Saturday, December 12, 2015

ஐந்து வாலிபர்களில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன்? – டிவி சேனல் நிகழ்ச்சி

சமீபத்தில் ஒரு நாள் முகச்சவரம் செய்ய சலூனுக்கு சென்றிருந்தேன். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எனக்கு ஷேவிங் செய்யத் தொடங்கினார். தொலைகாட்சியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒரு மேக்கப் போட்ட அம்மா, ஒரு ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை உட்கார வைத்துக் கொண்டு, எதிரில் ஐந்து வாலிபர்களையும் உட்கார வைத்து அதில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன் என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த பெண்ணின் அருகில் தலை கவிழ்ந்த படி அந்த பெண்ணின் அண்ணனும் தாயும் அமர்ந்திருந்தார்கள். நடுநடுவே பெண்ணை இப்படி வளர்த்திருக்கிறீர்களே என்று அவர்களை திட்டிக் கொண்டே விசாராணை நடத்திக் கொண்டிருந்தார் நாட்டாமைகாரம்மா.

எனக்கு ஷேவிங் செய்தவர் அதை ரசித்து, சிரித்து, பார்த்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார். உம்பொண்ண உக்கார வச்சு கேள்வி கேட்டா இப்படி சிரிப்பயா? என்று கேட்கத் தோன்றியது. ஆனால் அவர் என் கழுத்தில் கத்தி வைத்துக் கொண்டிருந்ததால் அந்த எண்ணத்தை உடனே கை விட்டு விட்டேன்.

இவர்களுக்கெல்லாம் யார் இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அதிகாரத்தைக் கொடுத்தது? இவர்கள் நடத்தும் கட்டப்பஞ்சாயத்துகளை விட காவல் நிலையங்களில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எவ்வளவோ மேல்! ஏனென்றால் போலீஸ் நிலையங்களில் இரு சாராரிடமும் பணம் பெற்றுக் கொண்டு விஷயத்தை முடிந்தவரை வெளியே வராமல் செய்து விடுவார்கள். ஆனால் இங்கு பிரச்சனையை பெரிதாக்கி விடுவதுடன் காலமெல்லாம் அவர்கள் வாழ்வில் மீண்டும் தலையெடுக்கவே முடியாத அளவுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதற்கு விளம்பரதாரர்கள் மூலம் பணம் வேறு! பணத்தையும் வாங்கிக் கொண்டு வாழ்க்கையையும் அழிப்பதற்கு, போலீஸ்காரர்களே மேல் தானே! ஊர் புறணிகளை கேட்டே வளர்ந்த நம் சமுதாயத்துக்கும் ஊரான் பிரச்ச்னை அல்வா சாப்பிடுவதைப் போல் தான் இருக்கிறது!

இன்னொரு விஷயம் கூர்ந்து கவனித்தால் தெரியும். இதில் பங்கு பெறுபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களாகவே இருக்கிறார்கள். தவறு செய்பவர்கள் அனைவரும் இவர்களே என்பதைப் போன்ற மாயத்தோற்றத்தை இவர்கள் சித்தரிக்கிறார்கள். மேல்வர்க்கத்தினர் ஒருவர் கூட இதில் கலந்து கொண்டதே இல்லை. ஏன், அவர்களுக்குள் பிரச்சனை வருவதே இல்லையா? மக்களும் இவர்களை இனம் கண்டு இவர்களை ஒதுக்க வேண்டும். குடுபத்துக்குள் பிரச்சனை ஏற்பட்டால் அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களிடமே முறையிட்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். அது நடக்காத வரை இவர்கள் நிறுத்தப் போவதே இல்லை.

0 comments:

Post a Comment