Thursday, December 17, 2015

அனிருத்தை வேண்டாம் என்றார் ஹரி! அவரது சாபம்தானோ இதெல்லாம்?

ஹரி மாதிரியான டென்ஷன் பார்ட்டிகள் சினிமாவிலிருப்பது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஹீரோக்களுக்கு நல்லதல்ல! எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் எட்டாம் கிளாஸ் பையனை, கண்டிப்பான கணக்கு வாத்தியார் டீல் பண்ணுவது போலவே பண்ணுவார். கோவில் படத்தில் கூட சிம்பு இவரிடம் சிக்கி சின்னாபின்னப்பட்டார். அவரது சட்டாம்பிள்ளை கதைகளை கேட்டால், மனுஷனுக்கு இவ்வளவு சூடு ஆகாதுப்பா என்று ஹீரோக்களுக்கு மனது பரிதாப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

இப்போது ஹீரோக்கள் வரிசையில் ஹரியிடம் சிக்கி, கழண்டு ஓடியவர் அனிருத்! சிங்கம் 3 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார். ஆனால் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் அனிருத்துதானாம். ராவெல்லாம் கண் விழிச்சு, பகலெல்லாம் குட்டித்தூக்கம் போடுகிற அன்வான்ட்டட் அக்லி பழக்கம் அனிருத்தையும் ஒட்டிக் கொண்டது. அதற்கெல்லாம் காரணம், இப்போது கூடா நட்பில் சிக்கி குழி எது பழி எது என்று தெரியாமல் ஓடக் காரணமாக இருந்த ‘அவர்’தான்.

கம்போசிங்குக்காக தொடர்ந்து மூன்று நாட்கள் அனிருத் ஆபிசுக்குப் போன ஹரிக்கு அனிருத் போட்ட ட்யூன்கள் எதுவுமே செட் ஆகவில்லை. உறங்கியும் உறங்காமலும் ட்யூன் போட்டால், ராகமா வரும்? மாறாக ஹரிக்கு கோபம்தான் வந்தது. தம்பி… உனக்கும் எனக்கும் சரிபட்டு வராது என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம்.

அது கிடக்கட்டும்… ஒரு ஜோக்! சமீபத்தில் பேஸ்புக்கில் வந்தது. “அனிருத் கொடும்பாவி எரிப்பு” என்பதுதான் தலைப்பு. பக்கத்தில் ஒரு படம் போட்டிருந்தார்கள். அதில் ஒரு ஸ்டேண்டில் ஒரே ஒரு ஒல்லி ஊதுவத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது. (கிரிகேட்டர்லாம் சினிமாவுக்கு வெளியில்தான் இருக்காங்க போலிருக்கு!)

0 comments:

Post a Comment