
இசை உடலை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் எப்போதோ சிறுவனாய் இருந்த காலத்தின் டவுசரைத் தேட வைக்கிறது, திருவிழாக் காலங்களில் கலர் கலராய் பறக்கும் பலூன்களில் ஏற்றிக் கொண்டு மறந்து போன அத்தை மகளின் கண்களில் இறக்கி விடுகிறது, கண்மாய்க் கரையெல்லாம் பஞ்சு மிட்டாய் பொதி நுரைக்க புளியங்காற்றை நாசியில் ஏற்றுகிறது.
பறையும், உறுமியும், நாதசுரமும், தவிலும் தான் இந்த மண்ணுக்கும், இந்த மண்ணில் முளைத்த இந்த உடலுக்குமான உயிர்ப்பான இசை என்று பொட்டில் அதிரும் நரம்புகளில் பறைக் குச்சியால் அடித்து அடித்து நொறுக்குகிறார் ராஜா. பறை முழங்க முழங்க இடையில் ஊதும் கொம்பின் இசை கண்ணீரை எங்கிருந்து கொண்டு வருகிறது என்று தெரியவில்லை.
மண்ணையும், உறவுகளையும் இழந்து வெகு தொலைவில் வாழும் எங்கள் அண்ணனும் தம்பியும், மாமனும் மச்சானும் இந்த இசையைக் கேட்டால் ஆடியும், அழுதும் தீர்த்து விடுவான். பறையின் தோலில் இருந்து கிளம்பி நரம்புகளை சூடேற்றி முறுக்கும் அற்புத இசை அனுபவம் நாயகன் அறிமுகம் செய்யப்படும் காட்சிக்கான பின்னணியாக ஒலிக்கிறது, கணினியில் இருந்து ராஜாவின் இசையைக் காதுக்குக் கொண்டு வரும் கருவியின் வயர்களை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தி அறுந்து விடாமல் பிடித்துக் கொள்கிறேன். ஆனாலும், அவை துடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
நலிந்து நகர மறுக்கும் வாழ்க்கையைச் சில நேரம் இசை உயிரமுதூட்டிப் பாதுகாக்கிறது, முறிந்த சிறகோடு பறத்தலைப் பற்றிய கனவு காணும் பறவைகளின் துளிர்க்கும் சிறகாய், காற்றடைத்த பையான மானுட உடலின் உணரக்கூடிய ஒற்றை உண்மையாய் இசை பெருகி வழிகிறது. ராஜா நாம் வாழும் காலத்தின் அதிசயம், நம் வாழ்க்கையின் எல்லாவற்றுக்குமான ஒற்றைத் தீர்வாய் உயிர் வாழும் இசைப் புதையல்.
0 comments:
Post a Comment