Thursday, December 24, 2015

பூலோகம்" - அகிலம் போற்றும் தரமான தமிழ் படம்! லாஜிக் குறைகள் இருந்தாலும்..

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், புதியவர் என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி - த்ரிஷா ஜோடி நடிக்க, வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பூலோகம் .

பூலோகம் படத்தில் பூலோகமாகவே நடித்திருக்கும் ஜெயம் ரவி இதில், குத்துசண்டை வீரர் என்பதும், பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தன் சிஷ்யர் புதியவர் என்.கல்யாண கிருஷ்ணனுக்காக இப்படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது!

வட சென்னையின் சந்து, பொந்துகளில் கூட புகழ்வாய்ந்த பாக்ஸிங் எனும் குத்துசண்டை விளையாட்டில் கலக்கும் வட சென்னை வாசியான ஜெயம்ரவிக்கு ஒரே ஒரு ஆசை. பாக்ஸரான தன் அப்பாவை பாக்ஸிங்கில் சாக காரணமான பரம்பரை வீரனை பாக்ஸிங்ரிங்கில் வைத்து தீர்த்து கட்டவேண்டும் என்பது தான் அது. ரவியின் ஆசைப்படியே ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை குலத்தொழிலாக கொண்ட நாட்டு வைத்தியர் பொன்வண்ணன். பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தியும், விதவிதமான விளம்பரங்கள் மூலமும் பணம் பண்ணுகிறார் பிரபல சேனல் அதிபரான பிரகாஷ்ராஜ். ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவது கண்டு மனம் இறங்கும் ஜெயம் ரவி, இனி குத்துசண்டை வேண்டாம் என விலகி ஒதுங்க, அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ், அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து பலியாக்க முயற்சிக்கிறார்.

பிரகாஷ்ராஜின் பணத்தாசையை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் ரவி, அவரிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்க, அதில் வெகுண்டெழும் - பிரகாஷ்ராஜ், ரவியை தீர்த்து கட்ட வெளிநாட்டில் இருந்து ஒரு பாக்ஸரை களம் இறக்குகிறார். இறுதியில் விலகி நின்ற ஜெயம் ரவி ஜெயித்தாரா? வெளிநாட்டு பாக்ஸரும் அவரை களம் இறக்கிய பிரகாஷ் ராஜூம் ஜெயித்தனரா..? எனும் கதையுடன், ரவி வசிக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்தும் த்ரிஷாவுடனான ரவியின் காதலையும் கலந்து கட்டி, பூலோகத்தை வித்தியாசமாக, விறுவிறுப்பாக படைத்திருக்கின்றனர் பூலோகம் படக்குழுவினர்.

ஜெயம் ரவி, பூலோகம் எனும் இளம் குத்துச் சண்டை வீரராக கச்சிதமாக நடித்திருக்கிறார். குத்துசண்டை காட்சிகளில் நிஜ பாக்ஸிங் வீரர்களே தோத்துப் போகுமளவிற்கு ரிஸ்க் எடுத்திருக்கும் ரவி, அமெரிக்காவில் இருந்து ஆஜானுபாகுவாக வந்த பாக்ஸர் ஸ்டீபன் ஜார்ஜூக்கு பெண் உடை கொடுத்து செய்யும் குறும்பு, த்ரிஷாவை பிரித்து மேய துணியும் துணிச்சல், இப்படி தகுதியே இல்லாதவனை செலக்ட் செய்து அனுப்புறதால தான் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு பித்தளை கப் கூட வாங்குறதில்லை... என மீடியாக்கள் முன் பெங்கும் ஆவேசம்! தன் தந்தை சாவுக்கு காரணமான பரம்பரையை பழி தீர்த்து விட்டு, பின் பரிதவிப்பது... என சகலத்திலும் சக்கைப்போடு போட்டிருக்கிறார்.

நாயகி த்ரிஷா, லோக்கல் ஹோட்டல் அதிபராக செமயாய், மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் ஜெயம் ரவியின் உருவத்தை உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு பண்ணும் கிளாமர் கலாட்டா செம கலர்புல்.

பிரகாஷ் ராஜ், வில்லதனத்தில் வழக்கம் போலவே அமைதியாக, அசால்ட்டாக தன் இயல்பான நடிப்பை வழங்கி, பேஷ் , பேஷ் வாங்கியிருகிறார். அதிலும், என்ன பூலோகம் எம்ஜிஆர் மாதிரி பேசுறே... என நக்கலாக பேசுவதும் அதற்கு, ரவி நீ... நம்பியார் மாதிரி பேசறது நியாயமா ? எனக் கேட்பதும் தியேட்டரில் கரகோஷத்தை ஏற்படுத்துகிறது.

பொன்வண்ணனும், தன் பங்கிற்கு, ரவியின் குருநாதராக பொளந்து கட்டியிருக்கிரார். க்ளைமாக்ஸில் வரும் அந்த ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸூம் கச்சிதம்! பாலா சிங், சண்முகராஜன், ரவி மரியா, சாம்ஸ், வட இந்திய சாம்பியன் தயாள், உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஸ்டீபன் ஜார்ஜ்.... உள்ளிட்டோர் ஜெயம் ரவி - த்ரிஷா - பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரின் நல் நடிப்பு மாதிரியே, எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் பளிச் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையில், சாவுக்குத்துப்பாடல், நாட்டு வைத்தியப் பாடல், மயானக் கொல்லைப்பாடல்... என ரகத்திற்கு ஒரு ராகத்தில் அசத்தியிருக்கிறார்.

"ஒரு வரலாறை வளரவிடாமல் தடுக்காதீங்க... , பூலோகம், அவன், சொன்ன மாதிரி தோத்தவனா உன்னை பார்க்கவும் முடிய... துரோகியா என்னால வாழவும் முடியலை... என்பது உள்ளிட்ட எஸ்.பி. ஜனநாதனின் நறுக் - சுருக் வசனம்... உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், என்.கல்யாண கிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் பூலோகம் படத்தை தமிழ் படவுலகம் மற்றுமின்றி இந்திய சினிமா உலகமே போற்றும்படி மிளிர வைத்துள்ளது என்றால் மிகையல்ல!

ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும், நிச்சயம் , பூலோகம்" - அகிலம் போற்றும் தரமான தமிழ் படம்!

0 comments:

Post a Comment