Thursday, December 10, 2015

வெள்ளம் வடிந்த வீடு... பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்!


கனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.

உடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன்  மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த  'டிப்ஸ்' இங்கே....

1. வெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஓரளவு வீடு சுத்தமானபின்னரே பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அடுத்தடுத்து வீட்டிற்குள் அழைக்கப்படவேண்டும்.

2. வீட்டிற்குள் நுழைந்ததும் எல்லா கதவு, ஜன்னல்களையும் திறந்து முடிந்த அளவு இயற்கையான காற்று, வெளிச்சம் உள்ளே புக அனுமதியுங்கள். காற்றோட்டம் உள் நுழைந்தால் தேங்கியிருந்த மழைநீரினால் உருவான விஷக்காற்று, அருவெறுப்பான நாற்றம் வெளியேறும். நீங்கள் உள்ளே ஆபத்து மற்றும் எந்த சங்கடங்களுமின்றி சுத்தம் செய்ய முடியும்.

3. வீட்டிற்குள் நுழைந்தபின் மின் இணைப்பு இருப்பதாக அறியவந்தாலும் தயவுசெய்து அவசர கதியில் விளக்குகள் / மின் விசிறிகளின் சுவிட்சுகளை ஆன் செய்யாதீர்கள். மின்கசிவு இருந்தால் ஷாக் அடிக்கக் கூடும். மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன் எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு அதுபற்றிய அறிவு இல்லையென்றால் செலவைப்பற்றி கவலைகொள்ளாமல் ஒரு எலக்ட்ரி ஷியன் கொண்டு சரிபார்ப்பது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் தேவையான உபகரணங்களுடன் பாதுகாப்பாக (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) செய்யவும்.

4. வீட்டிற்கு குடியேறியதும் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள். தேவையென்றால் மருத்துவர் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.

5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். 'பாதுகாப்பாக இருக்கிறோம். இனி ஒரு பிரச்னையுமில்லை' என்ற நம்பிக்கையை குடும்பத்தினரிடம் ஏற்படுத்த முயற்சியுங்கள்.

6. பாதிப்பிற்கு முன் வீட்டில் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. நல்லநிலையில் இருப்பதாக தெரிந்தாலும் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள்.  இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

ஃப்ரிட்ஜ் நல்லநிலையில் இருந்தாலும் அதை ஒரு முறை சர்வீஸ் செய்துவிட்டு பயன்படுத்தவும். காரணம் மின்வசதியின்றி மூடப்பட்ட நிலையில் இருந்ததால்,  அதில் பரவியிருந்த வாயு வேதிமாற்றத்தினால் துர்நாற்றத்தையும் விஷவாயுவையும் உருவாக்கியிருக்கலாம்.

அதனால் கண்டிப்பாக இதில் வைத்துவிட்டுப்போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுப்போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

7. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.

 வெள்ளத்தில் மூழ்கிய கார், பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?
கார், பைக் ஸ்டார்ட் ஆனா இன்ஷூரன்ஸ் கிடையாது!

தமிழ்நாட்டில் தொடர்ந்து கடந்த பல நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கின்றது. இந்த மழையினால் கார், பைக் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. சில இடங்களில் கார்களும், பைக்குகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பை போலவும் காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய கார், பைக் மற்றும்  வீடுகளுக்கு இழப்பீடு கோர முடியுமா? இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை எப்படி அணுகுவது? என்பது குறித்து வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர் திருமலை அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:
இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை பத்திரமாக பாதுகாப்பது நம்முடைய கடமை. உதாரணத்திற்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் வாகனத்தை ரேஸில் ஈடுபட்டு பாதிப்பிற்கு உள்ளானால் அதற்கு க்ளெய்ம் கிடையாது. ஏனெனில் நியாயமான பாதுகாப்பை அந்த நபர் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அதற்கு க்ளெய்ம் கிடைக்காது.

