Friday, December 4, 2015

சென்னை மக்களுக்கு உதவ 15 இளைஞர்கள் சேர்ந்து அமைத்துள்ள 'கன்ட்ரோல் ரூம்'

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருபவர்களுக்கு உதவி செய்ய 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்கி பணியாற்றி வருகிறார்கள்.

ஈவு, இரக்கமில்லாமல் பெய்த மற்றும் பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். பொது மக்களே சக மக்களுக்கு உணவு, தங்க இடம் அளித்து உதவி செய்து கொண்டிருக்கின்றனர்.

அரசு அதிகாரிகள் வந்து நிவாரணம் வழங்கும் வரை பசியால் பொறுத்திருக்க முடியாது என்று சக மக்கள் உணவு சமைத்து பொட்டலங்கள் போட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் ஃபேஸ்புக்கில் கண்ணில் பட்ட இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளனர். அவர்கள் அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து, ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கி, லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன. அவர்களுக்கு உதவ பலர் தயாராக இருந்தும், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் இருந்தனர். இரு தரப்பினரை இணைப்பதற்காக, சென்னையில் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு சிறிய அறையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும் மொபைல்போன்கள் உதவியுடன் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளனர்.

உதவி தேவைப்படுவோரையும், உதவ விரும்புவோரையும் இணைத்து உதவிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மணிவண்ணன், அலெக்ஸ் பால் மேனன் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப்' எண் - 98806 55555, 'டெலிகிராம்' எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்' என கேட்டுக் கொண்டு உள்ளனர்.

0 comments:

Post a Comment