Saturday, December 19, 2015

சீசனுக்கு சீசன் மாறும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவிற்கு என்று அவ்வபோது ஒரு சீசன் வந்து போகும். அந்த வகையில் 90களில் இருந்து 2000 வரை வந்த படங்களில் பெரும்பாலும் காதல் கதை படங்கள் தான்.

ஹீரோ ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதல் செய்வார், முதலில் முடியாது என்று சொல்லும் பெண், டார்ச்சர் செய்யும் ஹீரோவையே காதலிக்க தொடங்குவார், பின் வீட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மாப்பிள்ளை வரவு, கிளைமேக்ஸில் அவரே ஹீரோ-ஹீரோயினை சேர்த்து வைத்து சொந்த காசிலேயே டிக்கெட் போட்டு அமெரிக்கா சென்று விடுவார்.

முதன் முதலாக இதுப்போன்ற கதையில் வெளிவந்த படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பாலிவுட் படமான dilwale dulhania le jayenge என்ற படம் தான். ஷாருக், கஜோல் நடிப்பில் இப்படம் கிட்டத்தட்ட 15 வருடங்கள் திரையரங்கில் ஓடியது.

இதன் வெற்றி காரணமாகவே இதே ஜோடி மீண்டும் இணைந்து நேற்று வெளிவந்தது. இப்படத்தின் பாதிப்பு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் இப்படியான படங்கள் வந்தது.

பின் 2000க்கு மேல் கத்தி, துப்பாக்கி கலாச்சாரம் தலை துக்கியது. இதுவரை ஹீரோ என்றால் கண் தெரியாதவர்களுக்கு சாலை கடக்க பயன்பட்டு வந்தவர், அதன் பிறகு கையில் ஆயுதம் ஏந்தி அடிதடி செய்ய ஆரம்பித்தார். இதற்கு ரசிகர்கள் மாஸ் என்று ஒரு சாயம் பூசி ரசித்தனர். இதே பாணியில் திருமலை, சிவகாசி, திருப்பதி, பரமசிவன் இன்றைய தமிழ் சினிமாவை ஆளும் விஜய், அஜித்தே பல படங்கள் நடித்தனர்.

பிறகு பக்கம் பக்கமாக பன்ச் வசனம், எதிர்களிடமிருந்து இந்தியாவை பலமுறை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற படங்களே திரைக்கு அதிகம் வந்தது. இதற்கிடையில் வன்முறை கதை என்றாலும் பருத்தீவிரன், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை என ஒரு சில நல்ல படங்களும் வந்து சென்றது.

ஆனால் இதையெல்லாம் விட கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா அமானுஷிய சக்தியிடம் சிக்கி தவிக்கின்றது. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் இன்னும் பேய் பிடிக்கவில்லை, ஆனால், திரையில் எல்லோரும் பேய் பிடித்து தான் ஆடுகிறார்கள். பேயே வந்து ’போதும்டா இனிமே என்ன வச்சு படம் எடுக்காதீங்க’ என்று கேட்கும் அளவிற்கு எடுத்து ரசிகர்களை சலிக்க வைத்து விட்டனர்.

ஆனால், இந்த வருடம் இவை ஏதுமே இல்லாமல் குடும்ப உறவுகளை மையப்படுத்தி வெளிவந்த பாபநாசம், வேதாளம் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் புரட்சி செய்தது. இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விஷயம் என்பதால் பலரும் இனி குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

நேற்று ரிலிஸான தங்கமகன் முதல் அடுத்து ரிலிஸாகும் பசங்க-2, ரஜினிமுருகன் என பல படங்கள் செண்டிமெண்டிற்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களே. இதுவும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை...ஏனெனில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களும் அவ்வபோது தாறுமாறு ஹிட் அடிப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment