‘அண்ணே,  மன்னிச்சிருங்கண்ணே, இந்த தடவை சொதப்பாம நடிக்கிறேன்’னு சொன்னேன். தட்டிக்கொடுத்து ‘அசத்துப்பா’ன்னு சொன்னார். அதுக்கப்புறம்  தான் அந்த டேக் ஓகே ஆச்சு. நிஜமாவே கவுண்டமணி சார் கூட நடிச்சது எனக்கு பெரிய அனுபவம்”, என்றார் சௌந்தரராஜா.

ஒரே போடாக போட்ட ஜெ.! எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்!

எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

மிக உருக்கமாக அமைந்துள்ள அந்த உரையில், "வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்:

கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.

உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.

போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.

அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்.

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்.

என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அற்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!"

-இவ்வாறு பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

எந்திரன் 2 படத்தைத் தொடர்ந்து கமலின் மருதநாயகத்தை தயாரிக்கும் லைக்கா

 மருதநாயகம் குறித்து பேசும் போதெல்லாம், அதற்கு டாலர்களில் பணம் தேவை என்பார் கமல். மருதநாயகத்துக்கு தேவைப்படும் பணத்தை முதலீடு செய்ய இப்போது லைக்கா முன் வந்துள்ளதாக யூகச்செய்திகள் கூறுகின்றன. அதென்ன யூகச் செய்தி...?

சில தினங்கள் முன்பு பேட்டியளித்த கமல், லண்டனில் உள்ள தனது நண்பர் ஒருவர், மருதநாயகம் படத்தை தயாரிக்க விரும்புவதாகவும், அதிகம் செலவாகுமே என்றதற்கு, அது என் கவலை. படமும், நானும் அந்த பட்ஜெட்டை தாங்குவோம் என கூறியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஐங்கரனின் அதிகாரப்பூர்வ தளத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஐங்கரன், லைக்கா இணைந்தே எந்திரன் 2 படத்தை தயாரிக்கின்றன. இரு நிறுவனங்களும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டே இயங்குகின்றன. இரண்டும் இரண்டும் நான்கு.... கமலின் லண்டன் நண்பர் லைக்கா, அவர்கள் மருதநாயகத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாலேயே அப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் என்கிறார்கள்.

லைக்கா எடுக்கிற மிகப்பெரிய ரிஸ்க் இதுவாகத்தான் இருக்கும்.