Wednesday, December 23, 2015

'கத்தி' முதல் '2.0' வரை: சினிமாவும் அரசியல் ஆர்ப்பரிப்பும்

 சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால், விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. லைக்கா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கத்தி', தமிழ் ஈழ ஆதரவாளர்களால் சர்ச்சைக்கு உள்ளாகியது. படத்தின் உள்ளடக்கத்துக்காக இல்லாமல், படத் தயாரிப்பாளருக்காக படத்தை வெளியிடக்கூடாது என்று போராட்டங்கள் வெடித்தன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சுமார் 65 தமிழ் அமைப்புகள், லைக்கா நிறுவனங்கள், லைக்கா செல்பேசி உள்ளிட்டவைகளை எதிர்த்தன. லைக்கா நிறுவனரான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு இலங்கைப் போர்க் குற்றங்களில் முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

விடுதலைப் புலிகளின் போராட்டங்களை தவறாகக் காட்சிப்படுத்தி இருப்பதாகக் கூறி, பிரவீன் காந்தியின் 'புலிப்பார்வை' என்னும் திரைப்படத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு, அதே லைக்கா நிறுவனம் இப்போது ஷங்கருடன் கைகோர்த்து எந்திரன் 2 படத்தை அறிவித்திருக்கிறது. சர்ச்சையை ஏற்படுத்திய கத்தி திரைப்படத்தை இந்தியில் மறுஆக்கம் செய்யவும், தெலுங்கில் சிரஞ்சீவின் 150 -வது திரைப்படத்தையும் இணைந்து தயாரிக்கவும் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது லைக்கா.

லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராஜு மகாலிங்கம் இது குறித்துப் பேசியபோது, "இதுவரை திரைப்படத் தயாரிப்புகளில் சுமார் 500 கோடி வரை முதலீடு செய்திருக்கிறோம். எந்திரன் 2 - க்கு மட்டும் சுமார் 350 கோடி பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தவிர தெலுங்கு மற்றும் இந்தியில் இரண்டு சூப்பர் ஸ்டார் நடிக்கும் படங்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறோம்" என்றார்.

படத்தயாரிப்பு குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழவில்லையா என்ற கேள்விக்கு, "சென்னை உயர்நீதி மன்றம் எங்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. படத்தின் ப்ரமோஷன் வேலைகளிலும், டைட்டில் கார்டில் பெயர் போட்டுக்கொள்ளவும் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குப் பிறகு, 'நானும் ரவுடிதான்' படத்தின் விநியோக உரிமையைப் பெற்று, படத்தை வெளியிட்டோம்" என்கிறார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் டி.வேல்முருகன், லைக்கா நிறுவனத்துக்கு எதிரான தங்கள் போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் 2016 தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளையும் தயாராகி வரும் சூழ்நிலையில், இந்தப் போராட்டத்துக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது கடினமே என்றும் கூறியிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் இது குறித்துப் பேசியபோது, "இதைக் காட்டிலும் பொதுமக்களைப் பாதிக்கும் மற்ற விஷயங்கள் மீதுதான் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். லைக்காவுக்கு எதிரான போராட்டங்கள், இப்போது எங்களின் இலக்கல்ல" என்றார்.

'கத்தி' மேல் நடந்த நிகழ்வுகளின் பார்வை:

ஆகஸ்ட் 2014

'கத்தி' பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் ஈழ ஆதரவாளர்களைச் சந்தித்தார். முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமானவராகக் கருதப்பட்ட லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. விடுதலைப் புலிகளின் போராட்டங்களை தவறாகக் காட்சிப்படுத்தி இருப்பதாகக் கூறி, பிரவீன் காந்தியின் 'புலிப்பார்வை' என்னும் திரைப்படத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆகஸ்ட் 20, 2014

கத்தி மற்று புலிப்பார்வை ஆகிய படங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சுமார் 65 தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. லைக்கா நிறுவனத்தை முன்னிறுத்தும் அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அக்டோபர் 21, 2014

பட வெளியீட்டு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 21 ல், 'கத்தி' படத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாயின. இரண்டு சினிமா அரங்குகள் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டன.

அக்டோபர் 22, 2014

லைக்கா நிறுவனம் தொடர்பான அனைத்துப் பெயர்களையும், அடையாளங்களையும் நீக்கிய பின்னர், சுமார் 500 திரையரங்குகளில் கத்தி படம் வெளியானது.

நவம்பர் 27, 2014

சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய லைக்கா நிறுவனம், தங்களின் பெயரையும், அடையாளத்தையும் வைத்துக் கொள்ள காவல்துறையின் பாதுகாப்பு கேட்டது. உயர் நீதிமன்றமும், காவல்துறை முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அக்டோபர் 21, 2015

மிகச்சரியாக ஒரு வருடம் கழித்து லைக்கா நிறுவனம், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் விநியோக உரிமையைப் பெற்று படத்தை வெளியிட்டது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

நவம்பர் 2015

எந்திரனின் தொடர்ச்சியாக எந்திரன் 2.0 படத்தைத் தயாரிக்க உள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 350 கோடி அளவில் பிரமாண்டமாக படம் வெளிவரப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்‌ஷய் குமார் நடிக்கும், கத்தி படத்தின் இந்தி ஆக்கத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment