Friday, December 4, 2015

உறுமீன் திரை விமர்சனம் -திமிங்கலத்தை காட்டி மிரட்றாய்ங்கப்பா!

தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை… ஜென்ம பகை… என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. மீனின் ருசி அபாரம்!

சரித்திர காலத்தில் துவங்குகிறது கதை. கூடவே இருந்து குழி பறிக்கும் கருணாவால் (?) தண்டனைக்குள்ளாகும் புரட்சி வீரன், (பாபி சிம்ஹா) தூக்கு மேடையிலிருந்து தப்பி ஓடுகிறான். பின் தனது பராக்கிரமங்களையும், துரோகி கருணாவை பற்றியும் ஒரு புத்தகம் எழுதி, அதை தன்னுடனே சேர்த்து புதைத்தபடி உயிரை மாய்த்துக் கொள்கிறான். மறுஜென்மம் துவங்குகிறது. எப்படியோ அந்த புத்தகம் அங்கும் வந்து சேர்கிறது. உரியவர்களை தேடியாவது செல்வேன் என்ற வைராக்கியத்தோடு தொடர் பயணம் நடத்தும் அந்த புத்தகம், மறுஜென்மம் எடுக்கும் பாபிசிம்ஹாவின் கைக்கு வர, வந்த நேரத்திலிருந்து வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஓருவழியாக அர்த்தம் புரிகிறது அவருக்கு.

முன் ஜென்ம பகையாளி கருணாவை (கலை) கொல்லக் கிளம்புகிறார். கதை நகரும்போதே இருவரது பகையையும் வலுவாக்குகிற விதத்தில் இன்னும் ஒரு ஜென்ம பிளாஷ்பேக்கை சொல்கிறார் டைரக்டர். “விடாதே, சீக்கிரம் அவனை போட்டுத்தள்ளு” என்கிறளவுக்கு ‘டெம்ப்ட்’ கிளப்பும் அந்த பிளாஷ்பேக்கும் அதை தொடரும் க்ளைமாக்ஸ் பைட்டும் ரசிகனை வாயடைக்க வைக்கிறது. டாக்கிங், மேக்கிங் என்று தமிழ்சினிமாவில் ஒரு ஆக்ஷன் த்ரில்லரை இவ்வளவு ஸ்டைலிஷாக சொன்னதற்காகவே சக்திவேல் பெருமாள்சாமியின் கனத்த சரீரத்தை ஆரத்தழுவி ‘ஆஹாவ்’ எனலாம்!

படம் நெடுகிலும் நமக்கு பழக்கமில்லாத டீ அரசியலை தொட்டுவிட்டு போகும் இயக்குனர், ஒரு குறிப்பிட்ட மதத்தின் போலித்தனத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோலுரித்திருப்பது யாரும் எதிர்பாராத தைரியம்தான்! “வேட்டையாடுறேன்னு புலிகளோட எண்ணிக்கையை வேணும்னா குறைக்கலாம். ஆனால் புலிகளை அழிக்கவே முடியாது” என்கிற வசனம், திணிக்கப்பட்டதாக இல்லாமலிருப்பதே டைரக்டரின் சாமர்த்தியத்தை சொல்லும் பலே டச்!

ஒரு கோபக்கார இளைஞனின் கேரக்டருக்கு சர்வ பொருத்தமாக பிக்ஸ் ஆகிறார் பாபிசிம்ஹா. சற்றே முசுடு போன்ற அவரது முகப்பொருத்தம் கதைக்கு இன்னும் இன்னும் நியாயம் சேர்க்கிறது. போகிற இன்டர்வியூலெல்லாம் பெயில் ஆகி, ஒரு ஹெச் ஆர் தலையில் பீர் பாட்டிலால் போட்டுத்தள்ளும் அவர், அதற்கப்புறம் அதே மிரட்டலை வைத்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்வதெல்லாம் கூட பிரச்சனையில்லை. அவ்ளோ பேசும் மனோபாலாவுக்கு ஒரு டயலாக் கூட இல்லையேய்யா… பச்! அந்த ஆங்கிலேயர் கால முன் ஜென்ம எபிசோடில் பாபிசிம்ஹா செம ஸ்மார்ட் ! கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆங்கிலேயனின் சட்டையை உரிப்பதற்கு தியேட்டர்களில் கைதட்டல் ஷ்யூர்.

