Sunday, December 20, 2015

பீப் சாங் விவகாரம் : வருத்தத்தில் இளையராஜா குடும்பத்தினர்

 பீப் சாங் விவகாரம் குறித்து இளையராஜாவிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட விவகாரமும், அது சர்ச்சையாக்கப்பட்டதும் இளையராஜா குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. கிட்டதட்ட 75 வயதாகும் இளையராஜா, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்கினார். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தானே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தன்னால் முடிந்த உதவிகளை தனது சொந்த பணத்தில் செய்தார். இதே போன்று எக்மோர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும் நேரில் சென்று சந்தித்தார். கடலூருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2000 குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வழங்கியதுடன், அவர்களின் சோகத்தையும் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் பெப்சி தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு 5000 பெட்சீட்களை தனது சொந்த பணத்தில், நேரில் சென்று வழங்கினார். அவர்களுக்கு தேனையான அனைத்து உதவிகளையும் செய்தார்.

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாத போதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்தவர்களை பாராட்டுவதற்காக எத்திராஜ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, உடல் நலனையும் பொருட்படுத்தாமல் 1200 பேருக்கும் நின்றபடியே தனது கைகளால் கையெழுத்திட்டு, சான்றிதழ்களை வழங்கினார். இந்நிலையில், சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பீப் சாங் பற்றி கேள்வி கேட்ட போது இசைஞானிக்கு வந்த கோபம் நியாயமான ஒன்று தான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறுவதற்காகவே அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றபடி அது எந்த ஒரு சினிமா விழாவோ அல்லது தனிப்பட்ட விழாவோ இல்லை. அந்த விதத்தில் பீப் சாங் விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாக்கப்பட்டு வருவது இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் பெரிதும் பாதித்துள்ளது.

இது குறித்து இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா கூறுகையில், வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது என் தந்தை தனது உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் 5 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று, மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார். வெள்ள பாதிப்புக்கள் குறித்து ஒரு வார காலமாக அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாத போதும் பல இடங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதங்கத்தில் இருந்தவரிடம் அந்த இடத்தில் அப்படி ஒரு கேள்வி கேட்டதாலேயே அவருக்கு கோபம் வந்தது. தயவு செய்து இந்த விஷயத்தை இனியும் பெரிதுபடுத்த வேண்டாம். மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது. அதனால் இந்த பிரச்னையை இனியும் பெரிது படுத்த வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment