Friday, December 4, 2015

உறுமீன் - இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்

பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், மெட்ராஸ் கலையரசன் வில்லனாகவும் நடித்துள்ள படம் உறுமீன்.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமென காத்திருக்குமாம் கொக்கு. இந்த வரிகளுக்கேற்ப தலைமுறைகள் கடந்தும் பழி வாங்கும் கதை தான் இப்படம்.

இதில் ஜிகர்தண்டாவில் வில்லனாக மிரட்டி தேசிய விருது பெற்ற பாபி முழு நேர கதாநாயனாக நடித்துள்ளார். இரண்டு விதமான காலகட்டத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மெட்ராஸ் படத்தில் புரட்சிகர இளைஞனாக நடித்த கலையரசன் இதில் மிரட்டும் வில்லனாக நடித்து இந்த வருடத்தில் கவனிக்கப்படும் வில்லனாக கலக்கியுள்ளார்.

கதாநாயகி ரேஷ்மி மேனன் வழக்கமான கதாநாயகிகளை போல பாடலுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டுமே வந்து போகிறார். இப்படத்தில் நடித்த போது தான் பாபிக்கும், ரேஷ்மிக்கும் காதல் உருவானது குறிப்பிடத்தக்கது.

காளி வெங்கட், அப்புக்குட்டி தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அழகாக காட்டியுள்ளார்.

அச்சுவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிக்க வைக்கிறது.


கதாபாத்திரங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். அறிமுக இயக்குனராக சிறந்த படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சக்திவேல் பெருமாள்சாமி.


மொத்தத்தில் இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்.

0 comments:

Post a Comment