அதான் நிஜத்திலேயே சேர்ந்தாச்சே என்று நினைத்திருக்கலாம். கொஞ்சூண்டுதான் வருகிறார் ரேஷ்மிமேனன். ஏன் விழுந்தார் பாபி என்பதை நிமிஷத்தில் புரிய வைக்கிறார்.

மூன்று ஜென்மத்திலும் வில்லன் மெட்ராஸ் புகழ் கலைதான்! ஒரு டீ கடைப் பையன் எப்படி அவ்வளவு பெரிய ஆளாக உயர்கிறான் என்பதையும், மெல்ல மெல்ல உச்சத்துக்கு போகும் அவரது குரூரத்தையும் ரசிக்கலாம். பெருங்கூச்சல் வில்லன்களையே பார்த்து பழகிய கண்களுக்கு கலையின் வில்லத்தனம், இன்ப ஷாக்தான்!

பாபிசிம்ஹா, கலை சம்பந்தப்பட்ட ஃபைட்தான் படத்தின் மிக மிக சூடான பகுதி. பைட் மாஸ்டர் கணேஷ் குமாருக்கு ஆளுயர வாள் கொடுத்து கவுரவிக்கலாம். ஒவ்வொரு பைட்டும் அப்படியொரு கம்போசிங். பாபிசிம்ஹாவின் முரட்டுக் கண்கள் அந்த ஒவ்வொரு அடியையும் இன்னும் கூர்மையாக்குகிறது. பலே!

அச்சு ராஜாமணி இசையில் அந்த ‘ஏ உமையாள்’ பாடல் ஒருவித ராக சுவை என்றால், பின்னணி இசை அப்படியே ஸ்தம்பித்து உட்கார வைத்துவிடுகிறது. பொருத்தமான கதைக்கு அதைவிட பொருத்தமான தேர்வு. ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும் ஸ்பெஷல்!



புகுந்ததே தெரியாமல் புகுந்து கொள்ளும் முன்ஜென்ம எபிசோடும், சற்றே வித்தியாசமான படத்தின் நடையும் எடிட்டர் சான் லோகேஷின் கை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்கிறது.


உறுமீன் என்று நினைத்து உள்ளே போனால், அட… திமிங்கலத்தை காட்டி மிரட்றாய்ங்கப்பா!

போயஸ் தோட்டத்தின் புதிய இளவரசன்

போயஸ் தோட்டத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் கோலோச்சுவார். இப்போது கார்டனின் இளவரசன், விவேக் ஜெயராமன். சசிகலாவின் அண்ணியான இளவரசியின் மகன். 25 வயதாகும் விவேக் ஜெயராமன், போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார மட்டத்தில் `விவேக் ஜெயராமன்' என்ற பெயர் பயபக்தியுடன் உச்சரிக்கப்படுகிறது. `லக்ஸ்' திரையரங்கை நடத்திவரும் `ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விவேக். `அங்கே மட்டும் அல்ல, கார்டனிலும் இவர்தான் முதன்மை செயல் அதிகாரி’ என்கிறார்கள்.

காதில் சிறிய கம்மல், ஃபேஸ்புக்கில் அரட்டை, விலை உயர்ந்த டுகாட்டி பைக், ஏராளமான நண்பர்கள்... என விவேக்கின் உலகம் இந்தத் தலைமுறைக்கானது. இவை எல்லாம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைதான்.

ஜெயலலிதாவின் பார்வைபட்ட தினத்தோடு விவேக்கின் ஜாலி உலகம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது முழுக்க முழுக்க ஜாஸ் சினிமாஸில் விவேக் செம பிஸி. ஜாஸ் சினிமாஸ்  திரையரங் குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது இவரது வேலை. ஜாஸ் சினிமாஸ் விவேக்கின் கைக்கு வந்ததும் நீண்ட நாள் மூடிக்கிடந்த `ஐமேக்ஸ்’ திரையரங்கும் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணமாக 120 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், ஜாஸ் சினிமாஸின் அங்கமான ஐமேக்ஸில் டிக்கெட் விலை 360 ரூபாய்.

கார்டனுக்குள் எப்படி வந்தார் விவேக்?

ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஒருநாள் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். ஜெயராமனின் மனைவி இளவரசி... கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக் என மூன்று குழந்தைகளோடு தனித்து விடப்பட்டார். இதில் ஜெயலலிதா செம அப்செட். `கணவர் இல்லாம ஏன் கஷ்டப்படறே? கார்டனுக்கு வந்துடு' என இளவரசிக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார் ஜெயலலிதா. கைக்குழந்தையாக இருந்தபோதே அப்பாவை இழந்ததால், விவேக் மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தார் ஜெயலலிதா.   அவர் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்த்தார். ஆனால், தான் அதிகார மையத்தில் இருக்கிறோம் என எந்த இடத்திலும் விவேக் காட்டிக்கொண்டது இல்லை. பள்ளிக்காலத்திலும் சரி... கல்லூரிப் படிப்பிலும் சரி... `நன்றாகப் படிக்க வேண்டும்' என்பதுதான் அவரது கனவாக இருந்திருக்கிறது.

கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார். கல்லூரிப் படிப்புக்கு விவேக் தேர்ந்தெடுத்தது ஆஸ்திரேலியா. 2011-ம் ஆண்டு Macquarie Graduate School of Management என்னும் கல்லூரியில் இளங்கலை பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து முடித்தார். பிறகு புனேவில் உள்ள சிம்பயாஸிஸ் கல்லூரியில் 2013-ம் ஆண்டு எம்.பி.ஏ மார்க் கெட்டிங் முடித்தார். அப்போதே ஐ.டி.சி நிறுவனத்தில் இன்டன்ஷிப் செய்தவர், படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ரீஜினல் மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டராக வேலைக்குச் சேர்ந்தார்.  இவரது பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் 'வளர்ப்பு மகன்' போல வளர்த்தது மன்னார்குடி திவாகரன். இவர், சசிகலாவின் தம்பி.

ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை

இந்த நேரத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பெங்களூருவில் சிறைக்குள் இருந்த ஜெயலலிதாவுக்குத் தேவையான உணவு, மருந்து, ஆடைகள் போன்றவற்றைக் கொடுக்க, நம்பிக்கையான ஆள் ஒருவர் வேண்டும். `வெளியில் இருந்து ஒருவரை நம்பி இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது’ என யோசனையில் ஆழ்ந்த ஜெயலலிதாவுக்கு, விவேக் ஞாபகம் வந்தது. ஜெயலலிதா சிறைக்குள் இருந்த 21 நாட்களும் மருந்துப் பொருட்கள், உணவு... என எல்லா தேவைகளையும் நிறைவேற்றியவர் விவேக்.

அதுவரை தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தவருக்குத் தேடிவந்தது கார்டன் வேலை. ஜெயலலிதாவிடம் அவருக்குச் சமமாக ஆங்கிலத்தில் பேசும் மன்னார்குடி வாரிசு இவர் மட்டும்தான் என்பதால், அம்மாவின் செல்லப் பிள்ளையாக மாறினார் விவேக்.

ஜாமீன் பெற்று ஜெயலலிதா மீண்டும் கார்டன் வந்ததும், விவேக்கிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டன. அதில் முக்கியப் பதவி, ஜாஸ் சினிமாஸ்  சி.இ.ஓ. கிண்டி தொழிற்பேட்டையில் இருக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் இப்போது படு பிஸி. தினம் தினம் சினிமா பிரமுகர்களைச் சந்திப்பது, புதிய படங்களை விலைக்கு வாங்குவது, ஜெயா டி.வி-க்கு சேட்டிலைட் உரிமம் வாங்கிக் கொடுப்பது... என ஆல் இன் ஆல் விவேக்தான். சுமார் 400 பேர் வரை வேலைபார்க்கும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்,  தமிழ்நாட்டில் உள்ள பிரதான தியேட்டர்களை தங்கள் வசம் கொண்டு வரும் அளவு வியாபாரத்தில் மும்முரமாகிறது. 

தியேட்டர்கள் எதையும் மொத்தமாக விலைக்கு வாங்காமல், குத்தகைக்கு எடுக்கலாம் என்பது 'ஐடியா'. எந்த தியேட்டராக இருந்தாலும் 5 ஆண்டுகள், 12 ஆண்டுகள் என குத்தகை அடிப் படையிலேயே பேசப்படுகின்றன. `நேரிடையாக  சொத்து வாங்கினால்தானே  வில்லங்கம் தேடி வரும். ஒப்பந்தம் போட்டுவிட்டு, தியேட்டர் ஃபர்னிச்சர்களைக் கணக்குக் காட்டி பேங்க் லோன் வாங்கலாம். லோனுக்கு மாதா மாதம் வட்டி கட்டினால் போதும். எந்த சட்டச் சிக்கலும் இல்லை' என பலரும் ஆலோசனை சொல்ல, விவேக் தரப்பு ஆர்வம் ஆகியிருக்கிறது. இதுவரையில் வங்கிக் கடனுக்கு சுமார் 1.25 கோடி ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறார்கள்.

