
1917 ஆம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் பிறந்து, 24 டிசம்பர் 1987ம் நாள் இயற்கை எய்திய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சாதாரண மனிதர்களால் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்று. 1936ல் சதிலீலாவதி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தனது திரை வாழ்வை தொடங்கிய ராமச்சந்திரன், பின்னர் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார்.
ஆயிரத்தில் ஒருவன், அரசகட்டளை, மன்னாதி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைபெண், அன்பே வா என அவர் நடித்த படங்கள் எல்லாமே சினிமா உள்ளவரை அழியாது நிற்கும் அளவிற்கு இன்றும் சின்னத்திரைகளிலும், சில வெள்ளித்திரைகளிலும் ஹவுஸ்ஃபுல்லாகி ஓடுவது எம்.ஜி.ஆர் என்ற அந்த ஒற்றை சொல்லுக்கே உரிய மேஜிக்.
தனது வாழ்நாளில் மொத்தம் 136 படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமின்றி, நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டார். 'வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லை நான் நாடோடி' என்று சவால் விட்டே அந்த படத்தை அவர் வெளியிட்டு வெற்றியும் பெற்றது இன்றளவும் தமிழக மக்களின் மனதில் மன்னாதி மன்னனாக விளங்குகிறார்.
1977 முதல் 1987 வரை (1984-1985 தவிர்த்து) தமிழக முதல்வராக தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த ஒரே தமிழக முதலமைச்சரும் அவரே. தனது படங்களில் இடம்பெறும் தத்துவ பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமே அவரது அரசியல் செல்வாக்கையும் மக்கள் செல்வாக்கையும் அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
தமிழ்நாட்டில், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று எத்தனை திறமை வாய்ந்த நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி. ஆரின் சிம்மாசனம் என்றுமே அவருக்காகவே காத்திருக்கும் என்பதே உண்மை.
எம்.ஜி. ராமச்சந்திரனின் 28வது நினைவு தினமான இன்று தமிழ் திரையுலகமே தனது மூத்த நடிகருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகிறது.
0 comments:
Post a Comment