போட்டோ எடுங்க

ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட பைக், கார்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும். அதற்கு கார், பைக் போன்ற வாகனங்கள் மழை நீர், வெள்ள நீரில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானால் முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும் அதை ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
இமெயிலில் "என்னுடைய வாகனம் XXX இந்த பாலிசியில் கவராகியுள்ளது. இப்பொழுது (தேதி, நேரம் குறிப்பிட்டு) மழைநீரில் மூழ்கி பழுதடைந்து நிற்கிறது. ஸ்பாட் சர்வே செய்து இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இந்த இரண்டு வரிகளிலேயே இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்குகிறது.

க்ளெய்ம் கிடையாது

ஆனால் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், வெள்ளம் அல்லது மழை நீரில் பாதிப்படைந்த காரை இயக்கி, அதனால் இன்ஜின் சேதமடைந்தால் க்ளெய்ம் தரமாட்டார்கள். இதை தங்களது விதிகளில் குறிப்பிட்டுருப்பார்கள். ஏனெனில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் க்ளெய்ம் பொறுத்தவரை அவர்களுக்கு முதல் மூலக்காரணம் எதிர்பாராத செயலாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர் வாகனத்தை இயக்க செய்தால் அது திட்டமிட்ட செயலாக மாறிவிடுகிறது.
எனவே வாகனம் எந்த நிலைமையில் இருக்கிறதோ அதே நிலைமையில் ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது அவர்களுடைய இமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துவதே நல்லது.
இப்போது சென்னையில் பெரும்பாலான கார், பைக் மழை நீரினால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழை நீரினால் கார், பைக் பாதிப்படைந்துள்ளது என்ற காரணத்தினால் க்ளெய்ம் வழங்குவார்கள்.

இமெயில் அனுப்புங்க

ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தொடர்பு கொள்ளக்கூடிய போன் நம்பர் இருக்கும். அந்த நம்பரில் தொடர்பு கொண்டு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து தெரியப்படுத்துங்கள் அல்லது அந்த நிறுவனத்தின் பொதுவான இமெயில் ஐடி-க்கு தெரியப்படுத்தலாம்.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடுகளைக்கோர எழுதித்தான் தர வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. இப்பொழுது உள்ள வசதிக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செல்போன் நம்பருக்கே வாட்ஸ்அப் மூலமாக பாதிக்கப்பட்ட வாகனத்தை போட்டோ எடுத்து தெரியப்படுத்தலாம். வீடு பழுதடைந்து இருந்தாலும் அதையும் ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

வெளியே பாதிப்படைந்தால்?

வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டாலும் க்ளெய்ம் கிடைக்கும்.
வாகனம் வீட்டில் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே க்ளெய்ம், வேறு ஏதாவது ஒரு இடத்தில் மழை நீர் அல்லது வெள்ளத்தால் பாதிப்படைந்து இருந்தால் க்ளெய்ம் கிடையாது அப்படி எதுவும் இல்லை. வாகனம் பாதிப்படைந்ததற்கு மூலக்காரணம் எது என்று ஆராய்ந்து சரியான காரணமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் வழங்குவார்கள்.

ஸ்பாட் போட்டோ

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து  இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்திய பின்னர், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுடைய வாகனம் எங்கு உள்ளதோ அந்த இடத்திற்கே சென்று அந்த நிறுவனத்தின் சர்வேயர் பார்வையிடுவார்.
இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-க்காக வாகன விபத்தின்போது 'ஸ்பாட் போட்டோ' எடுப்பார்கள். அதேபோல் மழைநீரில் பாதிக்கப்பட்ட வாகனத்தை ஒரு ஸ்பாட் போட்டோ எடுத்து வைப்பது நல்லது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் ஸ்பாட் போட்டோ மற்றும் பாதிப்பை ஆராய்ந்து பாதிப்படைந்தவர்களுக்கு க்ளெய்ம் வழங்குவார்கள்.

டோயிங் சார்ஜ்

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ஆனது மழை வெள்ளத்தில் வாகனத்தின் பாதிப்பு மற்றும் தேய்மானத்தைப் பொறுத்து  வழங்குவார்கள். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் டோயிங் சார்ஜ்-ம் கிடைக்கும். அதாவது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் பாதிப்படைந்த வாகனத்தைப் பார்த்து அதை எடுத்து செல்வதற்கான செலவும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் கிடைக்கும்.

பாலிசிதாரரின் கடமை

சென்னையில் சில இடங்களில் வெள்ளம் வடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனாலும் பாதிப்பு இருக்கும்போதே பாதிக்கப்பட்டவர்கள் கார், பைக் அல்லது வீட்டின் தற்போதைய நிலைமையை ஒரு போட்டோவாக எடுத்து வைத்திருங்கள்.
தண்ணீரில் மூழ்கி இருக்கும் வாகனத்தை, தண்ணீர் வடிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஸ்டார்ட் செய்தால் க்ளெய்ம் கிடைக்காது. ஆகையால் வாகனத்தை இயக்காமல் இருப்பதே நல்லது. க்ளெய்ம்-க்கு அடிப்படையே எதிர்பாரத செயலாக இருக்க வேண்டும் என்பதுதான்.

உடனே அணுகுங்க

க்ளெய்ம் பெற பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுக வேண்டும் என்று தெரிவித்து இருப்பார்கள். ஆனால், இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உடனே அணுக முடியாது.
ஆகையால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு இமெயில் அனுப்பினாலே போதும். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்குவதற்கு உதவிகரமாக ஒரு போட்டோ இருந்தாலே போதும். வேறு எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை. அதற்காக  காலம் கடத்தக் கூடாது. உடனடியாக இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கோருவதே நல்லது  என்று திருமலை கூறினார்.


8. சுகாதாரத்தின் அடிப்படை கழிவறைகள். அதனால் வீட்டில் குடியேறியவுடன் கழிவறையை உடனே உபயோகிக்காமல் பளீச்சிங் பவுடர் மற்றும் ஆசிட் கொண்டு ஓரிருமுறை கழுவி சுத்தம் செய்தபின் உபயோகிப்பது நல்லது.

9. வீட்டிலிருந்து வெளியேறியதற்கு முன்பு சமையலுக்கு பயன்படுத்தி வந்த சிலிண்டர்கள் நீரில் முழுவதுமாக மூழ்கியிருந்தால் அதை பயன்படுவதை தவிர்க்கவும். சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு தகவல் அளித்து பரிசோதித்தபின்னே பயன்படுத்தவும். முழுமையாக மூழ்காத நிலையில் இருந்தால் அதில் வாயுக் கசிவு இருக்கிறதா என சோதித்தறிந்த பின்னரே பயன்படுத்தவும்.

10. வெள்ளத்தில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு தெரியவந்ததால் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். இதே நம்பிக்கை பாதுகாப்பிற்காக உங்கள் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு, மற்ற பூச்சியினங்களுக்கு எப்போது தெரியவருவது? அதனால் துணிமணிகளை துவைக்கும் முன்பும், உடுத்துவதற்கு முன்னும் அதில் பாம்பு, பல்லிகள் மற்ற சிறுசிறு பூச்சிகள் ஏதேனும் மறைந்திருக்கிறதா என்பதை சோதித்து பார்த்து அணியவும்.

வெள்ளத்திலிருந்து மீண்ட நாம் வேறு எந்த ஆபத்திலும் சிக்காமல் இருக்க கண்டிப்பாக மேற்சொன்ன எச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளகொள்ளவேண்டும்.

வெள்ளத்திலிருந்து மீண்டுவிட்டோம் என மீண்டும் பழைய கதையை தொடராதீர்கள். வெள்ளத்தில் உங்கள் வீடு சிக்கியதில் உங்களது தவறு ஏதாவது உள்ளதா என்று ஆராயுங்கள். இனிவருங்காலத்தில் அந்த தவறுகளை செய்யக்கூடாது என வீட்டிற்குள் நுழைந்த முதல்நாளே முடிவெடுங்கள்.  இல்லையேல்.. மறுபடியும் ஒருமுறை இதை நீங்கள் படிக்கநேரிடும்...

0 comments:

Post a Comment