``தமிழ்நாட்டில் 670 தியேட்டர்களில் 250 தியேட்டர்கள் தரம் வாய்ந்தவை. சினிமாவின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது இந்த தியேட்டர்கள்தான். இவற்றை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால்  தமிழ் சினிமாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப் பவையாக அவை மாறிவிடும். இந்தச் செயல் திட்டத்துக்கு வடிவம் கொடுப்பவர் விவேக்்'' என பின்னணியை விவரிக்கிறார் மன்னார்குடி வட்டாரங்களுக்கு நெருக்கமான ஒருவர்.



அரசியல் பஞ்சாயத்துகள் எதிலும் சிக்காமல் ஜாஸ் சினிமாஸை வளர்த்து எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் விவேக். ஆனால், `இன்னும் ஐந்து மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டத்தில் அதிகம் அடிபடப்போவது விவேக் பெயராகத்தான் இருக்கும்’ என்கிறார்கள். இதுவரையிலான `ஸோ கால்டு' மன்னார்குடி குழுவினர்போல் அல்ல விவேக். இவர் தெளிவான பிசினஸ் மேன். இவர் மன்னார்குடி வெர்ஷன் 2.0.

உறுமீன் - இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்

பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், மெட்ராஸ் கலையரசன் வில்லனாகவும் நடித்துள்ள படம் உறுமீன்.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமென காத்திருக்குமாம் கொக்கு. இந்த வரிகளுக்கேற்ப தலைமுறைகள் கடந்தும் பழி வாங்கும் கதை தான் இப்படம்.

இதில் ஜிகர்தண்டாவில் வில்லனாக மிரட்டி தேசிய விருது பெற்ற பாபி முழு நேர கதாநாயனாக நடித்துள்ளார். இரண்டு விதமான காலகட்டத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மெட்ராஸ் படத்தில் புரட்சிகர இளைஞனாக நடித்த கலையரசன் இதில் மிரட்டும் வில்லனாக நடித்து இந்த வருடத்தில் கவனிக்கப்படும் வில்லனாக கலக்கியுள்ளார்.

கதாநாயகி ரேஷ்மி மேனன் வழக்கமான கதாநாயகிகளை போல பாடலுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டுமே வந்து போகிறார். இப்படத்தில் நடித்த போது தான் பாபிக்கும், ரேஷ்மிக்கும் காதல் உருவானது குறிப்பிடத்தக்கது.

காளி வெங்கட், அப்புக்குட்டி தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அழகாக காட்டியுள்ளார்.

அச்சுவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிக்க வைக்கிறது.


கதாபாத்திரங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். அறிமுக இயக்குனராக சிறந்த படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சக்திவேல் பெருமாள்சாமி.


மொத்தத்தில் இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்.

கருப்பட்டி சீனி மிட்டாய்

சிறு வயதில் நாம் சீனி மிட்டாய் சாப்பிட்டிருப்போம். தற்போது அது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சிறு வயதில் சுவைத்த சீனி மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு பதிலாக, ஆரோக்கியத்தை வழங்கும் கருப்பட்டி சேர்த்து சீனி மிட்டாய் செய்தால், உடலுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது.

இங்கு கருப்பட்டி சீனி மிட்டாயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கருப்பட்டி - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, பின் நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதிலுள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு, அளவாக தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்து, தனியாக 1/2 அல்லது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கருப்பட்டியை தட்டி, ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை கரைய விட வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி 6-8 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு தனியாக வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான பாலிதீன் கவரில் சிறிது வைத்து, அந்த கவரில் முறுக்கு போன்று வரும் அளவில் ஓட்டை போட்டு, எண்ணெய் சூடானதும், அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமானதும், அதனை எடுத்து கருப்பட்டி பாகுவில் போட்டு 2 நிமிடம் முன்னும், 2 நிமிடம் பின்னும் திருப்பிப் போட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மாவையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய் ரெடி!!!