Tuesday, December 22, 2015

''தில்வாலே'' - திரை விமர்சனம் - சற்று வருத்தமே. ஷாரூக்கான் - கஜோல்-க்காக வேண்டுமானால் பார்க்கலாம்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு ஷாரூக்கான், ரோகி்த் ஷெட்டியுடன் இணைந்துள்ள படம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஷாரூக்கான்-கஜோல் ஜோடி சேர்ந்துள்ள படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் ரொமான்ட்டிக் திரைப்படம் ''தில்வாலே''. இந்த தில்வாலே ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...

கதைப்படி, ராஜ் எனும் ஷாரூக்கானும், வீர் எனும் வருண் தவானும் சகோதரர்கள். வீர், இஷிதா எனும் கீர்த்தி சனோனை காதலிக்கிறார், அவரை திருமணம் செய்ய எண்ணி, தனது விருப்பத்தை அவரது அண்ணனான வீர் எனும் ஷாரூக்கானுடன் சொல்கிறார். தம்பியின் காதலை நிறைவேற்ற அவரும் ஓ.கே. சொல்கிறார். ஆனால் கீர்த்தி சனோனின் அக்காவான இசிதா மீரா எனும் கஜோல் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், அதற்கு காரணம் வருண் அண்ணனான ஷாரூக்கை கஜோலுக்கு பிடிக்கவில்லை. எதனால் ஷாரூக்கை கஜோல் வெறுக்கிறார், அவர்களுக்கு இடையேயான உறவு என்ன.? வருண்-கீர்த்தியின் காதல் கைகூடியதா...? இது எல்லாவற்றுக்கும் விடை தெரிய தியேட்டரில் போய் மீதி படத்தை பாருங்கள்.

இளம் காதலர், மாபியா கும்பலின் தலைவன் என இரண்டு விதமான ரோல்களில் நடித்துள்ளார் ஷாரூக்கான். அதிலும் மாபியா கும்பல் ஷாரூக்கானின் ரோல் தான் வாவ் சொல்ல வைக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள கஜோல், இந்தப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்த அசத்தியிருக்கிறார்.

ஷாரூக்-கஜோலை போன்று வருண் தவான், கீர்த்தி சனோனும் தங்களது ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரோகித் ஷெட்டி அற்புதமான இயக்குநர் தான், ஆனால் தில்வாலே படம் முழுக்க தன் இயக்குநர் ரோலை முழுமையாக பூர்த்தி செய்ய தவறிவிட்டார். அண்ணன் - தம்பி பாசத்துடன் காதல், ஆக்ஷ்ன், சென்ட்டிமென்ட், ரொமான்ஸ் உள்ளிட்ட எல்லா விசயங்களையும் படத்தில் கொடுத்துள்ளார் இயக்குநர், ஆனால் புதிதாக ஒன்றும் இல்லை, ஏற்கனவே பல படங்களில பார்த்து பழகிய காட்சிகளை தான் கொடுத்துள்ளார். மேலும் ஷாரூக்-கஜோல் இடையேயான கெமிஸ்ட்ரியும் சிறப்பாக இல்லை.

படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் எல்லாம் ஸ்டைலாக சர்வதேச தரத்தில் எடுத்திருக்கிறார்கள், படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் பலம் சேர்த்துள்ளது. ஆனால் இத்தனை இருந்தும் படத்தில் புதிய விசயங்கள் எதுவும் இல்லாததால் தில்வாலே பெரிதாக கவரவில்லை.

''தில்வாலே'' ஒரு பேமிலி என்டர்டெயின்ட்மென்ட் படம் தான், ஆனால் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லாதது சற்று வருத்தமே. ஷாரூக்கான் - கஜோல்-க்காக வேண்டுமானால் ''தில்வாலே'' படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

0 comments:

Post a Comment