
ரஜினிகாந்த் நடித்து முதன் முதலில் 175 நாட்கள் ஓடிய சிறப்புப் பெற்றது இந்தப் படம். இதற்கு முன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் முதன் முதலாக முற்றிலுமான ஒரு கமர்ஷியல் ஹீரோவாக நடித்த படம். ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் 22 நாட்களில் படமாக்கப்பட்ட இந்தப் படம் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்குப் பிறகு வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்ட படமாக அமைந்தது.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய கணேஷ் - வசந்த் நாவல்களைக் கொண்டு பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம், பாடல்களுடன் உருவான படம் இது. இளையராஜாவின் இசையில் உருவான ''ஹே பாடல் ஒன்று..., அக்கரை சீமை அழகினிலே..., என் உயிர் நீதானே..., டார்லிங்..டார்லிங்..., ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே...” என அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஸ்டீரியோ முறையில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. வெளிநாடுகளின் அழகை தன்னுடைய காமிராவால் அழகாகப் படமாக்கியிருந்தார் ஒளிப்பதிவாளர் பாபு.
ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பும், ஸ்ரீதேவியின் கிளாமரான நடிப்பும் இன்று வரை ரசிகர்களைக் கவர்ந்த ஒன்று. ரஜினிகாந்திற்கனெ தனி நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிக் கொடுத்த பெருமை 'ப்ரியா' படத்திற்கு உண்டு. இப்படம் 1979ம் ஆண்டு கன்னடத்திலும் வெளியானது.
0 comments:
Post a Comment